கமல் அரசியலுக்கு வருவதற்கு திருமாவளவன் எதிர்ப்பு

தமிழக அரசின் ஊழலுக்கு எதிராக அணிதிரள மக்களுக்குக் கோரிக்கை வைத்து கமல் வெளியிட்ட அறிக்கையை முன்வைத்து,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று பரபரப்பாகப் பேசப்பட்டபோது நான் தெரிவித்த அதே கருத்து நடிகர் கமலுக்கும் பொருந்தும்.

அதாவது அரசியலில் ஈடுபட வரையறை எதுவும் கிடையாது. இந்தியக் குடிமகனாக இருந்தால் மட்டும் போதும். முன்பே போராட்டங்கள் நடத்தியிருக்க வேண்டும். சேவை செய்திருக்க வேண்டும் என்றெல்லாம் வரையறை எதுவும் இல்லை. வயது வரம்பும் இல்லை.

ரஜினி, கமல் இருவருக்கும் அரசியலில் ஈடுபட முழு உரிமை உண்டு. கமலஹாசன் ஒரு நடிகராக இருந்து அரசியல் பிரச்சினைகளில் கருத்து சொல்லி வந்தார். தற்போது அரசியல்வாதிகள் அவரைச் சீண்டி, சீண்டி அரசியல்வாதியாக ஆவதற்கு இடம் கொடுத்து இருக்கிறார்கள்.

கமலஹாசன் ஆட்சி நிர்வாகம் பற்றி சொன்ன கருத்து ஒன்றும் புதியதல்ல. பொதுமக்களும் பேசுவது தான். உடனே அமைச்சர்கள் ஒருமையில் அவரைச் சாடினார்கள். இது கமலின் தன்மானத்தைச் சீண்டியது. ஆகவே இந்தி எதிர்ப்பின் போதே அரசியலுக்கு வந்து விட்டதாக தன்னிலை விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

‘முடிவெடுத்தால் யாம் முதல்வர்’ என்றும் ‘மூடமை தவிர்க்க முனைபவரே தலைவர்’ என்றும் கூறி தன்னை ஒரு பகுத்தறிவு வாதியாகவும், தலைவராகவும் அடையாளப்படுத்தி உள்ளார். இவை அவர் அரசியலில் ஈடுபடுவதற்கான சைகைகளாக தெரிகின்றன.

அவருக்கும் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது. ஜனநாயகத்தில் அனைவருக்கும் இந்த உரிமை உண்டு. கமல் அரசியலுக்கு வருவதை எதிர்ப்பதோ, விமர்சிப்பதோ தேவையில்லாதது.

ஆனால் ரஜினி, கமல் இருவருக்குமே அரசியலில் ஈடுபட ஆர்வம் இருப்பது வெளிப்பட்டுள்ளது.

ஏற்கனவே அரசியலில் இருப்பவர்கள் இதை விமர்சிப்பதன் மூலம் அவர்கள் தீவிரமாக அரசியலில் ஈடுபட தூண்டுதலாக அமையும். அரசியலில் ஈடுபடலாமா? வேண்டாமா? என்ற தயக்கம் உடையும்.

இவர்கள் இருவருமே அரசியலுக்கு வந்தால் சினிமா கவர்ச்சியில் தமிழகம் மேலும் சில பத்தாண்டுகள் மூழ்கும்.

ஊழலற்ற ஆட்சி, நிர்வாகம் என்பது நேர்மையான அரசியல் சிந்தனையாளர்களால் மட்டுமே தரமுடியும். நூறு சதவீதம் சேவை மனப்பான்மை இருந்தால் மட்டுமே அது முடியும். இருவரது கடந்த கால வாழ்க்கை அத்தகைய நம்பிக்கையை தருவதாக இல்லை.

காமராஜரைப் போல் தொண்டு செய்வதுதான் அரசியல் என்று அரசியல் நடத்தினால் மட்டுமே அது சாத்தியமாகும்.

புகழுக்காகவும், அதிகாரத்துக்காகவும், பொருளாதாரத்துக்காகவும் அரசியலுக்கு வருவதுதான் தற்போதைய சூழலாக மாறி உள்ளது.

ரஜினி, கமல் இருவரும் இவ்வளவு காலம் சினிமாவில் இருந்து விட்டு தற்போது அரசியலுக்கு வருவது இயல்பானதாக இல்லை.

ஊழலற்ற ஆட்சி, நிர்வாகத்தை கவர்ச்சி அரசியல் செய்பவர்களாலும், கவர்ச்சி அரசியல் மீது நம்பிக்கை கொண்டவர்களாலும் தர முடியும் என்று உறுதியாக நம்ப முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response