தரம் தாழ்ந்த எச்.ராஜாவுக்கு சாரணர் தலைவர் பதவியா? – சீமான் எதிர்ப்பு


தமிழகச் சாரணர் இயக்கத்துக்குப் பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜாவை தலைவராக்கும் முயற்சிகளுக்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (15-09-2017) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பிரதமர், குடியரசுத் தலைவர், ஆளுநர், நீதிபதிகள் என ஆளும் வர்க்கத்தின் அத்தனை அதிகாரப்பீடங்களிலும் இந்துத்துவவாதிகளைப் பணியமர்த்தி ஒற்றை இந்தியாவை நிறுவத்துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்குச் செயல்வடிவம் கொடுக்கும் பாஜக அரசு தற்போது பள்ளிக்கூடங்களையும் குறிவைத்திருப்பது சமூக ஒற்றுமைக்கும், நாட்டில் நிலவும் பன்முகத்தன்மைக்கும் ஊறு விளைவிப்பதாகும்.

தமிழகத்தின் ஆட்சியாளர்களைத் தனது கைப்பிடிக்குள் வைத்துகொண்டு மறைமுக ஆட்சியைத் தமிழகத்தில் நடத்தி வரும் மத்திய பாஜக அரசு எச்.ராஜாவை தமிழகச் சாரணர் இயக்கத்துக்குத் தலைவராக நியமித்திட மாநில அரசின் மூலம் காய்நகர்த்தி வருவது கண்கூடாகத் தெரிகிறது. ஏற்கனவே, நவோதயா பள்ளிகள் மூலம் தமிழகத்திற்குள் இந்தியைத் திணிக்கிற முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் மத்திய அரசு, தற்போது சாரணர் இயக்கத்திற்கு எச்.ராஜாவைத் தலைவராக்குவதன் மூலம் பள்ளி மாணவர்களிடையே இந்துத்துவாவினைப் பரப்புகிற கொடுஞ்செயலையும் செய்யத்துடிக்கிறது. தன்னை இந்துத்துவவாதியாகப் பெருமையோடு பிரகடனம் செய்யும் எச்.ராஜாவை தமிழகச் சாரணர் இயக்கத்துக்குத் தலைவராக்கும்பட்சத்தில் சாரணர் இயக்கம் முழுமையாகக் காவிமயமாக்கப்பட்டு, பள்ளிக்கூடங்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பயிற்சி முகாம்களாக மாறும். இதன்மூலம், பள்ளிகளிலே மதவுணர்ச்சிகள் தூண்டப்பட்டு, இந்துத்துவாவின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பள்ளி மாணவர்களும் பலியாகக்கூடும். இந்தப் பேராபத்தினை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழகச் சாரணர் இயக்கத்துக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 16 அன்று நடைபெறவிருக்கிறது. இதில் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளும், மாவட்டக் கல்வி அதிகாரிகளும், ஆசிரியர்களும் வாக்குச் செலுத்தி சாரணர் இயக்கத்துக்குத் தலைவரை தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள். இதில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் மற்றொரு வேட்பாளரான கல்வியாளர் மணி அவர்களுக்கு ஆளுந்தரப்பிலிருந்து மிரட்டல்களும், நெருக்கடிகளும் கொடுக்கப்படுகிறது என்று வரும் செய்திகள் இத்தேர்தலின் உள்நோக்கத்தை நமக்குத் தெரிவிக்கிறது. ஆகவே, வாக்காளர்களாக இருக்கிற ஆசிரியப்பெருமக்களும், கல்வியாளர்களும் இந்துத்துவாவின் வேர்பரப்பும் மதத்துவேச நடவடிக்கைகளுக்குத் துணைபோக வேண்டாம் என உரிமையோடு கோருகிறேன்.

மாற்றுக்கருத்துகளை ஏற்கிற சகிப்புத்தன்மையோ, பொது இடங்களில் பின்பற்றப்படவேண்டிய கண்ணியத்தையோ, எவரையும் மதிப்புமிகு சொற்களோடு அணுக வேண்டிய பாங்கையோ எந்த இடத்திலும் பின்பற்றாது மாற்றுக் கருத்துடையவர்களையெல்லாம் ஒருமையில் விளித்தும், தரம்தாழ்ந்த சொற்களைக் கொண்டும் விமர்சித்துவரும் ஒருவரிடம் ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்கும் தமிழகச் சாரணர் இயக்கத்தின் தலைவர் பதவியைக் கொடுக்க முயலுவது அபத்தத்தின் உச்சமாகும்.

போராடும் பொதுமக்களையும், கேள்வி கேட்கும் ஊடகவியலாளர்களையுமே தேசத்துரோகிகள் என வெளிப்படையாக விமர்சித்துவருகிற எச்.ராஜாவை தமிழகச் சாரணர் இயக்கத்துக்குத் தலைவராக்குவதற்கும், ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமைப் பள்ளிக்கூடங்களில் தொடங்குவதற்கும் எந்த வேறுபாடுமில்லை. எனவே, மதத்துவேசம் பேசும் எச்.ராஜாவை தமிழகச் சாரணர் இயக்கத்துக்குத் தலைவராக்க தமிழக அரசு எவ்வகையிலும் துணைபோகக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response