
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது….
சிறப்புத் தீவிரத் திருத்தம் என்று 1 கோடி வாக்காளர்களை நீக்கி உள்ளனர். பிழையைத் திருத்தாமல் மொத்தமாக அடித்துவிட்டு எழுதியதை எப்படி ஏற்க முடியும். 2 மாதங்களில் விடுபட்டவர்களை எப்படிச் சேர்க்க முடியும்?. நாட்டு மக்களின் கடைசி மதிப்புமிக்க உரிமையே இந்த வாக்குதான். அதைக் காப்பாற்றவே பெரும் போராட்டமாக இருக்கிறது.
பீகாரில் பாஜக தங்களுக்கு வராத 81 இலட்சம் வாக்குகளை நீக்கியது. இரட்டைப் பதிவு, உயிரிழந்தவர்களை நீக்குவதை விட்டுவிட்டு மொத்தமாகவே நீக்கினால் எப்படி?. தன் குடிகளுக்குக் கொடுக்க வேண்டிய மதிப்புமிக்க வாக்கு உரிமையையே பாதுகாத்து வழங்க முடியாத அரசு அதிகாரத்தின் பொறுப்பற்ற செயலையை இந்த எஸ்ஐஆர் பணிகள் காட்டுகிறது.
அன்றைக்கு வாக்காளர்கள் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்தனர். இன்றைக்கு ஆட்சியாளர்கள் தங்களுக்கான வாக்காளர்களைத் தேர்வு செய்யும் நிலை உள்ளது. இது கொடுமையானது.
களத்தில் இருப்பவர்களைப் பற்றிப் பேசுவோம் என ஈரோட்டில் பேசிய விஜய், விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்களில் ஏன் போட்டியிடவில்லை?. பெரியார் பிறந்த ஊரில் நிற்கவேண்டியது தானே. திமுகவும், நாதகவும் தான் ஈரோடு கிழக்கில் மோதியது.களத்துக்கே வராதவர் களத்தைப் பற்றி பேசுவது நகைச்சுவை. அவர் பேசுவதை இரசித்துச் சிரித்துவிட்டுப் போய்விட வேண்டும்.
விஜய், ‘ஈரோடு கடப்பாறை’ என்று யாரைச் சொல்கிறார் என்று உங்களுக்குத் தெரியாதா? அதெல்லாம் துருப்பிடித்து பழைய இரும்பு, பாத்திரங்கள் பேரீச்சம் பழத்துக்குப் போட்டாச்சு.
அதிகாரத்தில் உள்ள கட்சிகள்தான் பணம் தருகின்றன. பாஜக பீகாரில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.10 ஆயிரம் வங்கிக்கணக்கில் போட்டது. உத்தரப்பிரதேசத்தில் பணம் கொடுத்தது. தேர்தல் ஆணையம் அதைத் தடுத்ததா?
இங்கு வாக்கை வாங்கிக் கொள்ளும் முறை இருக்கும்போது மக்களுக்கான சேவை என்ற எண்ணம் செத்துவிடும். தொகுதி ரூ.50 கோடி என விலை கொடுத்து வாங்கும் நிலை இருக்கும் வரை பணநாயகம்தான் இருக்கும். ஜனநாயகம் இருக்காது. வாக்குக்குப் பணம் கொடுப்பவர்கள் தேர்தலில் போட்டியிட 10 ஆண்டுகள் தடை என்று இருந்தால் வாக்குக்குப் பணம் கொடுப்பது ஒழிந்துவிடும்.
ஒரு நாடு 100 விழுக்காடும் தனியார்மயத்தைச் சார்ந்து இருந்ததால் வந்த விளைவு. இண்டிகோ விமான நிறுவனம் விமானங்களை இரத்து செய்தது. தனி முதலாளியின் வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சி என்று கட்டமைக்கின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 9,000 கள்ள வாக்குகள் பதிவாகியிருப்பதாக கூறும் அனுராக் தாக்கூர், அவர் பெற்ற வெற்றி செல்லாது என்று அறிவிப்பாரா?.
200 தொகுதியை வாங்கிவிடுவோம் என்பதைத்தான் 200 தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று உதயநிதி கூறுகிறார்.
மகளிர் உரிமை உள்ளிட்ட பல திட்டங்களில் ரூ.1,000 பணம் கொடுக்கும் அரசு அந்தப் பணத்தை எதிலிருந்து எடுக்கிறது?. சொத்துவரி, மின்கட்டணம் உயர்த்திவிட்டது. அரசு தந்த ரூ.1,000 வாங்கி ஆடு, மாடு வாங்கினேன் ஒரு பெண் பேசுகிறார். பொய்யையே புலமை மாதிரி பாடக்கூடாது.
பெண் உரிமை, கல்விக்காக பெரியார் போராடினார் என்று சொல்லும் உங்களை நினைத்து பரிதாபப்படுகிறேன். தேர்தல் வரும்போதும் தீயசக்திகள், தூய சக்திகளாகிவிடும். விஜய் முன்பு தீயசக்திக்கு ஏன் ஓட்டு போட்டார்?
அண்ணா, எம்ஜிஆர் கொள்கைக்கு ஓட்டு போடுவதில்லை. நீங்கள் கொடுக்கும் நோட்டுக்குத்தான் ஓட்டு. அப்படிப் பார்த்தால் காந்திக்குத்தான் ஓட்டு.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கு ஏற்ற வேண்டி ஒருவர் தற்கொலை செய்தது அறிவார்ந்தது கிடையாது. மதங்களைத் தாண்டி மனிதம் தான் புனிதமானது.
இவ்வாறு அவர் கூறினார்.


