தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 27 ஆம் ஆண்டு நினைவு வணக்கம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் உணர்வுபூர்வமாகக் கடைபிடிக்கப்பட்டது.
பல்கலைக்கழக வளாகத்திற்குள் திலீபனின் நினைவு தின துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டும், பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் திலீபனின் உருவப்படம் வைக்கப்பட்டு நண்பகல் 1 மணியளவில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டும், தீபங்கள் ஏற்றியும் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டுள்ளது.
1987 ஆம் ஆண்டு ஈழத்தமிழர் விடுதலைக்காக 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் சொட்டுநீரும் அருந்தாமல் உண்ணா விரதமிருந்து ஈகச்சாவடைந்த தியாக தீபம் திலீபனின் நினைவு நாள் இன்றைய தினம் உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்டிருக்கிறது. யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள புதிய கட்டடத் தொகுதியில் ஒன்று கூடிய மாணவர்கள் திலீபனின் உருவப்படத்திற்கு தீபங்கள் ஏற்றியும், மலர்கள் தூவியும் தமது வணக்கத்தைச் செலுத்தினர்.


