அண்மையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்திருப்பதாக கமல் தெரிவித்தார். இதற்கு தமிழக அமைச்சர்கள் பலரும் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள். கமலுக்குப் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஆதரவுக் குரல் கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழக மக்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜூலை 19 இரவு வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
வணக்கம்,
இந்த விளி, நம் நற்பணி இயக்கத்தார்க்கு மட்டும் அல்ல. அதில் இல்லாத ரசிகர்களுக்கும், முக்கியமாகக் காசுக்கு விலை போகாத தமிழக வாக்களாருக்கும் கூட.
ஊரே கூடி ஊழல் ஊழல் என்று ஓலமிட்டதை ஊடகத்தில் கண்டபின்பு, சாட்சி உண்டா? ஆதாரம் உண்டா? என கேட்கும் குணாதிசயம், கல்லுளிமங்கர் போன்ற ஊழலார்க்கே உரித்தான குணாதிசயம்.
ஆதாரத்துடன் வா, அரசியலுக்கு வா என்று அறைகூவல் விடும் தம்பி மாண்புமிகு. ஜெயகுமாரோ அல்லது எலும்பு வல்லுனர் தம்பி எச்.ராஜாவோ, நான் அரசியலுக்கு வந்துவிட்டதை உணராதவர்கள். தெரிந்தோ தெரியாமலோ என்று இந்தித் திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தேனோ, அன்றே நான் வயதுக்கு வராத அரசியல்வாதி தான்.
நாற்காலி மோகத்தில் பத்தையும் பறக்கவிட்டு அடுக்கு மொழியில் அறிவுரைகளை அள்ளி வீசுபவர்கள்.. ஊர் அறிய கைக்கூலி வாங்கி கடமை செய்ய மறந்தவர்கள். என்னை வரி ஏய்ப்புக்காக நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுவது, ஒருங்கே கோபத்தையும் சிரிப்பையும் வரவைக்கிறது.
ஆதாரத்துடன் சொல்ல வேண்டுமாம்! அமைச்சர் கட்டளை இது. ஊரெல்லாம் கேட்ட ஊழல் பற்றிய ஓலம் அதற்குள் மறந்திருந்தால் நினைவுப்படுத்த மக்களே இருக்கிறார்கள். நடுவில் நான் எதற்கு பூசாரி?
இந்த அறிக்கை, அமைச்சர் கேட்டுக்கொண்ட படி ஆதாரங்களை மக்களே இணையதளங்களில் அல்லது உங்கள் வசதிகேற்ற ஊடகங்களின் மூலம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்க்கு அனுப்பிவைக்கும் ஒரு வேண்டுகோளே. நீங்கள் இவ்வரசின் காலத்தில், ஊழலால் அனுபவித்த இன்னல்களை விளக்கிக் கேள்வியுடன் சேதி அனுப்புங்கள். எக்காரணம் கொண்டும் மரியாதை குறையாமல் இருக்கட்டும் உங்கள் கேள்விகள். தற்கால அமைச்சர்கள் விட மாண்புமிக்கவர் மக்கள் என்று அவர்கள் புரிந்துகொள்ளட்டும். குறைந்தபட்சம் சில லட்சம் கேள்விகள் நிச்சயம் வரும். அத்தனை கேள்வியாளர்களையும் கைது செய்வீரோ அல்லது பதில் சொல்வீரோ! பொறுத்துதான் பார்க்க வேண்டும். இத்தனை லட்சம் பேரை, கைது செய்து வைக்க போதிய சிறைகள் தென்னகத்தில் சில்லை.
நிற்க.. செய்தி சரியாகப் புரியாதவர்களுக்கு…
“ஊழலே இல்ல நிரூபி பாப்போம்னு அமைச்சார் கேட்டார்ல.? ஊழல்இருக்குன்னா எழுதி அனுப்பிடுங்க. கார்டு, கவர்ல, கடுசுதால வேணாம். கிழிச்சுப் போட்டுட்டுப் போயிட்டே இருப்பாங்க. டிஜிட்டல் யுகம் இது. டிஜிட்டலா பதிவு செய்ங்க. ஆனா மரியாத தவறாம அதச் செய்ங்க.”
எல்லாத் துறைக்கும் மக்கள் குரல் கொடுப்பார்கள். என் துறைக்கான ஊழலை நான் சுட்டிக்காட்டுகிறேன். சினிமாவில் வரி விலக்கு அளிக்கிறேன் பேர்வழி என்று ஒவ்வொரு படத்திற்கும் தனிச்சான்றிதழ் வழங்க நடக்கும் லஞ்ச நாடகங்களூக்கு என்னைப் போல் வெகு சிலரைத் தவிர, மற்றவெரல்லாம் பயந்து உடந்தையாய் இருக்கின்றனர். இது என் குரல்.
துணிவுல்ல சினிமாக்காரர்கள் மட்டும் குரல் கொடுத்தாலே, அரசின் ஊழல் பாத்திரம் பொங்கி வழியும்.
மக்கள் மந்தைகள் அல்லர். மக்கள் குரல் கேட்கும் மாண்பை எய்துங்கள்.
விரைவில் அது கேட்கும். தெளிவாக
உங்கள்
கமல்ஹாசன்
அனுப்ப வேண்டிய துறை சார்ந்த அமைச்சர்கள் முகவரி: http://www.tn.gov.in/ministerslist
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.