அறிவுசார் ஈழ அரசியல் பேசும் நூல் நிகழ்ச்சியில் ஈழத்துக்கு எதிரானவர் கலந்துகொள்வதா? – உணர்வாளர்கள் எதிர்ப்பு

இந்திய ஆதிக்கம் பற்றிய நீண்ட வரலாற்று அச்சம் காரணமாக இந்திய எதிர்ப்பு உணர்வை சிங்கள மக்கள் இயல்பாகவே கொண்டுள்ளனர்.அவர்கள் ஈழத் தமிழரை மொழி,மத அடிப்படையில் இந்தியாவுடன் இணைத்துப் பார்ப்பதனால் இந்தியாவிற்கு எதிரான தமது யுத்தத்தை ஈழத் தமிழர் மீது புரிந்து வருகின்றனர்.

இந்தியாவிற்கு அருகே இந்துமாக்கடலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தை இலங்கைத் தீவு கொண்டுள்ள நிலையில் இந்தியாவின் பகைமை நாடுகள் இலங்கை அரசின் நட்பைப் பெறுவதற்காகவும்,கேந்திர நலனை அடைவதற்காகவும் தமிழருக்கு எதிரான இலங்கை அரசின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்குகின்றன.

சிங்கள மக்களின் இந்திய எதிர்ப்புவாதமும்,அந்நிய நாடுகளின் இந்திய எதிர்ப்பு நிலைப்பாடுகளும்,அவற்றின் கேந்திர நலன்களும் ஒன்றாக இணைந்து ஈழத் தமிழர்களை படுகுழியில் தள்ளி வருகின்றன.

இறுதி அர்த்தத்தில் ஈழத் தமிழரின் வீழ்ச்சியின் மூலமே இலங்கையில் இந்தியாவின் வீழ்ச்சியை நிர்ணயிக்கலாம் என்ற சிங்கள இராஜதந்திரிகளின் நீண்டகால அரசியல் நோக்கிற்கு ஈழத்தமிழர்களே அனைத்து வழிகளிலும் பலியாகின்றன.இதன்படி ஈழத் தமிழரின் வீழ்ச்சி இந்தியாவின் வீழ்ச்சியாகவும் அமைகிறது.

என்கிற கருத்தை மையமாகக் கொண்டு ஆய்வறிஞர் மு.திருநாவுக்கரசு எழுதிய யாப்பு எனும் நூல் வெளியீட்டுவிழா செப்டம்பர் 24 அன்று சென்னையில் நடக்கவுள்ளது. அந் நிகழ்வில் இந்திய இராணுவத்தில் பணியாற்றிய கர்னல்ஹரிஹரன் பங்கேற்கவிருக்கிறார்.

இதற்கு தமிழின உணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நிகழ்ச்சியை நடத்தும் ஆகுதி பதிப்பகத்துக்கு வழக்கறிஞர் ப.அமர்நாத் எழுதியுள்ள கடிதத்தில்,

ஆகுதி பதிப்பக நண்பர்களுக்கு,
“ஈழத்து முதுபெரும் ஆய்வறிஞர் ” ஐயா மு.திருநாவுக்கரசு அவர்களின் நூலான ” யாப்பு ” அரசியல் ஆய்வு நூல் உலகில் பல்வேறு நாடுகளில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

மேலும் இன்றைய ஈழ அரசியல் நிலையில் மாறுபட்ட நோக்கில் சிந்திக்கத்தூண்டும் வகையில் ” புவிசார் அரசியலை” மையப்படுத்தி , ஈழ அரசியலை அறிவுசார் நிலையில் அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி கொண்டுசெல்லும் பல்வேறு வேலைகளில் , அறிஞர் மு.திருநாவுக்கரசு அவர்களின் பங்களிப்பு அளப்பரியது என்பது தாங்கள் அறிந்ததே!

இத்தகைய சூழலில்,
தாங்கள் ” யாப்பு ” ஆய்வுநூலை வெளியிட முன்வந்தமை மகிழ்வளிக்கக்கூடியதே.

ஆனால், தாங்கள் இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் , ஈழ அரசியல் நிலைக்கு முற்றிலும் எதிர்நிலையில் உள்ள நபரான ” கர்னல் ஹரிகரன்” அவர்களை அழைத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதுபெரும் ஆய்வறிஞர் மு. திருநாவுக்கரசு அவர்களின் ஈழ விடுதலைக்கான அளப்பரிய பங்களிப்பையும், விடுதலை இயக்கத்தோடு பயணித்து அவர் செய்த தியாகத்தையும் , இன்றுவரை வாழ்வியல் இன்னல்கள் ஊடாக அறிவுசார் வட்டத்தில் அவர் ஆற்றிவரும் பணியையும் கொச்சைப்படுத்தும் நோக்கத்துடன், மேலும் ஈழ அரசியல் நிலை தேக்கத்தை உடைத்தெறிய அவர் மேற்கொள்ளும் கருத்தியல் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் நடவடிக்கையாகவும் தங்களின் நிகழ்வு அமைந்துவிடுமோ என்ற அச்சத்தை உலகத்தமிழரிடையே ஏற்படுத்தி இருக்கிறது.

எனவே தங்களின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நிரலில் ” கர்னல் ஹரிகரன்” அவர்களை அழைக்கும் திட்டத்தை கைவிட்டு உதவ வேண்டுகிறோம். நன்றி!

இப்படிக்கு,
வழக்கறிஞர் ப.அமர்நாத்,
ஆசிரியர் – அறிவாயுதம்.

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Response