சாந்தகுமார் சமூகநீதிகுமார் – மகாமுனி பட இயக்குநருக்குப் பாராட்டு

மகாமுனி’ படம் பார்த்தேன்.
‘மெளனகுரு’ இயக்குநர் சாந்தக்குமார் நிறையவே மெளனம் கலைத்து மகாமுனியில் ‘பேசும்குரு’ ஆகியிருக்கிறார்; புதுமையான திரைக்கதை மூலம் ஈர்த்திருக்கிறார் (கா)ந்தக்குமார்

‘உண்மையான ரவுடி தன்னோட இருப்பிடத்தை காண்பிச்சுக்கமாட்டான். சும்மா ஊளைங்கதான் சவுண்ட் விட்டு டீக்குகூட காசுகொடுக்காம போகும்’ என்ற ஆர்யா பேசும் வசனத்துக்கேற்ப தன்னுடைய இருப்பிடத்தை காண்பிக்காமல் நகரும் திரைக்கதை இரண்டாம் பாதியில் ‘மகா’ வேகமெடுக்கிறது.

யார்யா? என்று கேட்கத்தோன்றும் அளவிற்கு வழக்கமான ஆர்யாவாக இல்லாமல் ‘ஆரியத்துக்கு’ எதிரான கதாப்பாத்திரத்தில் அதிரடி காட்டுகிறார் முனி ஆர்யா. இராணுவத்தினருக்கு கொடுக்கப்படுற மரியாதை மூச்சை அடக்கி மலக்குழியில் இறங்கி உயிரைவிடும் தொழிலாளிக்கு கொடுக்கப்படுவதில்லையே என்று பேசும் வசனம் இதயத்தில் பட்டாக்கத்தியாய் குத்தி சம்பவம் செய்கிறது.

நண்பனும் போலி டாக்டருமான காளிவெங்கட் கைதுசெய்யப்பட்ட செய்தியை படத்தின் இரண்டாம் பாதியில் பத்திரிகையில் படிப்பார் மகா ஆர்யா. அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைக்கதையில் இது தேவையா? என்றுகூட நமக்கு தோன்றும். கொஞ்சம் மைண்டில் ரீவைண்ட் செய்து பார்த்தால் படத்தின் முதல் பாதியில் பணமிருந்தால் அரசியல்வாதிகளின் தயவில் டாக்டராகி விடலாம் என்பது காட்சிபடுத்தப்பட்டிருக்கும். ஆனால், ஆர்வம் இருந்தும் பணமில்லாததால் டாக்டருக்கு படிக்கமுடியாமல் போலி டாக்டராகி கைது செய்யப்படுகிறார் காளிவெங்கட் என்ற சமூக அவலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்கிறது அக்காட்சி. நீட் தேர்வாலும் இதே நிலைதான் தொடரும்.

தனது மகள் நட்புடன் பழகுவதாலேயே முனி ஆர்யாவை ஆணவக்கொலை செய்யத்துடிக்கும் செய்யும் அப்பா ஜெயபிரகாஷின் விஷமனமான தந்திரம் பகீரூட்டுகிறது. தமிழ்சினிமாவுக்கு இது புதிது. என்ன பேசிக்கிட்டிருந்தோம்னு தெரியாமலேயே அடிக்கிறீங்களே என்று முனி ஆர்யா கேட்கும்போது ‘நீயெல்லாம் எங்க வீட்டு பொண்ணுக்கிட்ட பேசவேக்கூடாது’ என்று சொல்லி அடித்து துவைக்கிறது சாதிவெறி கும்பல்.

‘தன் சாதியை இழிவுபடுத்தி அவன் வீடியோ போட்டான். அவனுக்கு பதிலா நாங்க ஒரு வீடியோ போட்டிருக்கோம்’ என்று சாதிவெறியை வீரமாக பேசும் மாணவர்களுக்கு வீரம் என்றால் என்ன என்ற பாடத்தை முனி ஆர்யா மூலம் எடுக்கவைத்த சாந்தகுமார் ‘சமூகநீதி’ குமாராகவே தெரிகிறார்; தெறிக்கவிடுகிறார்.

தன்னைக்காப்பாற்றிக்கொள்ள அரசியல்வாதி யாரையும் காட்டிக்கொடுப்பான். அரசியல்வாதிகளுக்கு கூலிப்படையாக இருப்பவன் கடைசிவரையில் கூலிக்கரனாகத்தான் இருப்பான். கைதுசெய்யப்பட்டால் அவனது குடும்பம் என்ன ஆகும் என்பதையும் சமநிலையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

மக்கள் சந்திக்கும் சட்டம் ஒழுங்கு போலீஸார் மற்றும் கிரைம் போலீஸாரைவிட கிரைம் பிராஞ்ச் போலீஸார் எப்படியிருப்பார்கள் என்று கண்முன் நிறுத்தியிருக்கிறது மகாமுனி.

கூலிப்படை அண்ட் வில்லன்களைவிட ஒளிப்பதிவும் இசையும்தான் பார்வையாளர்களை திகிலூட்டி மிரட்டுகிறது. இந்துஜா பாலா படத்து ஓவர் ஆக்டிங் ஹீரோயின்களை நினைவூட்டுவதோடு கண்டினிவிட்டி இல்லாத ஆக்‌ஷன்களால் அலர்ஜியை ஏற்படுத்துகிறார். மகிமா செம்ம போல்டுமா. நடிப்பிலும் பளபளக்கும் கோல்டுமா

எட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு வருடங்கள் கழித்து இயக்கியிருக்கும் இராண்டாவது படம் என்றாலும் சமூகம் – அரசியல் காவல்துறை-கூலிப்படை உள்ளிட்ட ஏரியாக்களில் நன்றாக ஒர்க்-அவுட் செய்து தமிழ் சினிமாவிற்கு தரமான படத்தை கொடுத்த சாந்தகுமாருக்கும் படக்குழுவுக்கும் மகாப்பெரிய கட்-அவுட்.

– வினி சர்பனா

Leave a Response