100 கிமி வேகத்தில் புயல் – வானிலை மையம் எச்சரிக்கை

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் இயல்பை விட 12 சதவீதம் அதிகம் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. ஆனால் இதுவரை எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. தென் மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்து உள்ளது. ஆனால் வடமாவட்டங்களில் மழை பெய்யாததால் வறட்சி நிலவுகிறது.

இந்த நிலையில் அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து இருப்பதாகவும், அது புயலாக மாற இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது….

அந்தமான் கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து இருக்கிறது. அது, நவம்பர் 10 ஆம் தேதி மாலை தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதியில் போர்ட்பிளேர் நகருக்கு வடமேற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டு இருந்தது. அதாவது சென்னையில் இருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கே 1,340 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு இருந்தது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவம்பர் 11 அன்று தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மாலை 5.30 மணி அளவில் புயலாக மாறுகிறது. அப்போது 75 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும். நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு தீவிர புயல் சின்னமாக மாறும். அந்த சமயத்தில் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.

அதன் பிறகு, அந்த புயல் 14-ந் தேதியன்று (புதன்கிழமை) வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி நகரும்.

இதன் காரணமாக 14-ந் தேதி மாலையில் இருந்து வட கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். அதன்பிறகு உள்மாவட்டங்களில் மழை இருக்கும்.

புயல் கரையை நெருங்கும் போது 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

எனவே ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் 12-ந் தேதி (நாளை) இரவுக்குள் கரை திரும்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே குமரி கடல், இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருக்கிறது. அது மாலத்தீவு, குமரி கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response