சசிகலாவுக்கு தூதுவிடும் பாஜக – விழிபிதுங்கும் எடப்பாடி

2021 சட்டமன்றத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களிலும் அமைதி காத்த சசிகலா, இம்முறை, தனது ஆதரவாளர்களைத் திரட்டி இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பொதுக்கூட்டத்தை நடத்தி தனது கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தினார். விரைவில் கட்சியின் பெயரை அறிவிக்கப்போவதாகவும் கூறினார்.

ஜெயலலிதான் பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் தேதி, கட்சியின் கொடியை அறிமுகம் செய்துவைத்த சசிகலா, 10 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை கட்சியின் பெயரை அறிவிக்கவில்லை.

இந்த இடைப்பட்ட காலத்தில் சசிகலா முன்பே கூறியதைப்போல அவருக்கு சிக்கல் வந்துவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.அதிமுக தரப்பிலிருந்து மற்றொரு அரசியல் கட்சி துவங்கினால்,தேர்தலின்போது பாதிப்பை ஏற்படுத்தும்.தேவையில்லாத சிரமங்களை உருவாக்கும் என எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷாவிடம் புலம்பியுள்ளார்.

இதையடுத்து அமித்ஷா தரப்பு, சசிகலாவை தொடர்பு கொண்டு பேசிவருவதாகச் சொல்லப்படுகிறது. சில நேரங்களில் அன்பாகவும், சில நேரங்களில் மிரட்டும் தொனியிலும் பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கிறதாம். பாஜக தரப்பிலிருந்து சசிகலாவிடம்,ஏற்கனவே அதிமுகவில் ஓபிஎஸ் இருந்ததைப்போல ஒருங்கிணைப்பாளர் பதவி அல்லது அதற்கு இணையான பதவியை பெற்றுத் தருவதாகவும்,கட்சியின் சார்பில் தேர்தல் பி படிவத்தில் கையெழுத்திடுவதைப் போன்ற அதிகாரத்தைப் பெற்றுத் தருவதாகவும்,அங்கீகாரமான பதவியுடன் தங்கள் தரப்பிற்கு 10 தொகுதிகள்வரை கூட்டணியில் கிடைக்கும் எனக் கூறியுள்ளனர்.

பாஜக தரப்பின் இந்த யோசனையை இதுவரை சசிகலா ஏற்கவில்லையாம்.அதேநேரம், இப்போது என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளாராம் சசிகலா.

சசிகலாவின் கமுதி பொதுக்கூட்டத்துக்குப் பிறகு எடப்பாடி அதிமுகவில் சத்தமில்லாமல் பெரும் பிரளயம் நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதனால் திகைத்துப் போயிருக்கும் பாஜக, எப்படியாவது சசிகலாவை அமைதிப்படுத்த வேண்டும் என்று தீவிர முயற்சியில் இறங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சசிகலா விசயத்தில் இதுவரை பிடிவாதம் காட்டி வந்த எடப்பாடி பழனிச்சாம்,சசிகலாவின் அதிரடி முடிவுக்குப் பிறகு எக்குத்தப்பாக மாட்டிக்கொண்டு விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறார் என்று அவருடைய ஆதரவாளர்களே கூறிக் கொண்டிருக்கின்றனர்.

Leave a Response