மீண்டும் ‘துருவ நட்சத்திரம்’ தோன்றுமா..?


சினிமாவில் நிரந்தர நண்பர்களும் இல்லை.. நிரந்தர எதிரிகளும் இல்லை… இது சூர்யா, கௌதம் மேனன் விஷயத்தில் மட்டும் மாறுமா என்ன.? சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் காக்க காக்க, ‘வாரணம் ஆயிரம்’ என மறக்க முடியாத இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர் கௌதம் மேனன். அதிலும் சூர்யா வளர்ந்துவந்த நேரத்தில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படம், சூர்யா சினிமாவின் இன்னொரு தளத்தில் அடியெடுத்து வைக்கவும் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறவும் உதவியதை மறக்க முடியாது..

ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன் சூர்யா நடிக்க துருவ நட்சத்திரம் என்ற படத்திற்கு பூஜை போட்டார் கௌதம். ஆனால் சில காரணங்களை வெளிப்படையாக கூறி அந்தப்படத்திலிருந்து ஒதுங்கிக்கொண்டார் சூர்யா. அதன்பின் கௌதம் வேறு நடிகர்களை வைத்து இயக்கி வருகிறார்.. சூர்யாவும் வேறு வேறு இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ‘காக்க காக்க படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆனதையொட்டி கெளதம் மேனன் “‘காக்க காக்க’ எனக்கு ஒரு ஸ்பெஷலான படம். சூர்யாவின் தீவிர ஈடுபாடு இல்லையென்றால் சாத்தியமாகி இருக்காது. அப்படம் நிறைய போலீஸ் அதிகாரிகளுக்கு உத்வேகம் அளித்தது குறித்து மகிழ்ச்சி. படக்குழுவினருக்கு நன்றி” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

கெளதம் மேனனின் இந்த ட்வீட்டிற்கு பதிலளிக்கும் விதமாக அதை மேற்கோள்காட்டி “‘காக்க காக்க’ படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகின்றன. எனக்கும் ஜோதிகாவுக்கும் மிகவும் பிடித்த படம். என் வாழ்க்கையையே மாற்றிய படம்” என்று பதிலளித்திருக்கிறார் சூர்யா. ஆக, சூர்யாவின் இந்த பதிலால் மீண்டும் கெளதம் மேனன் – சூர்யா இருவரும் இணைந்து படம் பண்ணும் வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.

Leave a Response