ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பை வரவிடமாட்டோம் – சீமான் உறுதி

அனுர குமார திசநாயக தலைமையிலான சிங்கள அரசு, இலங்கை அரசியல் சட்டத்தைத் திருத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.அத்திருத்தம் தமிழினம் இருப்பதையே கணக்கில் கொள்ளாமல் ஒட்டுமொத்த இலங்கையிலும் சிங்கள மக்களே இருக்கிறார்கள் எனும்படி அமையவிருக்கிறது.

இதனால் கொதித்தெழும் ஈழத்தமிழர்கள் அதற்கெதிரான போராட்டங்களைத் தொடங்கியிருக்கின்றனர்.

அதன் ஒருபகுதியாக கஜேந்திரகுமார் மற்றும் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் தமிழ்நாட்டுக்கு வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் ஆகிய தலைவர்களைச் சந்தித்து மனு கொடுத்தனர்.

அதில்,

சிங்கள அரசின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து ஏக்கிய ராஜ்ய அரசியலமைப்பு நிறைவேற்றப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், புதிய அரசாங்கம் உருவாக்கவுள்ள புதிய அரசியலமைப்பில் தமிழ்த் தேசத்தின் தனித்துவமான இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை
அனுபவிக்கக்கூடிய சமஸ்டி முறைமை உருவாக்கப்படுவதனை உறுதிப்படுத்துவதற்குத் தமிழ்நாடு அரசு மற்றும் அரசியல் கட்சிகள்,இந்திய அரசை வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதோடு, நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் தமிழ்நாடு மீனவர்களின் எல்லை தாண்டும் பிரச்சினையை இலங்கை அரசு தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி தமிழ்நாட்டையும் ஈழத்தமிழர்களையும் நிரந்தரப் பகையாளிகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்றும், இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி இந்திய நலன்களுக்கு முரணான வெளிச்சக்திகள் இலங்கையில் காலூன்றி வருவதனையும் சுட்டிக்காட்டியிருந்தார்கள். எல்லை தாண்டிய மீன்பிடியைக் கட்டுப்படுத்தி இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண தமிழ்நாடு அரசு தலையிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள்.

இதன் தொடர்ச்சியாக நாம் தமிழர் சீமானையும் சந்தித்திருக்கிறார்கள்.

அதுகுறித்து கஜேந்திர குமார் கூறியதாவது…

நாம் தமிழர் கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய செந்தமிழன் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசியப் பேரவைக்கும் இடையிலான சந்திப்பு டிசம்பர் 19 அன்று நீலாங்கரையிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.இச்சந்திப்பு
19-12-2025 காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகியது. சுமார் 2.00 மணிநேரம் நேரம் இடம்பெற்றது.

இதன்போது,தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்பட குரல் கொடுக்க ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியம்.ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை நிராகரிப்பதற்கான அவசியம்,ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும் ஆகிய விடயங்கள் முக்கியமாகப் பேசப்பட்டன.

இச்சந்திப்பில்,தமிழ்த் தேசியப் பேரவை சார்பில்,கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாமஉ,பொ.ஐங்கரநேசன் தலைவர் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்,செ.கஜேந்திரன்,செயலாளர் ததேமமு,த.சுரேஸ் தேசிய அமைப்பாளர்
க.சுகாஷ் (சிரேஸ்ட சட்டத்தரணி)உத்தியோகபூர்வ பேச்சாளர், ந.காண்டீபன் (சிரேஸ்ட சட்டத்தரணி) பிரசாரச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை ஏற்கமாட்டோம் அதை உறுதியாக எதிர்ப்போம் என்று சீமான் உறுதியாளித்தார்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response