மாப்பிள்ளை நான்தான் ஆனா சட்டை அமித்சாவுடையது – பரிதாப எடப்பாடி

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.வேட்புமனு தாக்கல் மார்ச் 30 ஆம் தேதி தொடங்குகிறது.இந்நிலையில் கூட்டணி அமைப்பது, வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் வேகம் காட்டி வருகின்றன.

தேசிய சனநாயகக் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் அதிமுக மற்றும் பாஜவுக்கு இடையே தொகுதிகளை பிரித்துக் கொள்வதில் கடும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.இதுகுறித்து எடப்பாடி பலமுறை டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த பிறகும் இன்னும் இழுபறி நிலையே நீடிக்கிறது.

இந்நிலையில் நேற்றிரவு ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். அப்போது தொகுதிப் பங்கீடு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.அதைத் தொடர்ந்து இன்று காலையில் டெல்லி விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது….

தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நாளை தொடங்கும்.தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்காக நாளை பியூஷ்கோயல் சென்னை வருகிறார்.தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை.கூட்டணியில், தொகுதிப்பங்கீட்டில் எந்தச் சிக்கலும் இல்லை.
4 நாட்களில் அனைத்தும் தெரியும்.4 நாட்களில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை முடிந்து யார் யார் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது என அறிவிக்கப்படும்.தமிழக வெற்றிக் கழகத்துடன் நாங்களோ அல்லது அவர்கள் எங்களுடனோ கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.அதிமுகவுடன் சேரவேண்டிய கட்சிகள் சேர்ந்துவிட்டன. இனி புதியகட்சிகள் சேர வாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி இப்படிச் சொன்னாலும், எடப்பாடி பழனிச்சாமியைத் தொடர்ந்து டிடிவி தினகரன், அன்புமணி ஆகியோர் நாளை டெல்லி செல்கின்றனர்.கூட்டணிக்குத் தலைமை நான்தான் என்று எடப்பாடி திரும்பத் திரும்பச் சொன்னாலும் இப்போது அன்புமணி.டிடிவி.தினகரன் உள்ளிட்டோரும் டெல்லி செல்வது முரணாக உள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ரஜினியின் படையப்பா படத்தில் இடம்பெற்றுள்ள, மாப்பிள்ளை இவருதான் ஆனா சட்டை என்னோடது என்கிற வசனத்தைப் போட்டு கிண்டல் செய்கின்றனர்.

Leave a Response