
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி வேட்பாளர் கிருஷ்ணன், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதி ஹேமராஜன், ரிஷிவந்தியம் தொகுதி ராதிகா ஆகியோரை ஆதரித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவரிடம், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்திய பொன்ராஜின் பேச்சுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு சீமான் கூறியதாவது….
அவர் அது போன்று நேரடியாக அந்த வார்த்தையைச் சொல்லியிருக்கமாட்டார்.விபச்சாரி என்று சொல்லி இருக்கமாட்டார்,விபச்சாரி போல் என்று சொல்லி இருப்பார்.தவெக தங்கையர்கள் பேசுவதை,பொன்ராஜ் கேட்பது போலவே எல்லோரும் கேட்டிருப்போம்.ஒரு தங்கை சொல்கிறார், என் வீட்டுக்காரரைவிட எனக்கு விஜய்தான் பிடிக்கும்,மற்றொரு தங்கை சொல்கிறார்,குப்பை அள்ளுபவன் ஆட்டோ ஓட்டுகிறவன் எல்லாம் இரண்டு மூன்று பொண்டாட்டி வைத்துக் கொள்ளும்போது அவர் வைத்துக் கொள்ளக் கூடாதா? இன்னொரு தங்கை சொல்கிறார், நாங்கள் அக்காவாக இருப்போம்,தங்கையாக இருப்போம் வேண்டுமென்றால் பொண்டாட்டியாகக் கூட இருப்போம் என்கிறார். இதுபோன்று சில சில காணொளிகள் வருகின்றன.
இதனைப் பார்க்கும்போது எல்லோருக்குமே ஒரு வருத்தமாக இருக்கும்.சமூகத்தை நேசிக்கின்ற எவனுக்குமே நம் பெண்பிள்ளைகள் இப்படி வளருகின்றனரே என்ற வருத்தம் வரும் அந்த வருத்தம்,பொன்ராஜ் ஐயாவுக்கு இருந்தது போல் எனக்கும் இருக்கிறது.நியாயமாகப் பார்த்தால் உங்களுக்கும் இருந்திருக்கும்.அதைப்பார்த்த தவெகவின் தலைவர் தம்பி விஜய்க்கும் இருந்திருக்கும்.அப்போது என்ன சொல்லி இருக்கவேண்டும்,இப்படிப் பேசாதீர்கள் என்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும்.அதை அவர் கண்டிக்கவில்லை.
தொடர்ச்சியாகக் கண்டிக்காமல் அவர்கள் பேசுவதை விட்டுவிட்டார்.தங்கை பேசும்போது இது கண்ணியமற்றது, உங்களுடன் இருப்பவர்கள்,உங்களுடன் பணியாற்றுபவர்கள் கூச்சப்படுவார்கள் என நேர்மையாக அறிக்கை விட்டிருந்தால்,பொன்ராஜ் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க தகுதியும்,நேர்மையும் உங்களுக்கு (விஜய்) வந்திருக்கும்.
இவர் கட்சியில் இருப்பவர்கள் என் குடும்பத்தை,தம்பி சிவகார்த்திகேயன் குடும்பத்தை,அவரது மகளை,அன்பு சகோதரர் அஜித்குமாரின் குடும்பத்தை கீழ்த்தரமாக விமர்சனம் செய்தபோது எங்கே இருந்தீர்கள்?
உங்க கட்சிக்காரங்க மற்ற கட்சிக்காரர்களை,பெண் பிள்ளைகளை கேவலமாக வாய்விட்டுச் சொல்லமுடியாத வார்த்தையில் எழுதுகிறானே.இதையெல்லாம் சேர்த்து எடுத்துட்டு,இதே கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தால் எப்படியிருக்கும்.அவர் கட்சிக்காரர்களை கண்டிக்கவில்லை.இதுக்கு ஒரு வழக்கு போடுங்கள் என நான் கொடுக்கட்டுமா? எப்படி எழுதியுள்ளனர் என புத்தகம் போடட்டுமா? அதை நீங்கள் கண்டித்திருந்தால்,அவர் ஏன் இப்படி பேசப்போகிறார்.
பொன்ராஜ் அரசியலில் இல்லை,வாக்குக்காக இல்லை,சமூகஅக்கறையில்தான் பேசுகிறார்.அவர் வெளியே சொல்லிவிட்டார்,மற்றவர்கள் மனதில் வைத்து புழுங்குகிறார்கள்.அவர் சொன்னது யாரையும் காயப்படுத்த அல்ல. நம் சமூகம் இப்படிப் போய்விட்டதே,நமது ஆன்றோர்கள், சான்றோர்கள்,இந்தமாதிரி சமூகத்தைக் கட்டமைக்கவா பாடுபட்டார்கள் என்ற ஆதங்கத்தில் சொல்கிறார்.அதுவே தவறு என்று படுது,நோக்கத்தோடு எங்களை எழுதுகிறீர்கள்.எங்கள் கட்சிப் பிள்ளைகளை ரொம்ப எழுதுகிறார்கள்.
நீங்கள் எங்கே நடிப்பதை நிறுத்தினீர்கள்,இன்னமும் நடித்துக்கொண்டே இருக்கிறீர்கள்.கோடிப்பிரச்னை நடந்திருக்கு, எந்த பிரச்னைக்கு விஜய் வெளியே வந்துள்ளார்.உங்களால் ஏற்பட்ட கரூர் உயிரிழப்பைக் கூட நீங்கள் பார்க்கவில்லை. அண்மையில் தஞ்சாவூரில் ஒருவர் இறந்துவிட்டார்.அங்கும் போகவில்லை.
என் கட்சி பிள்ளைகள் பார்த்து, சாவு வீட்டில் போய் நின்றார்கள். உங்கள் விஜய், எங்கள் விஜய் உயிரென வரேன்னு சொல்ற, உயிரெடுக்க வரேன் என்பதே சரியான பாட்டு. போன இடமெல்லாம் செத்து இருக்கான். கல்யாணம், வளைகாப்பு சென்றால் உங்களைப் பார்க்க கூட்டம் வராதா? கரூர் சம்பவத்துக்கு ஏன் வரல?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


