தேர்தல் அறிக்கையில் சீமானும் இலவசம் அறிவித்தார் – அது என்ன?

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை நாம் தமிழர் கட்சி நேற்று சென்னையில் வெளியிட்டது.அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வரும் சீமான் நேற்று 49 தலைப்புகளில் 462 பக்கத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அவற்றில் முக்கியமானவை….

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட ஐந்து தலைநகரங்கள் உருவாக்கப்படும்.
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிகளில் பெண்களுக்கு தனித்தொகுதிகள் பெற நடவடிக்கை.
மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு நாடாளுமன்றத்தொகுதி என மாற்ற ஒன்றியஅரசை வலியுறுத்துவோம்.
நீதிமன்றங்களில் தமிழை அலுவல்மொழியாக ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
படிப்படியாக ஓராண்டிற்குள் மதுக்கடைகள் மூடப்படும்.
படித்தவர்கள் படிக்காதவர்கள் என அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படும்.
மாணவர்களின் கல்விக்கடன்கள் முற்றிலும் இரத்து செய்யப்படும்.
நாம் தமிழர் அரசு மணற்கொள்ளையை தனிப்படைகளை அமைத்து முற்றுமுழுதாகத் தடுக்கும்.
வேதிப்பொருட்களாலான உரங்களைக் கொண்டு செய்யப்படும் வேளாண்மையை முற்றிலுமாகத் தடை செய்து, இயற்கை வேளாண்மையை மீட்டெடுப்பதே நமது அரசின் முதல்கடமை.
தமிழ்நாடு அரசின் அனைத்துத்துறைகளிலும் பெண்களுக்கு சரிபாதி வேலைவாய்ப்புகள் அளிக்கப்படும்.
பாலியல் வன்புணர்வுக் குற்றத்தில் ஈடுபட்டு குற்றம் உறுதி செய்யப்பட்டவருக்கு மரணதண்டனை கொடுக்க வேண்டும்.இதைத் தவிர வேறு எவருக்கும் மரணதண்டனை கிடையாது என சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்.
மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்றிருக்கின்ற அனைத்துக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனி அமைச்சகம் மற்றும் தனி அமைச்சர் உருவாக்கப்படும்.
தமிழ்நாட்டின் அனைத்து உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடப்பங்கீட்டில் 5% மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்படும்.
வேளாண்மையை அரசுப்பணியாக அறிவித்து,உழவர்களை அரசு ஊழியர்களாக மாற்றும்.
வேதிஉரங்கள் நாம் தமிழர் ஆட்சியில் முழுமையாகத் தடை செய்யப்பட்டு,அதற்கு மாற்றாக இயற்கை உரங்களைப் பயன்படுத்த மற்றும் உருவாக்க உழவர்கள் பயிற்றுவிக்கப்படுவர்.
கச்சத்தீவு ஒப்பந்தம் நீக்கப்பட்டு,நமது மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு மீனவர்களைப் பாதுகாப்பதற்காக தனியே ஒரு சிறப்புக் கடலோர காவல்படை, “நெய்தல் படை” என்ற பெயரில் உருவாக்கப்படும்.
தூய்மைப் பணிக்கு உயர்ந்த ஊதியம் அளிக்கப்படும்
ஆணவப்படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்படும்.
ஒன்றியஅரசின் பட்டியலில் உள்ள உயர்கல்வியை மாநிலஅரசின் பட்டியலுக்கு மாற்றும் உரிமை வலியுறுத்திப் பெறப்படும்.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளுக்கு எந்தவகையான தேசிய நுழைவுத் தேர்வும் அனுமதிக்கப்படாது.
பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும்.

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது…..

நாம் தமிழர் கட்சிக்கு ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும். நிர்வாகத் தலைநகராக திருச்சியும்,தொழில்நுட்பத் தலைநகராக சென்னையும், தொழில் வணிகத் தலைநகராக கோவையும், மொழி பண்பாட்டு தலைநகராக மதுரையும், தமிழர் மெய்யியல் தலைநகராக கன்னியாகுமரியும் செயல்படும்.தலைமைச் செயலகம், சட்டப்பேரவை திருச்சிக்கு மாற்றப்படும். அரசு முத்திரை, தமிழ்த்தாய் வாழ்த்து மாற்றப்படும். தன்னலமற்ற, அன்பான, சர்வாதிகார ஆட்சிமுறை நடத்தப்படும்.

ஆரம்பக் கல்வி முதல் பிஎச்டி வரை அனைவருக்கும் கல்வி இலவசமாக வழங்கப்படும்.
பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கிடையாது.தமிழ் பயிற்று மொழியாகவும்,ஆங்கிலம் கட்டாயப் பாடமாக பயிற்றுவிக்கப்படும்.ஒரு மொழிக் கொள்கை பின்பற்றப்படும்.அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படும்.

மாநிலத்தில் பெறப்படும் வரிகளில் மாநில அரசுக்கு 75 விழுக்காடும், ஒன்றிய அரசுக்கு 25 விழுக்காடும் என பிரிக்கப்படும். குடிநீர் விற்பனை தடை செய்யப்பட்டு, அனைவருக்கும் தூயகுடிநீர் கட்டணமின்றி வழங்கப்படும். வேளாண்மை,ஆடு,மாடு வளர்த்தல் போன்றவை அரசு வேலையாக அறிவிக்கப்படும்.பலகோடி பனைத்திட்டம் செயல்படுத்தப்படும்.ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.தமிழ்வழி மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும்.திருநங்கை,திருநம்பிகளுக்கு தனிமருத்துவனை திருச்சியில் அமைக்கப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்பட்டு, உள்ளாட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை, நாடளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய அனைவருமே அரசு மருத்துவமனைகளில்தான் மருத்துவம் செய்யவேண்டும்,அவர்களது குழந்தைகள் அரசுப் பள்ளிகளில்தான் படிக்கவேண்டும் என சட்டம் இயற்றப்படும்.
விளையாட்டுத் துறையில் பெண்களுக்கு சமவாய்ப்பு, அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு சரிபாதி வேலைவாய்ப்பு, தமிழ்குடிகளுக்கு இடஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படும்.

பாலியல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை, மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி, சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை, மணல் கொள்ளையைத் தடுக்க தனிப்படை, முழுமையான பூரண மதுவிலக்கு, உழவர்களே உணவுப் பொருட்களுக்கு விலை தீர்மானிக்கும் உரிமை போன்ற பல்வேறு வாக்குறுதிகளை நாங்கள் அளித்திருக்கிறோம்.

நாங்கள் வெட்டிப் பேச்சு பேசுபவர்கள் அல்ல. நாங்கள் மெதுவாக வந்தாலும் எல்லோருக்கும் பொதுவாக வருவோம். ஆனால் பின்னோக்கிச் செல்லமாட்டோம். நல்ல அரசை அமைப்போம்.இந்த அறிக்கையில் உள்ளவை எல்லாம் எங்கள் கனவுகள்.இதில் உள்ளவை எல்லாம் செய்யமுடியாதவை இல்லை.இவையெல்லாம் உலகநாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.ஆட்சிமுறையை மாற்றவேண்டும் என நாங்கள் பயணிக்கிறோம்

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response