அதிமுக பாஜக கூட்டணியில் அன்புமணி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இன்னும்,சில மாதங்களில் நடக்கவிருக்கிற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகள் அணிசேர்க்கை தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.இந்நிலையில்,அதிமுக – பாஜக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இணைந்துள்ளது.இது இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி இல்லத்துக்குச் சென்றார் அன்புமணி.அங்கு இருவரும் சந்தித்துப் பேசினர்.அப்போது முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்ட பல அதிமுகவினர் உடனிருந்தனர்.

பேச்சுவார்த்தை முடிந்து வெளியில் வந்து செய்தியாளர்களை இருவரும் கூட்டாகச் சந்தித்தனர்.

அப்போது, அதிமுக பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. திமுக ஆட்சியை அகற்றவேண்டும் என்கிற நோக்கத்தில் நாங்கள் இணைந்திருக்கிறோம்.எங்கள் கூட்டணியில் பாமகவுக்கு எவ்வளவு தொகுதிகள் என்பதை நாங்கள் பேசி முடிவு செய்துவிட்டோம்.அதைப் பின்னர் அறிவிப்போம்.எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

அதைத் தொடர்ந்து பேசிய அன்புமணி, திமுக ஆட்சியின் மீது மக்கள் கோபமாக இருப்பதை எங்கள் நடைபயணத்தின் போது உணரமுடிந்தது.எனவே,அந்த ஆட்சியை அகற்றவேண்டும் என்கிற நோக்கில் இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளோம்.நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார்.

பாட்டாளி மக்கள் கட்சி, மருத்துவர் இராமதாசு தலைமையில் ஒரு அணியாகவும் அன்புமணி தலைமையில் ஒரு அணியாகவும் பிரிந்திருக்கிறது.

இந்தச் சூழலில் அன்புமணி தலைமையிலான பாமக,அதிமுக, பாஜக கூட்டணியில் சேர்ந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Leave a Response