
விகடன், வவ்வால் பசங்க உட்பட பல படங்களுக்கு இசையமைத்திருப்பவர் ஜெரோம்புஷ்பராஜ். பிரபல வழக்குரைஞராகவும் இருக்கிறார். இவர் தன்னுடைய மகன் அஸ்வினைக் கதாநாயகனாக்கி தற்போது தயாரித்துள்ள படம் யானும் தீயவன்.
நாளைய இயக்குநர் சீசன் 3ல் பங்கேற்றவரும், இயக்குனர் ஹரியிடம் “சிங்கம் 2” படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவருமான பிரசாந்த் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் வர்ஷா கதாநாயகியாக நடிக்கின்றார். பிரபல நடனக் கலைஞர் மற்றும் நடிகரான ராஜு சுந்தரம் நடிக்கிறார். அவர் இதுவரை ஏற்றிராதவகையில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். படத்தில் வில்லன் அவர்தான் என்கிறார்கள். இவர்களோடு விடிவி கணேஷ், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
பிரபல தெலுங்கு திரையுலக இசையமைப்பாளரான அச்சு ராஜாமணி, இப்படத்திற்கு இசையமைக்கிறார். பாடல்களை பாடலாசிரியர்கள் கபிலன் மற்றும் மணி அமுதவன் எழுதியுள்ளனர்.
இப்படத்தின் முதல் பார்வை படங்களை பிரபல புகைப்பட கலைஞர் ஜி.வெங்கட்ராம் வடிவமைத்து படமாக்கினார்.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா அண்மையில் மிகச்சிறப்பாக நடந்தது. விழாவில் ஆர்யா, பிரபுதேவா உட்பட பல பிரபலங்கள் பங்கேற்றனர். பாடல்களோடு படத்தின் முன்னோட்டமும் வெளியிடப்பட்டது. முன்னோட்டத்தைப் பார்த்ததும் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. ஜி.வெங்கட்ராம், ராஜுசுந்தரம், அச்சுராஜாமணி, கபிலன் போன்ற பல பிரபலங்கள் பங்கேற்றுள்ளதால் படத்தின் தரம் சிறப்பாக இருக்கும் என்கிற கருத்து விநியோகஸ்தர்கள் மத்தியில் இருக்கிறது.
ஸோபியா ஜெரோம் மற்றும் பெப்பிட்டா ஜெரோம் “பெப்பி சினிமாஸ்” சார்பாக இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கின்றனர். இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கும் இந்தப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.


