தமிழனுக்கு அநீதி இழைக்கும் எவருக்கும் நம் மண்ணில் இடமில்லை – சென்னையில் ஓங்கி ஒலித்த போர்க்குரல்

தமிழகத்தின் பெரியாரிய , தலித்திய, தமிழ்த்தேசிய மற்றும் முற்போக்கு இயக்கங்கள் ஒன்று கூடி , பெங்களூரில் தமிழர்கள் மீது வெறியாட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ் கும்பலை அம்பலப்படுத்தும் விதமாக முற்றுகைப் போராட்டத்தினை அறிவித்திருந்தார்கள்.

கன்னடவெறியாட்டத்தின் பின்னால் இருந்து கொண்டு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த அனைத்து கட்டமைப்பு ஏற்பாடுகளையும் ஆர்.எஸ்.எஸ் செய்தது என்கிற குற்றச்சாட்டுகளும், செய்திகளும் வெளியாகிற தருணத்தில் தமிழரை தாக்கி அழிக்க முற்பட்ட ஆர்.எஸ்.எஸ் தமிழகத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென்கிற முழக்கத்தோடு அனைத்து இயக்கங்களும் கைகோர்த்திருக்கின்றன.

ஸ்வாதி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமாரின் மரணத்தின் பின்புறம் இயங்கிக்கொண்டிருக்கும் இந்துத்துவ-ஆர்.எஸ்.எஸ் ஆகியவற்றின் சதிவேலைகள் மிக மிக ஆபத்தானவை.

தமிழ் மக்களிடையே பிளவினையும், உழைக்கும் மக்களிடையே முரணையும் வளர்த்தெடுத்து தனது அரசியல் இலாபத்தினை பெருக்கிக்கொள்ளும் இந்திய அரசின் கள்ள முகமூடியாக இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ். விளங்குகிறது.
தமிழகத்தின் சொத்துகளையெல்லாம் மார்வாடிக்கு தாரைவாத்துவிட்ட இந்திய அரசும், தமிழர்களின் சொத்துக்களையெல்லாம் தேடித்தேடி பெங்களூரில் அழித்த இந்துத்துவ கன்னாடகவெறியையும் இணைத்தே பார்க்க வேண்டும்.

தமிழர்கள் மீது வெறியாட்டம் நடத்திய ஆர். எஸ்.எஸ் கும்பலுக்கு தமிழத்தில் என்ன வேலை என்று கேட்டு இம்முற்றுகைப்போராட்டத்தினை நடத்தி இருக்கிறார்கள். தமிழனுக்கு அநீதி இழைத்த எவருக்கும் நம் மண்ணில் இடமில்லை என ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப் போராட்டத்தின் போது ஆர் எஸ் எஸ்சின் கொடி எரிக்கப்பட்டது.

எடியூரப்பா, எச். ராசா சதானந்த கவுடா, மோகன் பகவத் ஆகியோர் படம் செருப்பால் அடிக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது. போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள், – இது தமிழ் நாடு ஆர். எஸ். எஸ் வெளியேறு, எங்கள் மண் பெரியார் மண் – என்றும் முழக்கமிட்டனர். இந்த போராட்டத்தில் நாகை திருவள்ளுவன் குடந்தை அரசன், கோவை ராமகிருஸ்ணன், கொளத்துர் மணி, அரங்ககுணசேகரன், திருமுருகன் காந்தி உட்பட 600க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Response