தமிழகக் கல்விக்கொள்கைக் குழு – எஸ்.இராமகிருஷ்ணன் சூர்யாவின் அகரம் உறுப்பினர் உள்ளிட்டோர் இடம்பெற்றனர்

மோடி தலைமையிலான ஒன்றிய அரசு புதியகல்விக்கொள்கை ஒன்றை வெளியிட்டு அதை எல்லோரும் கடைபிடிக்கவேண்டும் என்று வலியுறுத்திவருகிறது.இயற்கைக்கு முரணான அந்தக் கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அதோடு நில்லாமல் தமிழ்நாட்டுக்கென ஒரு கல்விக்கொள்கையை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது…..

2021 ஆகஸ்ட் 13 ஆம் தேதி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடரில் பேசிய நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர், தமிழகத்தின் மாநில கல்விக் கொள்கையை உருவாக்க கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவை அரசு அமைக்கும் என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஏப்ரல் மாதம், உயர்மட்டக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெயர்களை அறிவித்தார்.

அதன்படி, உயர்மட்டக் குழுவின் தலைவராக டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முருகேசன் இருப்பார். உறுப்பினர்களாக சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் எல்.ஜவகர் நேசன், சென்னை தரமணியில் உள்ள கணித அறிவியல் நிறுவனத்தின் முன்னாள் கணிதப் பேராசிரியர் ராமானுஜம், மாநில திட்டக்கமிஷன் உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் ராம சீனுவாசன், யுனிசெப் நிறுவனத்தின் முன்னாள் கல்வியாளர் அருணாரத்னம், எழுத்தாளர் ராமகிருஷ்ணன், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், பாடகர் டி.எம்.கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், எழுத்தாளர் மாடசாமி, நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சங்குப்பம் ஊராட்சி ஒன்றிய பள்ளித் தலைமை ஆசிரியர் பாலு, அகரம் அறக்கட்டளையின் ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர், உறுப்பினர் செயலராக இருந்து இந்த உயர்மட்டக் குழுவின் கூட்டங்களை நடத்துவார். இந்தக் குழு, தமிழகத்தின் எதிர்காலம் மற்றும் இளைஞர்களின் கல்வியைக் கருத்தில் கொண்டு மாநில கல்விக் கொள்கையைத் தயார் செய்யும். தற்போதுள்ள தொழில்நுட்பம் மற்றும் நவீன வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு பாட ஆசிரிர்கள் மற்றும் கல்வியாளர்கள் வெளியிடும் கருத்துகளையும் திருத்தங்களையும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலை கல்லூரிப் படிப்புகளில் வேண்டிய சீர்திருத்தங்களையும், உலகளவில் கல்வியில் மாற்றத்தையும், வேலைவாய்ப்புடன் கூடிய கல்வி ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும், தேர்வுகளில் வேண்டிய சீர்திருத்தங்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் நியமனங்களில் வேண்டிய திருத்தங்கள் கருத்துகளையும் தெரிவிக்க வேண்டும்.

பள்ளிகளில் இருந்து வெளியேறும் மாணவ, மாணவியர் உயர்கல்விக்கும் வாய்ப்பை உறுதி செய்வதற்கான அம்சங்கள் இடம்பெறுதல், உயர்கல்வி நிறுவனங்கள் தரமான கல்வியை மேம்படுத்துவதற்கான வழிகளை தெரிவித்தல் ஆகியவற்றைக் கொண்ட அறிக்கை தயார் செய்யும். இந்த உயர்மட்டக் குழு அறிவிக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் இறுதி அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். மாநில கல்விக் கொள்கையை தயாரிக்கும் போது இந்த உயர் மட்டக் குழு, தனக்குக் கீழ் ஒரு துணைக் குழுவை அமைத்துக் கொள்ளவும் அதிகாரம் அளிக்கப்படுகிறது.

இவ்வாறு பள்ளிக் கல்விச் செயலாளர் காகர்லா உஷா அரசாணையில் தெரிவித்துள்ளார்.

Leave a Response