இந்து தமிழ் ஏட்டுக்கு தமிழர்கள் மீது இவ்வளவு வன்மமா? – பெ.மணியரசன் கேள்வி

இந்து தமிழ் ஏடு 21.10.2020 அன்று “சனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அவ்வேட்டின் பெங்களூர் செய்தியாளர் இரா.வினோத் அக்கட்டுரையை எழுதியுள்ளார்.

மட்டைப்பந்து வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் தமிழ்நடிகர் விசய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று பேரெழுச்சியாய்க் கிளம்பிய தமிழர் எதிர்ப்பை எதிர்க்கும் கட்டுரை இது!

இலங்கையில் உள்நாட்டுப் போர், ஈழத் தமிழர்களின் இனப்படுகொலையோடு முடிந்து பத்து ஆண்டுகள் முடிந்த பின்னும் சினிமா, கிரிக்கெட் சம்பந்தப்பட்ட விஷயங்கள் கூட தமிழகத்தில் சர்ச்சையாக்கப்படுவது சரியா என்று வினோத் கேட்கிறார்.

நூறாண்டுகள், நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் காலனி ஆட்சியில் ஆங்கிலேய அரசு, பிரஞ்சு அரசு போன்றவை காலனி நாட்டு மக்கள் மீது நடத்திய படுகொலைகளுக்காக, முன்னாள் காலனிகள் அந்த நாடுகளை மன்னிப்புக் கேட்குமாறு கோருவதும் இழப்பீடு கோருவதும் இன்றும் தொடர்கிறது. சீனாவில் ஜப்பான் நடத்திய படுகொலைகளுக்காக சீனா இன்றும் ஜப்பானை மன்னிப்புக் கேட்குமாறு கோருகிறது.

தமிழ் இனப்படுகொலை நடந்து பத்தாண்டு முடிந்த பின்னும் இன்று ஏன் அந்த தமிழர்களுக்காகப் பரிந்து பேசுகிறாய் என்று நம்மை பார்த்துக் கேட்கிறது இந்து தமிழ் கட்டுரை!

“ஏ நாதியற்ற தமிழர்களே, நீங்கள் உலகத்தில் 12 கோடி பேர் இருப்பதாகக் பீற்றிக் கொள்கிறீர்கள். உங்களுக்கு இறையாண்மையுள்ள ஒரு நாடு உண்டா? ஒரு தேசம் உண்டா? ஐ.நா. மன்றத்திலே நீங்கள் உறுப்பு வகிக்கிறீர்களா? இல்லை! ஆதிக்கக்காரனுக்கு அடிமைகள் அடங்கிப்போக வேண்டும்; அளந்து பேசுங்கள்?” என்று வெளிப்படையாகப் பேச இன்னும் கொஞ்ச காலம் இருக்கிறது என்று கருதி, இரா.வினோத் போன்றவர்களின் இனத்துரோகக் கட்டுரைகளை வெளியிடுகிறது அவ்வேடு.

இசை, கலை, விளையாட்டு போன்றவற்றிற்கு அரசியல் இல்லை என்று பேசுகிறார் இரா.வினோத். பாரதிராஜா அவர்களை இடித்துக்காட்டி இக்கருத்தை வினோத் எழுதியுள்ளார்.

எந்த நாட்டிலே, அந்நாட்டின் அரசியல் முடிவுக்கு அப்பால் அயல்நாட்டு இசைக் குழுவை, கலைக்குழுவை, விளையாட்டுக் குழுவை அனுமதிக்கிறார்கள்? இந்திய அரசு பாக்கித்தான் மட்டைப் பந்துக் குழுவை இங்கு விளையாட இப்போது அனுமதிகுமா? சீனாவின் இசைக்குழு இப்போது இந்தியாவில் நிகழ்ச்சி நடத்த மோடி அரசு அனுமதிக்குமா? சீனநாட்டு இணைய டிக்டாக், கேம் ஸ்கேனர் போன்ற செயலிகளை இந்தியா தடைசெய்தது ஏன்? இப்போது நடக்கும் எல்லை மோதல்தான்! இது அரசியல் இல்லையா?

தெனாப்பிரிக்காவில் அந்நாட்டின் மண்ணின் மக்களாகிய கருப்பினத்தவர்களின் வாக்குரிமையைப் பறித்து, வெள்ளை இனவெறி ஆட்சி நடந்துவந்தது. கருப்பர்களுக்கு வெள்ளையருக்குச் சமமாக உரிமை இல்லை. இன ஒதுக்கல் (Aparthied) செய்தார்கள். எனவே அந்த நாட்டுடன் இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள் தூதரக உறவு வைக்காமல் ஒதுக்கிவைத்திருந்தன.

கலைக்கும் விளையாட்டிற்கும் அரசியல் இல்லையா?

இசை, கலை, விளையாட்டுக் குழுக்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்குப் போகத் தடை; தென்னாப்பிரிக்கக் குழுக்கள் இந்த நாடுகளுக்கு வரத்தடை இருந்தது.

இன ஒதுக்கலை அந்நாடு கைவிட்ட பின்தான் இந்நாடுகள் இத்தடையை நீக்கின. மேற்படி தடையை எல்லோரும் ஆதரித்தோம்! அதே போல் பாலத்தீனர்களின் தாயகத்தை ஆக்கிரமித்துக் கொண்ட யூதர்களின் இஸ்ரேலுடன் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தூதரக உறவு கொள்ளாமல் – இசை, கலை, விளையாட்டுக் குழுக்கள் போக வரத் தடை விதித்திருந்தன. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் முன்னிலையில் பாலத்தீன விடுதலை அமைப்பிற்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையே ஏற்பட்ட அமைதி உடன்படிக்கைக்குப் பின்னரே இஸ்ரேலுக்கு எதிரான தடைகள் நீங்கின.

இலங்கையில் சிங்கள இனவெறி ஆட்சி ஈழத் தமிழர்களை இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்த பின், இலங்கைக்கு எதிராக இந்திய அரசு தூதரக உறவைத் துண்டித்துத் தடைகள் போட்டிருக்க வேண்டும். சிங்கள அரசுடன் சேர்ந்து கொண்டு தமிழின அழிப்புப் போரை வழிநடத்திய இந்திய அரசு எப்படி இலங்கை அரசுக்கு எதிராகச் செயல்படும்?

ஆனால், தமிழ்நாட்டுத் தமிழர்களின் இன உணர்ச்சியைக் கணக்கில் கொண்டு அன்றையத் தமிழ்நாட்டு முதலமைச்சர் செயலலிதா அவர்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையில், இலங்கை அரசுக்கு எதிராக இந்திய அரசு பொருளாதாரத் தடைவிதிக்க வேண்டும்; சிங்களப் படை வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது, இலங்கை விளையாட்டுக் குழுக்கள் இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் விளையாடக் கூடாது – என்று சட்டப்பேரவையில் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றினார்!

தமிழ்நாட்டின் குடியரசுத் தலைவராகவோ அல்லது தலைமை அமைச்சராகவோ செயலலிதா இருந்து மேற்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தால் ஐ.நா.மன்றம் அவர் குரலை செவிமடுத்திருக்கும். பல நாடுகள் தமிழ்நாட்டுடன் சேர்ந்து இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை, கலைக்குழுக்கள், விளையாட்டுக் குழுக்களுக்கான தடை அனைத்தையும் போட்டிருக்கும்!

செயலலிதா அம்மையார் போட்ட அந்த சட்டப் பேரவைத் தீர்மானத்தின் தொடர்ச்சியாகத்தான் இன்றும் தமிழ்நாட்டில் இலங்கை விளையாட்டுக்குழுக்கள் விளையாட அனுமதிக்கக் கூடாது; சிங்களப் படையாட்களுக்குப் பயிற்சி தரக்கூடாது என்கிறோம்.

இதன் தொடர்ச்சியாகத்தான், சிங்களப் பேரினவாத அரசு நடத்திய தமிழினப் படுகொலையை ஆதரித்த, ஆதரிக்கின்ற, தமிழினத் துரோகி முத்தையா முரளிதரன் வேடத்தில் தமிழ்நடிகர் விசய்சேதுபதி நடிக்கக்கூடாது என்கிறோம். சிங்கள நடிகர்களைக் கொண்டோ, வேறுநாட்டு நடிகர்களைக் கொண்டோ முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படம் வந்தால் எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால் அந்தப் படம் தமிழ்நாட்டில் ஓடக்கூடாது என்கிறோம்!

இனப்படுகொலை மற்றும் மனித உரிமைப் பறிப்பு நாடுகளுக்கு எதிராக நாகரிகச் சமூகம் – சனநாயகச் சமூகம் கடைபிடிக்கும் புறக்கணிப்பு நடவடிக்கையைத்தான் தமிழின உணர்வாளர்களாகிய நாங்கள் கடைபிடிக்கிறோம்.

ஐ.நா.பொதுச்செயலரும் – மனித உரிமை மன்றமும்

அன்றைய முதல்வர் செயலலிதா, அப்போது ஈழத்தமிழர் இனப்படுகொலையால் மனம் பதைத்த தமிழ்நாட்டுத் தமிழர்களின் வாக்குகளை வாங்குவதற்கான ஒரு சாகசமாக – ஓர் உத்தியாக – இலங்கைக்கு எதிரான தடைகளை விதித்தார் என்று இந்து தமிழ் நாளேட்டின் “உயர்மட்ட அறிவாளர் குழு” எதிர்வாதம் செய்யக்கூடும்!

2009இல் பொறுப்பில் இருந்த ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர் பான்கிமூன் அவர்களுக்குத் தமிழ்நாட்டில் வாக்குக் கேட்கும் தேவை இல்லையல்லவா? ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் உறுப்பு வகிக்கும் அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்குத் தமிழ்நாட்டில் வாக்குக் கேட்கும் தேவை இல்லை அல்லவா!

இனப்படுகொலை நடந்த 2009 ஆம் ஆண்டே, பன்னாட்டுப் புகழ்பெற்ற இந்தோனேசிய மனித உரிமைச் சிந்தனையாளர் தாருஸ்மான் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை அமர்த்தி, இலங்கையில் இறுதிப்போர் நாட்களில் நடந்த மனிதப்படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் முதலியவற்றை ஆய்வு செய்து அறிக்கை தருமாறு கேட்டுக்கொண்டார். அக்குழு அளித்த அறிக்கை பின்வருமாறு கூறியது.

2009 இறுதிப்போரில் கடைசி மூன்று நாட்களில் மட்டும் 40 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் – பொதுமக்கள் – இலங்கைப்படையினரால் கொல்லப்பட்டனர். வெள்ளைக்கொடி ஏந்தி சரண்டையச் சென்ற பொதுமக்கள் இலங்கை படையாட்களால் கொல்லப்பட்டனர். அங்கு நடந்துள்ள படுகொலைகள் மனித குலத்திற்கு எதிரான குற்றம் (Crime against Humanity). இவற்றை விசாரித்துத் தக்க நடவடிக்கை எடுக்கப் பன்னாட்டுப் புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்று மேற்படி தாருஸ்மான் குழு ஐ.நா.பொதுச் செயலாளர்க்குப் பரிந்துரைத்தது.

2015-இல் செனிவாவில் கூடிய ஐ.நா.மனித உரிமை மன்றம் இலங்கை அரசு நடத்திய இறுதிப்போரில் நடந்த படுகொலைகள், போர்க் குற்றங்கள் அனைத்தையும் விசாரிக்க இலங்கை அரசு பன்னாட்டு வல்லுநர்களையும் இணைத்துக் கொண்ட புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.

ஐ.நா.மன்றப் பொதுச் செயலாளர் கொடுத்த அறிக்கைப்படியும் ஐ.நா.மனித உரிமை மன்றம் நிறைவேற்றிய தீர்மானப்படியும் புலனாய்வு அமைப்புகள் அமைக்காதபடி இந்தியா உள்ளிட்ட பலநாடுகள் சிங்கள இனவெறி அரசுக்குப் பாதுகாப்பு அரண்களாக விளங்குகின்றன. ஆனால், சிங்கள அரசு – ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்தது என்ற உண்மையை ஏதோ ஒரு வடிவில், உலக நாடுகள் ஒப்புக்கொள்கின்றன.

தமிழினப் படுகொலை செய்தோர் மற்றும் முரளிதரன்

தமிழினத்தில் பிறந்த, இலங்கையைச் சேர்ந்த முத்தையா முரளிதரன் 2009 இனப்படுகொலையைக் கண்டிக்கவில்லை. போர் முடிந்த நாள் தன் வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான நாள் என்றார்.

“2009 – இல் போர் முடிவுக்கு வந்ததால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவது நின்று போனது என்ற கருத்தில்தான் என் வாழ்நாளில் அது மகிழ்ச்சியான நாள் என்று 2019-இல் கூறினேன்” என்று இப்போது மிண்டும் கூறியுள்ளார்.

அப்பாவிப் பொதுமக்கள் இனிமேல் கொல்லப்பட மாட்டார்கள் என்று மகிழ்ந்த முரளிதரன் 2008 – 2009 ஆண்டுகளில் ஒரு இலட்சத்திற்கும் மேல் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்ததுண்டா? இல்லை! ஏனேனில் கொன்றவர்கள் முரளிதரனின் எசமானர்கள். கொல்லப்பட்டவர்கள் அப்பாவித் தமிழர்கள்! அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு சம்பிரதாயத்திற்குக் கூட இன்று வரை கண்டனம் தெரிவிக்கவில்லை! இதில் முரளிதரனுக்குத் தன்னலவெறி அரசியல் இல்லையா?

ஈழத்தமிழர், சிங்களர் என்ற இரண்டு இனங்களின் தாயகமாக உள்ளது இலங்கை. இதைச் சிங்களத் தீவு என்று கூறி பெருமைப்பட்டுக்கொண்டார் முரளிதரன். இதில் அவரது தன்னல அரசியல் இல்லையா?

பிரித்தானியத் தலைமை அமைச்சர் டேவிட் காமரூன் காமன் வெல்த் மாநாட்டிற்காக இலங்கை சென்றிருந்த போது 16.11.2013 அன்று வடக்கே தமிழர் பகுதிக்குப் போய் தமிழர்களின் துயரங்களைக் கேட்டறிந்தார். அவரிடம் தமிழ்த்தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளைப் பிடித்துக் கொண்டுபோன, சிங்களக் காவல்துறை என்ன செய்தது என்றே தெரியவில்லை. அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்றே தெரியவில்லை; எங்கள் பிள்ளைகளை ஒப்படைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறிக் கதறி அழுதனர். அதுபற்றி இலண்டன் பிபிசி நிறுவனம் முத்தையா முரளிதரனிடம் கேட்ட போது, இருபது, முப்பது பெண்கள் சொல்வதெல்லாம் உண்மை ஆகிவிடுமா என்று எதிர்க் கேள்வி கேட்டார். இது முத்தையா முரளிதரனின் இனத்துரோக அரசியல் இல்லையா?

கடந்த ஆண்டு இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்த போது முரளிதரன் இனப்படுகொலைக் குற்றவாளி கோத்தபய இராசபட்சேவுக்குத் தேர்தல் பரப்புரை செய்தார். அப்போதுதான் என் வாழ்நாளில் மகிழ்ச்சியான நாள் 2009-இல் போர் முடிந்த நாள் என்றார். அதுமட்டுமல்ல, இப்போது இலங்கையில் எங்கு வேண்டுமானாலும் அச்சமின்றிப் போய் வர முடிகிறது. இந்த அமைதி – பாதுகாப்பு மேலும் உறுதிப்பட வேண்டுமானால், கோத்தபய ஆட்சி வரவேண்டும் என்று பேசினார்.

இப்படிப்பட்ட முரளிதரனைத்தான் “அவர் ஒரு விளையாட்டு வீரர்; அரசியர் அல்ல என்பதை நாம் மறந்துவிடக்கூடாது” என்று வினோத் விளக்குகிறார். என்னே அவரது வாய்மை!

முரளிதரன் அரசியலற்ற வெறும் விளையாட்டு வீரரா? தமிழினத்திற்கு எதிரான அரசியல் பேசினால், அது அரசியல் அல்ல என்பது இந்து தமிழ் நாளேட்டின் நடுப்பக்கச் சிந்தனை நாயகர்களின் முடிவோ? மேற்கண்ட முரளிதரன் கூற்றுகள் அனைத்தும் அவர் கொடுத்த காணொலிக் காட்சிப் பதிவுகளாக உள்ளன.

“இலங்கை என்பது சிங்கள பெளத்த நாடு என்று சொன்னேன். அது உண்மை தானே” என்று ஒரு நேர்காணலில் கேட்கிறார் முரளிதரன். இலங்கை அரசமைப்புச் சட்டம் அனைவர்கும் ஒன்றுதான் அதில் பாகுபாடு இல்லை” என்கிறார் அதே காணொலியில்! இலங்கையில் ஈழத்தமிழர்களும் – அவர்கள் தாயகமும் – அவர்களின் இந்து மதமும் இல்லையா?

இந்துத் தமிழ்நாளேட்டின் சிந்தனை நீர்த் தேக்கங்களுக்கு (think tanks) மேற்கண்ட முரளிதரன் கூற்றுகள் எல்லாம் மட்டைப் பந்து விளையாட்டின் சில விதிமறைகளாகத் தெரிகின்றனவோ? சிங்களப் பேரினவாத அரசியலாகத் தெரியவில்லையோ?

தமிழின வெறுப்பு அரசியல்

விளையாட்டு வீரரிடம் போய் அரசியல் பண்ணலாமா என்று நம்மைப் பார்த்துக் கேட்கின்றனர், தமிழின வெறுப்பு தலைக்கேறிப்போன இந்த “நடுநிலை இதழாளர்கள்!”

நாங்கள் அரசியல் பண்ண வில்லை; அரசியல் அனாதையாகக் கிடக்கும் தமிழினத்தின் அவலக் குரலை வெளிப்படுதுகிறோம். மனித உரிமைகளின் மாண்பறிந்த பன்னாட்டுச் சமூகம் காட்டிய பாதையைப் பின்பற்றுகிறோம். தமிழினப் படுகொலைக் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் கேடயம்தான் முரளிதரன் என்கிறோம். அந்தப் பாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என்று நம் நடிகர் விசய் சேதுபதியைக் கேட்டுக் கொண்டோம்.

எங்கள் வேண்டுகோளை விசய் சேதுபதி ஏற்கவில்லை; எழுந்துள்ள எதிர்ப்பின் ஆழத்தையும் பரப்பையும் புரிந்து கொண்ட முரளிதரன், தன் படத்தில் விசய்சேதுபதி நடித்தால் படம் தோற்றுவிடும் என்று உணர்ந்து கொண்டார். அதை நாசுக்காக – வெளிப்படுத்தி, விசய்சேதுபதி வேண்டாம் என்று விலக்கிக் கடிதம் எழுதிவிட்டார். விலக்கப்பட்ட நபர் விசய்சேதுபதி; அவராக விலகிக் கொண்டது போல் சொற்களை அடுக்கியுள்ளார் சூழ்ச்சிக்கார வினோத்!

இரா.வினோத்தின் இந்து ஏட்டுக் கட்டுரையை வரிக்குவரி மறுக்கலாம். அவரின் அந்தரங்க சூழ்ச்சியை வெளிப்படுத்தலாம். கட்டுரை பெரிதாகிவிடும். எல்லாவற்றையும் வாசகர்களே புரிந்துகொள்வார்கள்!

திரும்பத் திரும்ப சாதியை இழுத்துப் போர்த்திக்கொள்கிறார் வினோத்! முரளிதரனைச் சாதிபார்த்துத் தமிழ் உணர்வாளர்களும் சனநாயகவாதிகளும் கண்டிப்பது போல் எழுதுகிறார். முரளிதரன் தமிழ்நாட்டு மரபுவழித் தமிழன் என்பது மட்டுமே என்னைப் போன்றவர்களுக்குத் தெரியும். அவர் என்ன சாதி என்று தெரியாது. அதைத் தெரிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டவில்லை. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் சாதி வேறுபாடற்ற உயர் பண்புத்தமிழன்! அவர் தலைமையை ஏற்றுக்கொண்டது தமிழீழம்.

முரளிதரனை எதிர்ப்போர், வர்க்க வேறுபாடு பார்ப்பதாகச் சொல்கிறார் இரா.வினோத். கோடீசுவரராக உள்ள முரளிதரனின் இன்றைய வர்க்கம் என்ன?

அடுத்து மலையகத் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டில் உள்ள தமிழ்த்தேசியர்களுக்கும் இடையே சிண்டுமுடியும் வேலையில் ஈடுபட்டுள்ளார் வினோத்! மலையகத் தமிழர்கள் உரிமை காக்கவும் அவர்கள் மீது சிங்கள அரசு ஏவி விட்ட ஒடுக்குமுறையைக் கண்டிக்கவும் 1950,60களிலிருந்து இன்று வரை தமிழ்நாடு குரல் கொடுத்து வருவதும் போராடியதும் வினோத்துக்கு தெரியுமா? இவற்றை எல்லாம் இந்து தமிழ் நாளேட்டின் நடுப்பக்கச் சிந்தனை நாயகர்கள் விசாரித்து உண்மையறியவேண்டும்!

தமிழ்நாட்டில் முத்தையா முரளிதரனுக்கு எதிராகக் கிளம்பிய இன உணர்வுக் குரலை – சனநாயகக் குரலை தூண்டிவிட்டவர்கள் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் என்று அபாண்டமாக குற்றம்சாட்டுகிறார் வினோத். “இலங்கை அரசுக்கு ஆதரவானவர் (முரளிதரன்) என்று புலம் பெயர் ஈழத் தமிழ் குழுக்கள் ஒரு திரியை கொளுத்திவிட்டதும், தமிழ்நாட்டில் தமிழ் அடையாள அரசியல் பேசுவோர் குரல் பொங்க ஆரம்பித்தது,” என்று வினோத் நையாண்டி செய்கிறார். முரளிதரன் சிங்கள பேரினவாத அரசுக்கு ஆதரவானவர் என்பது கட்டுக்கதையா? அடுத்து, புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள்தான் தமிழ்நாட்டுத் தமிழர்களைத் தூண்டிவிட்டார்கள் என்று இவர் கூறுவது நயவஞ்சகமல்லவா!

“இப்போது போராளிகள் வேஷம் கட்டுபவர்கள் தமிழ்நாட்டில் சாதியின் பெயரால் நடந்த கொலைகளைச் செய்தவர்கள் வீடுகளை முற்றுகையிட்டார்களா?” என்று கேட்கிறார். சாதிக் கொலைகளை தொடர்ந்து கண்டித்துவந்துள்ளோம். சாதி ஆதிக்கக் கொலைகாரர்களைச் சட்டப்படி தண்டிக்க வேண்டும் எனப் போரடி வந்திருக்கிறோம், அது வேறு செய்தி. ஆனால் இனப்படுகொலை ஆதரவாளரை எதிர்த்துக் குரல் கொடுக்கும் தமிழ் இன உணர்வாளர்களைப் பார்த்து சாதி ஆதிக்ககாரர்கள் வீட்டை முற்றுகையிட்டீர்களா என்று கேட்பது என்ன வகையான சனநாயகம், என்ன வகையான தருக்கம்?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்திப் போராடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானர்கள். அந்தத் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்துத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் போராடினால் சாதி ஆதிக்ககாரர்கள் கொலை செய்த போது அவர்கள் வீடுகளை நீங்கள் முற்றுகையிட்டீர்களா என்று கேட்பாரோ வினோத்? எவ்வளவு வன்மமாக, சூழ்ச்சியாக, மக்களைத் திசைதிருப்பும் உள்நோக்கத்தோடு இந்த வினாவை எழுப்பியுள்ளார்! இச்சூழ்ச்சியை சனநாயக உணர்வுள்ள அனைவரும் புரிந்துகொள்வர்.

இலங்கையில் ஈழத்தமிழர்கள் சிங்கள இனவெறியர்களால் கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்ட ஆண்டுகளில் முத்தையா முரளிதரன் இலங்கை அணியில் மட்டைப் பந்து விளையாடி விருதுகள் பெற்றுவந்தார். என்னை போன்றவர்கள் அப்போது, நம் தமிழ்ப் பிள்ளை விருதுகள் வாங்கிவருகிறது என்று பெருமையாகத்தான் கருதினோம். அப்பிள்ளை என்ன சாதி என்றெல்லாம் பார்க்கவில்லை. அதே பிள்ளை பிற்காலத்தில் தமிழினப்படுகொலையை ஆதரித்தும், கோத்தபய இராசபட்சே குடும்பத்திற்கு வாக்கு கேட்டும் வெளிபட்ட போதுதான் முத்தையா முரளிதரனின் இனத்துரோகம் என்னைப் போன்றவர்களுக்குத் தெரியவந்தது.

முத்தையா முரளிதரன் வேடத்தில் விசய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று வலைத்தளங்களில் விமர்சனம் செய்தவர்களை “சோஷியல் மீடியா மாஃபியா” என்று தரக்குறைவாகக் தாக்கியுள்ளார் வினோத். இது தான் சனநாயகமா? இது கண்ணியமான விமர்சனமா?

– பெ.மணியரசன்

Leave a Response