ஆகஸ்ட் 11 – “தராக்கி” என அன்போடு அழைக்கப்படும் ஊடகவியலாளர் சிவராமின் பிறந்த நாள்.
தர்மரத்தினம் சிவராம் அல்லது தராக்கி சிவராம் ஆகஸ்ட் 11, 1959 கிழக்கிலங்கையின் மட்டக்களப்பில் மகேஸ்வரி, புவிராஜகீர்த்தி தர்மரட்ணம் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.
இவர் இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளரும் தமிழ்நெட்டின் பிரதான எழுத்தாளரும் முன்னாள் போராளியுமாவார்.
சிவராம் அவர்கள் தராகி என்ற புனைபெயரில் ஆங்கிலத்தில் கொழும்பில் இருந்து வெளிவரும் ”The Island” ஏட்டில் தமது முதலாவது கட்டுரையை 1989-இல் எழுதினார்.
அரசியல், போரியல் மற்றும் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக அவரது கட்டுரைகள் அமைந்திருந்தன.
உள்நாட்டிலும் அனைத்துலக மட்டத்திலும் அவரது கட்டுரைகள் பெயர்பெற்றிருந்தன. அதனால் இலங்கை அரசு பற்றிய உண்மைகள் அனைத்துலக மட்டத்தில் அம்பலமாக்கப்பட்டு கொண்டு இருந்தன.
இவர் போன்ற எழுத்தாளர்கள் உயிரோடு இருந்தால் இலங்கை அரசின் பயங்கரவாதம் அப்பட்டமாக அம்பலமாகும் என இலங்கை அரசு அஞ்சியது. அதனால் சூழ்ச்சியாக அரச கைக்கூலிகளால் அரச பின்னணியில் அநீதியாக கொல்லப்பட்டார்.
கொழும்பு பம்பலப்பிட்டியில் காவல் நிலையம் முன்பாக வெள்ளை நிற சிற்றுந்து ஒன்றில் வந்த ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட இவர் தாக்கப்பட்ட பின்னர் வாகனமொன்றில் கொண்டு வரப்பட்டு இலங்கை பாராளுமன்றத்துக்கு அருகில் தலையை இலக்கு வைத்து 9 மில்லி மீட்டர் வகை கைத்துப்பாக்கியினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2005 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 28 ஆம் நாள் கடத்திச் செல்லப்பட்ட இவர், மறுநாள் கொல்லப்பட்ட நிலையில் கொழும்பு ஜெயவர்தன்புர நாடாளுமன்ற உயர்பாதுக்காப்பு வலயப் பகுதியில் கிடந்தார். அவருக்கு தமிழீழத்தின் உயரிய விருதான மாமனிதர் விருதை தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் வழங்கினார்.
எழுதுகோள்களை குறிப்பதால் எழுத்தாளர்களின் எழுத்துக்களை முடக்கி விடலாம் என கனவு காணும் அரச பயங்கரவாதிகள் அறிவதில்லை.
உண்மையான எழுத்தாளனின் எழுத்துக்கள் ஆயிரம் ஆயிரம் அக்கினி குஞ்சுகளை அடைகாத்து பொரிக்க வைத்து கொண்டே இருக்கின்றன என்பதை.
தர்மரத்தினம் சிவராமின் வாழ்க்கைக் கதை சிவராம் புகட்டும் அரசியல் – ஈழத்தின் புரட்சிகரத் தமிழ் ஊடகவியலாளனின் வாழ்வும் மரணமும் என்ற தலைப்பில் சிவராமின் நண்பரும், வட அமெரிக்காவில் உள்ள தென் கரோலினா பல்கலைக்கழக, மானிடவியல் துணைப் பேராசிரியருமான மார்க் பி. விற்ரேக்கரினால் (Mark P. Whittaker) எழுதப்பட்டுள்ளது.