சங்கிகளின் பிளவுபடுத்தும் கருத்துக்கு தேசியவிருது – கேரள முதலமைச்சர் கடும் எதிர்ப்பு

71 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று (ஆகஸ்ட் 01) அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த திரைப்படமாக ‘12 ஆவது ஃபெயில்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த தமிழ்த் திரைப்படமாக ‘பார்க்கிங்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்தப் படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த உறுதுணை நடிகர் விருதும், இப்படத்துக்கு சிறந்த திரைக்கதைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை இயக்கிய சுதிப்தோ சென்னுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதும் அப்படத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு இரண்டு தேசியவிருதுகள் வழங்கியிருப்பது குறித்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியிருப்பதாவது….

கேரளாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் தவறான தகவல்களைப் பரப்பி, வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் ஒரு திரைப்படத்தை கவுரவிப்பதன் மூலம், தேசிய விருதுகள் நடுவர் குழு, சங்பரிவாரின் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தில் வேரூன்றிய ஒரு கதைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக எப்போதும் நல்லிணக்கம் மற்றும் எதிர்ப்பின் கலங்கரை விளக்கமாக நிற்கும் நிலமான கேரளாவுக்கு, இந்த முடிவு மிகப்பெரிய அவமானத்தைத் தந்துள்ளது. மலையாளிகள் மட்டுமல்ல, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும், அரசியலமைப்பு மதிப்புகளைப் பாதுகாக்க தங்கள் குரலை எழுப்ப வேண்டும்

இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மே 5, 2023 அன்று வெளியான இந்தப்படம், கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்கள் குழு இசுலாம் சமயத்திற்கு மாற்றப்பட்டு இசுலாமிய போராளிக் குழுவில் சேருவது போன்ற கதையைக் கொண்டது. இந்தத் திரைப்படம் லவ் ஜிகாத் என்ற சதிக் கோட்பாட்டை முன்வைத்து, கேரளாவைச் சேர்ந்த பல இந்து மற்றும் கிறித்துவப் பெண்கள் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டு இசுலாமிய போராளிக் குழுவில் சேர்க்கப்படுவதாகக் கூறுகிறது.

முற்றிலும் பொய்யான பல தகவல்கள் மற்றும் கருத்துகளைச் சொன்னதால் இப்படத்துக்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

அப்படிப்பட்ட படத்துக்குத்தான் 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதற்குத்தான் கேரள முதலமைச்சர் கடும் எதிர்வினை ஆற்றியுள்ளார்.

Leave a Response