சீனுராமசாமியை கண்டாலே தெறித்து ஓடும் பாலா..!


சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள படம் தான் ‘தர்மதுரை’ இந்தப்படத்தில் கதாநாயகிகளாக தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்துள்ளனர்.. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்திற்கு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். ஸ்டுடியோ 9 சுரேஷ் இந்தப்படத்தை தயாரித்துள்ளார்

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.. இதில் இயக்குனர் பாலா உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். இந்த விழாவில் பேசிய பாலா, சீனுராமசாமியை கண்டாலே நான் தெறித்து ஓடுவேன் என கூறி கலகலப்பை ஏற்படுத்தினார்.

“தென்மேற்கு பருவக்காற்று படம் வரைக்கும் நான் சீனுவை முட்டாள் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் அந்த படத்தை பார்த்த பிறகு கிட்டத்தட்ட ஒரு வாரம் என்னால் தூங்க முடியவில்லை. சீனு ராமசாமி சினிமாவைத் தவிர வேறெதுவும் பேசமாட்டான். மற்ற விஷயங்களை பேசுவோமே என்றாலும் விடாமல் சினிமாவைப் பற்றியே பேசி அறுத்து விடுவான். அந்த காரணத்துக்காகவே இவனைக் கண்டால் நான் ஓடிவிடுவேன்.

திடீரென அவனுக்கு எதாவது கதை தோன்றினால் என்னை தொலைபேசியில் அழைப்பான். கதையை சொல்லி என்னிடம் கருத்து கேட்பான். அவன் கேட்கும்போது இரவு 1 மணி ஆகியிருக்கும். ஆனால் அந்த நேரத்திலும் அவனுக்குத் தோன்றியதையும் என்னிடம் சொல்ல வேண்டும் என நினைப்பான். அப்படி ஒரு சினிமா வெறியன்” என சீனுராமசாமியை பாராட்டி பேசினார் பாலா..

Leave a Response