
தமிழ்நாட்டில் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி உள்பட 7 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் (25 ஆம் தேதி) காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். 1.30 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் தயாராக இருந்த தனி விமானத்தில் புதுச்சேரி புறப்பட்டுச் சென்றனர். புதுச்சேரியில் நேற்று மாலை தேர்தல் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் குழுவினர் நேற்று மதியம் 12 மணிக்கு தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.
அப்போது தேர்தலைப் பாதுகாப்பாக நடத்துவது, எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்தலாம் என்பது குறித்து தேர்தல் ஆணையர்கள் கேட்டறிந்தனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க திமுக, அதிமுக, காங்கிரசு, பாஜக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச்சிறுத்தைகள், தேமுதிக, நாம் தமிழர் மற்றும் ஆம்ஆத்மி உள்ளிட்ட 6 தேசியக் கட்சிகள் என 12 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
அதன்படி ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்இளங்கோ (திமுக), ஜெயக்குமார், இன்பதுரை (அதிமுக), தங்கபாலு, ராம்மோகன் (காங்கிரசு), கராத்தே தியாகராஜன் (பாஜக), இரவிக்குமார், குணவழகன் (விசிக), ஆறுமுகநயினார், சண்முகம் (மார்க்சிஸ்ட்), நல்லதம்பி, ஜனார்த்தனன் (தேமுதிக), சீமான், பாக்கியராசன் (நாம் தமிழர்), ஆனந்தன் (பகுஜன் சமாஜ் கட்சி), ஜோசப்ராஜா, வசீகரன் (ஆம்ஆத்மி), சீனிவாசன், அசோக்சாமி (தேசிய மக்கள் கட்சி) உள்ளிட்ட அனைத்துக்கட்சி நிர்வாகிகள், கட்சி வாரியாக தனித்தனியாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மற்றும் தேர்தல் அதிகாரிகளைச் சந்தித்தனர். இந்த ஆலோசனை மதியம் 2.30 மணி வரை நடந்தது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டப் பிரிவுச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ பாமஉ அளித்த மனுவில்….
அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனும் வயது குழு விவரங்கள் உட்பட சீரான, தரப்படுத்தப்பட்ட பட்டியலைப் பகிர்ந்து கொள்ளவும், பொதுமக்களின் தகவலுக்காக அதை வெளியிடவேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அனைத்து டிஇஓக்களுக்கும் ஆணையம் உத்தரவிட வேண்டும்.வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில், பெயர்கள் மற்றும் பிற விவரங்கள் கணக்கெடுப்பு படிவங்களின்படி முறையாகப் பதிவு செய்யப்படவில்லை, மேலும் பழைய வாக்காளர் அடையாள அட்டை விவரங்கள் தொடர்ந்து குறிப்பிடப்படுகின்றன. அதை உரிய நேரத்தில் சரி செய்யவேண்டும்.
அரசியல் கட்சிகள் ஒவ்வொரு ஊடக விளம்பரத்திற்கும் ஒப்புதல் பெறவேண்டும்.விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் ஒப்புதல்கள் அல்லது உத்தரவுகளை வழங்க எம்சிஎம்சி ஒப்புதல் குழுக்களுக்கு பொருத்தமான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும்.நட்சத்திர பேச்சாளர்களைப் பொறுத்தவரை, அவர்களின் கூட்டங்கள், சாலை நிகழ்ச்சிகள் மற்றும் வாகனங்களுக்கான அனுமதிகளை தலைமை நிர்வாக அதிகாரி, டிஜிபி அலுவலகம் சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து வழங்கலாம் என்ற அறிவிப்புகளை வெளியிடலாம்.வாக்குப்பதிவு முடிந்த 24 மணி நேரத்திற்குள் படிவம் 17சி தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் இந்திய தலைமை தேர்தல்ஆணையரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது….
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்தல்கள் தொடர்ச்சியாக ஒரேகட்டமாக, அதுவும் பெரும்பாலும் தேசிய கால அட்டவணையின் முதல்கட்டத்திலேயே நடத்தப்படுகின்றன.இதன் விளைவாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை நாள் வரை மிக நீண்ட காலத்திற்கு (கடந்தமுறை சுமார் 42 நாட்கள்) பாதுகாப்பு அறைகளில் வைக்கப்படுகின்றன.இந்த இயந்திரங்களின் நீண்டகாலப் பாதுகாப்பில் எங்களுக்கு போதிய நம்பிக்கை இல்லை.வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் காலத்தைக் குறைக்க,தேசிய தேர்தல் அட்டவணையின் இறுதிக் கட்டத்தில் தேர்தலை நடத்தவேண்டும்.
எங்களைப் போன்ற வளர்ந்து வரும் கட்சிக்கு,தமிழ்நாட்டின் 234 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் தொகுதிகளில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி,எங்கள் தேர்தல் அறிக்கையை மக்களிடம் கொண்டு செல்வது 20 நாட்களுக்குள் என்பது ஒரு மிகப்பெரிய சவாலாகும்.ஒரு முழுமையான பரப்புரைக்கு 60 நாட்கள் தேவை என்றாலும், குறைந்தபட்சம் 40 நாட்களைக் கட்டாய பரப்புரைக் காலமாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


