செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை மூடும் திட்டத்தை கை விடவேண்டும்-மருத்துவர் இராமதாசு


செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை
மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு
அறிக்கை விடுத்துள்ளார்.
அவ்வறிக்கையில்…

இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பது அல்லது தமிழை முடக்க முயல்வது ஆகியவற்றையே முதன்மைப் பணியாக கொண்டுள்ள நடுவண் அரசு, இதன் அடுத்தக்கட்டமாக சென்னையில் செயல்பட்டு வரும் செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தை திருவாரூர் நடுவண் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக மாற்ற தீர்மானித்திருக்கிறது. இது செம்மொழி நிறுவனத்தை முடக்கும் செயலாகவே அமையும்.

செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தை ஏதோ ஒரு நிறுவனமாக கருதிவிட முடியாது. 2004-ஆம் ஆண்டு தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சமஸ்கிருதம், தெலுங்கும் கன்னடம், மலையாளம், ஒதியா ஆகிய மொழிகளும் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும், மொழி சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கு வசதியாக தமிழுக்கு மட்டுமே ஆய்வு நிறுவனம் அமைக்கப்பட்டிருக்கிறது. இது தமிழுக்கு கிடைத்த பெரிய அடையாளம் ஆகும். இதை எக்காரணத்திற்காகவும் இழக்க முடியாது.

இந்தியாவில் இந்தி, சமஸ்கிருதம் தவிர்த்த பிற மொழிகள் சார்ந்த நிறுவனங்கள் அனைத்தையும் அந்தந்த மாநிலங்களில் உள்ள நடுவண் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் முயற்சியில் நடுவண் அரசு ஈடுபட்டிருக்கிறது. திட்ட ஆணையத்திற்கு மாற்றாக உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பு தான் இதற்கான பரிந்துரையை நடுவண் அரசுக்கு வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. பொருளாதாரம் சார்ந்த ஆலோசனைகளை வழங்குவதற்கான அமைப்பான நிதி ஆயோக்கிற்கு மொழி சார்ந்த ஆய்வுகளின் முக்கியத்துவம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எதையும் பொருளாதாரக் கண் கொண்டு பார்க்கும் நிதி ஆயோக் அமைப்பு இதையும் அதே கண் கொண்டு பார்த்திருக்கக்கூடும். இது தங்களுக்கு சாதகமாக இருப்பதால் நடுவண் அரசும் இதை செயல்படுத்தத் துடிப்பதாகத் தெரிகிறது. இதை ஏற்க முடியாது.

செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம் என்பது நடுவண் பல்கலைக் கழகத்தை விட உயர்ந்த அமைப்பு ஆகும். தமிழக முதலமைச்சர் தான் இதன் ஆட்சிக்குழுத் தலைவர் என்பதிலிருந்தே இதன் பெருமையை உணர முடியும். இந்நிறுவனத்தை எப்போது வேண்டுமானாலும் நடுவண் பல்கலைக்கழகமாக மாற்ற முடியும். அவ்வாறு மாற்றினால் அது திருவாரூரில் உள்ள நடுவண் பல்கலைக்கழகத்தை விட உயர்ந்த நிலை அமைப்பாக திகழும். அப்படிப்பட்ட அமைப்பை நடுவண் பல்கலைக்கழகத்துடன் இணைப்பது ஒரு மாநிலத்தை இன்னொரு மாவட்டத்துடன் இணைப்பதற்கு சமமான செயலாக அமையும். இதனால், செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின் தன்னாட்சி உரிமை பறிபோகும். இந்த நிறுவனத்தின் ஆய்வுகள் முற்றிலுமாக முடங்கி விடும். சிறு செலவுகளுக்கு கூட துணைவேந்தரை சார்ந்திருக்க வேண்டும்.

சென்னையில் செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம் அமைக்கப்பட்ட நாளில் இருந்தே அதை முடக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிறுவனம் அமைக்கப்பட்ட நாளிலிருந்தே அதற்கு நிரந்தர இயக்குனர் நியமிக்கப்படவில்லை. இது நடுவண் நிறுவனம் என்பதற்காக தமிழகத்திலுள்ள ஐ.ஐ.டி., என்.ஐ.டி., அஞ்சல்துறை போன்ற ஏதோ ஒரு நடுவண் நிறுவனத்தின் அதிகாரியை பொறுப்பு இயக்குனராக நியமிப்பதை நடுவண் அரசு வழக்கமாக வைத்திருக்கிறது. அந்த அதிகாரிக்கு தமிழே தெரியாது என்பதால் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சொல்லிக்கொள்ளும்படியாக எதையும் செய்வதில்லை. இந்த நிறுவனத்தின் பொறுப்பு அலுவலராக தமிழறிஞர் இராமசாமி பணியாற்றிய காலத்தில் தான் ஓரளவு தமிழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் அந்த பணிகளும் கிட்டத்தட்ட முடங்கிவிட்டன.

கடந்த 2014 ஆம் ஆண்டில் முனைவர் பாலசுப்பிரமணியன் என்பவர் இந்த நிறுவனத்தின் இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், நடுவணில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அவருக்கு பணி ஆணை வழங்க இப்போதுள்ள நடுவண் அரசு மறுத்து விட்டது. அதுமட்டுமின்றி, இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த 120-க்கும் மேற்பட்ட பணியாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டு விட்டனர். இந்த நிறுவனத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு 41 நிரந்தர பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், இன்று வரை அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இவ்வாறாக செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தை சீர்குலைக்கும் முயற்சிகள் மட்டுமே கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அதன் உச்சகட்டமாக இந்நிறுவனத்தை நடுவண் பல்கலைக்கழகத்துடன் இணைக்க நடுவண் அரசு துடிக்கிறது. இந்நடவடிக்கை செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் அடையாளத்தை அழித்துவிடும்.

எனவே, செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தை திருவாரூர் நடுவண் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும். அதற்கு பதிலாக சென்னை பெரும்பாக்கத்தில் இந்த நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 17 ஏக்கர் வளாகத்தில் நிர்வாக அலுவலகம் கட்டும் பணிகளை விரைந்து முடித்து, இப்போது வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வரும் நிறுவனத்தை அங்கு மாற்ற வேண்டும். மேலும், செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்திற்கு நிரந்தர இயக்குனரை நியமித்தல், அனுமதிக்கப்பட்ட அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்புதல் போன்ற பணிகளை விரைந்து முடித்து செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தை முழு அளவில் செயல்படச் செய்யவேண்டும்.

Leave a Response