
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்தடுத்து வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இதனால், நீலகிரி, ஈரோடு, கோவை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல் உட்பட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு….
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடக்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 5.30 மணியளவில் வலுவிழந்து
காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நீடித்தது. தொடர்ந்து சென்னைக்கு கிழக்கு – தென் கிழக்கே சுமார் 40 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு வடகிழக்கே 120 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது. இது தென்மேற்கு திசையில் வடதமிழகம் – புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்
பகுதியாக வலுகுறையக் கூடும். மேலும், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலு குறையும்.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், நாமக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கிறது.
வானிலை அறிக்கை இப்படிச் சொன்னாலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இடி மின்னலும் சேர்ந்திருக்கிறது.புயலாகத் தொடங்கி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் நேரத்திலும் தமிழ்நாட்டில் சுமார் 22 மாவட்டங்களில் மழையையும் சூறாவளிக் காற்றையும் வீசிச் செல்கிறது டிட்வா புயல்.


