1976 இந்திய அரசின் அலுவல்மொழி விதிகளில் உள்ள- தமிழ்நாடு நீங்கலாக-விதியை மீறுகிறது பாஜக

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும்,இந்திய மாணவர் சங்கமும்இணைந்து ஜூன் 26 அன்று சென்னை காமராசர் அரங்கில் நடத்திய, தமிழர் உரிமை மாநாட்டில், தமுஎகச பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன் முன்மொழிந்த மாநாட்டு அறைகூவல்…

1. மத்திய ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு இந்தி அல்லாத பிறமொழிகளை இரண்டாம் நிலை மொழிகளாக மாற்றும் நடவடிக்கையில் வெளிப்படையாக இறங்கியுள்ளது. நாடாளுமன்றத்தையும், கல்வியையும், அரசு அலுவலகங்களையும் இந்திமயமாக்கும் முயற்சியைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்திய அரசை இந்தி அரசாக மாற்ற முயலும் இக்கொடுஞ்செயலுக்கு எதிராகவும், மொழிச் சமத்துவத்தை நிலைநாட்டவும், தமிழ்ச் சமூகம் வீறுகொண்டு எழவேண்டுமென இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது.

2. 1976 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய அரசின் அலுவல் மொழிகளுக்கான விதி ( 1976 Official Language Rules) பிரிவு 1ன் முதல் இரு பகுதிகள் பின்வருமாறு கூறுகிறது…

அ.) இந்த விதிகள் அலுவல் மொழிகள் (ஒன்றிய அரசின் அலுவல் பயன்பாட்டுக்கானது) விதிகள், 1976 என்று அழைக்கப்படலாம்.
ஆ.) இவை இந்தியா முழுமைக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு மாநிலம் நீங்கலாக என்று கூறுகிறது.
( i. These rules may be called official Languages (Use for Official Purposes of the Union) Rule, 1976. ii They shall extend to the Whole of india, except the state of Tamilnadu)

1937 முதல் பல கட்டங்களாக தமிழகத்தில் நடந்த இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தின் காரணமாக 1976 இல் உருவாக்கப்பட்ட மத்திய அரசின் அலுவல் மொழிக்கான விதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கும் பிரிவுகள் உருவானது. இந்த சட்டப்பூர்வமான ஆவணம் ஏட்டளவில் தான் இன்றும் இருக்கிறது. இச்சட்ட விதிகளை அப்பட்டமாக மீறித் தமிழகத்தில் இந்தியைத் திணிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு செய்து வருகிறது. சட்டத்துக்கு உட்பட்டும், சட்ட விரோதமாகவும் நடைபெறும் இந்தித் திணிப்பை உடனடியாகக் கைவிடவேண்டுமென இம்மாநாடு கோருகிறது.

3.) மாண்புமிகு குடியரசுத் தலைவர் கடந்த மார்ச் 31 ஆம் தேதி கையொப்பமிட்டுள்ள இந்தித் திணிப்பை மையமாகக் கொண்ட ஆணையையும் அந்த ஆணை ஏற்றுக் கொண்டுள்ள 117 பரிந்துரைகளையும் முறியடிக்க இந்தி பேசாத மாநிலங்களின் முதல்வர்களை உள்ளடக்கிய ஓர் மொழியுரிமை அரசியல் மாநாட்டினை இந்தித் திணிப்பு எதிர்ப்புப் பாரம்பரியம் மிக்க தமிழகம் முன்னெடுக்க வேண்டும். அதற்குத் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நின்று முன்கை எடுக்க வேண்டும்.
இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள், மொழி அறிஞர்கள், சட்ட வல்லுநர்கள், கல்வியாளர்கள், மாணவர் இயக்கத் தலைவர்கள் பங்கேற்கும் மொழியுரிமைக் கருத்தரங்கை சென்னையில் நடத்த இம்மாநாடு தீர்மானிக்கிறது.

4. இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஆளும் அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் இம்மாநாடு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
அரசியல் சாசனத்தில் 8-வது அட்டவணையில் கூறப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் மத்திய அலுவல் மொழி ஆக்கவேண்டும் என்றும், அந்த நிலை எட்டப்படும் வரை ஆங்கிலம் ஒரு துணை அலுவல் மொழியாக தொடர வேண்டும் என்றும் இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது. இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளுக்கும் சம மரியாதையும், சம வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற சட்டப்பேரவையின் தீர்மானம் நடைமுறை படுத்தப்படவேண்டும் என இந்த மாநாடு கோருகிறது. நீதி, நிர்வாகம், கல்வி என அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டில் தமிழே தலைமை தாங்க வேண்டும்.

26-6-2017
தமுஎகச- இமாச- தமிழர்உரிமை மாநாடு – சென்னை

Leave a Response