
2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. அதன் பின்னர் கட்சியை தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விரும்பிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக பொதுச் செயலாளர் பதவியை உருவாக்கி, அந்தப் பதவியைக் கைப்பற்றினார். எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கினார். அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம் உள்ளிட்ட சிலரும், 4 சமஉக்களும் ஆதரவு தெரிவித்தனர்.அவர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது முதல் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று ஓபிஎஸ் குரல் கொடுத்து வருகிறார். பாஜக ஆதரவுடன் கடந்த மக்களவைத் தேர்தலில் இராமநாதபுரத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இப்போது அதிமுக, பாஜக கூட்டணி ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ஒதுக்கி வைக்கப்பட்டார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழ்நாடு வரும்போது சந்திக்க நேரம் கேட்டபோது எல்லாம் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனால் ஜூலை மாதம் அவர் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டதாக அறிவித்தார்.
ஆனாலும், அதிமுகவில் தங்களை சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று கூறி வந்தார். அதே கோரிக்கையை தெரிவித்த செங்கோட்டையன், கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதால், தவெகவில் சேர்ந்து விட்டார்.
இந்தநிலையில், கடந்த வாரம் சென்னையில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், வருகிற 15 ஆம் தேதி வரை எடப்பாடி பழனிச்சாமிக்குக் கெடு விதித்தார். அதற்குள் தன்னை கட்சியில் சேர்க்கவேண்டும். இல்லாவிட்டால் அதிரடி முடிவுகளை எடுப்பேன் என்றார்.
இதனால் அவர் புதிய கட்சியைத் தொடங்கி, தவெக கூட்டணிக்குச் செல்வதைத்தான் குறிப்பிடுகிறார் என்று கூறப்பட்டு வந்தது.
இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வம் நேற்று பிற்பகலில் திடீரென்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அமித்ஷாவிடம், அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்ள நீங்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் தான் தனிக்கட்சி தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவிப்பதற்காக புறப்பட்டுச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
அமித்ஷாவின் அனுமதி கிடைக்காவிட்டாலோ, சாதகமான பதில் கிடைக்காவிட்டாலோ, புதிய கட்சியை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை டெல்லியில் செய்து விட்டுத்தான் திரும்புவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
ஓபிஎஸ் டெல்லி சென்றிருப்பது, மீண்டும் தேசிய சனநாயகக் கூட்டணியில் சேருவதற்கா? அல்லது தனிக்கட்சியைப் பதிவு செய்வதற்கா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.


