செம்மொழித்தமிழ் உயராய்வு மையத்தை மூடுவதா? -தமுஎகச கண்டனம்


செம்மொழித்தமிழ் உயராய்வு
மையத்தை மூடும் மத்திய அரசு!

தமுஎகச கண்டணம்

சென்னையில் இயங்கி வரும் மத்திய அரசு அமைப்பான செம்மொழித் தமிழ் உயராய்வு. மையத்தை மூடிவிட்டு அதை திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதே போல இந்தியாவின் பல மொழிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள 76 மொழி உயராய்வு நிறுவனங்களை மூடி ஆங்காங்கு உள்ள பல்கலைக்கழகங்களுடன் இணைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்தி,சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளுக்கான உயராய்வு நிறுவனங்கள் மட்டும் இப்போதிருக்கும் தன்னாட்சி உரிமையுடன் தொடர்ந்து இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமுஎகச தலைவர் ச.தமிழ்ச்செல்வன்,பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :

மத்திய அரசின் இந்த முடிவு இந்தி,சமஸ்கிருதத்திணிப்பு என்கிற ஆர்.எஸ்.எஸ்ஸின் நிகழ்ச்சி நிரலை அமலாக்கும் செயல் என்று தமுஎகச கருதுகிறது.அனைத்து மொழிகளின் சமத்துவத்துக்கு எதிராக மத்திய அரசு திட்டமிட்ட முறையில் எடுத்து வைத்திருக்கும் ஜனநாயகவிரோத நடவடிக்கையாகும்.சமஸ்கிருதத்தோடு எந்தத் தொடர்புமற்றுத் தனித்தியங்கும் செம்மொழியான தமிழுக்கான உயராய்வு மையம் மூடப்பட்டு அதை ஒரு பல்கலைக்கழகத்தின் ஓரமான குப்பைத்தொட்டியில் போடுவதற்கான முதல் தப்படி இது என்றே தமுஎகச கருதுகிறது.

மைசூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவனத்தின் பகுதியாக இயங்கி வந்த தமிழுக்கான ஆய்வு மையத்தை சென்னைக்குக் கொண்டு வந்தபோது தமிழ் நெஞ்சங்கள் மகிழ்ந்தன.சங்கத்தமிழ் இலக்கியத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க 300 க்கு மேற்பட்ட இடங்களில் கருத்தரங்குகள்,பொது நிகழ்ச்சிகள் நடத்திட செம்மொழி உயராய்வு மையம் உதவியது.பத்துநாட்கள் தமுஎகச படைப்பாளிகளுக்கு சங்க இலக்கிய பயிலரங்கு நடத்திடவும் இம்மையம் உதவியது.பல மொழிசார் ஆய்வுகளுக்கு பரிசும் விருதுகளும் உதவித்தொகையும் வழங்கப்பட்டு வந்தது.

படிப்படியாக இம்மையத்துக்கான நிதியை குறைத்தும் நிறுத்தியும் இயக்குநர் பதவியை நிரப்பாமல் காலியாகவே வைத்தும் சீரழித்த மத்திய அரசு இப்போது நிரந்தரமாகவே மூடும் முடிவை எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.தமிழ்கூறு நல்லுலகில் வாழும் மக்கள் அனைவரும் கொதித்தெழுந்து எதிர்க்க வேண்டிய முடிவு இது.இம்முடிவுக்கு எதிராக உறுதியுடன் போராட முன்வருமாறு எழுத்தாளர்கள்,அறிஞர்கள்,அரசியல் இயக்கங்கள்,தமிழ் அமைப்புகளை தமுஎகச அறைகூவி அழைக்கிறது.

முதல்கட்டமாக,தமுஎகச மாவட்டக்குழுக்கள் “செம்மொழி உயராய்வு மையத்தை மூடாதே.செம்மொழித்தமிழை அவமதிக்காதே “என்கிற வாசகங்களுடன் தட்டிகள்,சுவரொட்டிகள் போன்றவற்றை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். அனைத்துப்பகுதியினரையும் இணைத்துக்கொண்டு எதிர்ப்புக்கூட்டங்கள் நடத்துமாறும் வேண்டுகிறோம்.

Leave a Response