அதிமுக – பாஜக கூட்டணியை அமித்ஷா அறிவித்ததிலிருந்து அதிமுகவில் பல்வேறு எதிர்ப்புகள் அதிருப்திகள் கட்சியிலிருந்து விலகல் ஆகியன நடந்து வருகின்றன.
அதிமுக சட்டமன்றக் கட்சியின் துணைத்தலைவராக இருக்கும் ஆர்.பி.உதயகுமாரும் அதிருப்தியாளர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
அதற்கு என்ன காரணம்?
அதிமுக பாஜக கூட்டணியை உறுதி செய்யும் வகையில் சென்னையில் நடந்த அமித்ஷாவின் செய்தியாளர் சந்திப்பில் தன்னை மேடையை விட்டு கீழே இறக்கிவிட்டு, வழக்கம்போல கொங்குப் பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகளை மட்டும் எடப்பாடி மேடை ஏற்றியதாக கூறி உதயகுமார் தற்போது அதிருப்தியில் இருப்பதாக மதுரை மாவட்ட கட்சியினர் மத்தியில் பரபரப்பு பேச்சு ஓடுகிறது.
அன்றைய தினம் அமித்ஷா செய்தியாளர் சந்திப்பிற்காக எடப்பாடியுடன், வேலுமணி, முனுசாமி மற்றும் உதயகுமார் உள்ளிட்டோர் மேடைக்கு வந்தனர். ஆனால், மேடையில் போதிய நாற்காலி இல்லை எனக்கூறி தன்னுடன் இருந்த வேலுமணி, முனுசாமியை மேடை ஏற்றிய எடப்பாடி, உதயகுமாரை கீழே இருக்குமாறு கூறி விட்டார். இதைச் சற்றும் எதிர்பாராத உதயகுமார் பெரும் அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் சந்தித்துள்ளார். அதிமுக சட்டமன்ற துணைத்தலைவரான தனக்கே மேடையில் இடம் இல்லையா என கடும் அதிருப்தியடைந்த உதயகுமார், நிகழ்ச்சி நடந்த விடுதியில் இருந்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிச் சென்றுள்ளார்.
அன்று மாலை எடப்பாடி வீட்டில் அமித்ஷாவிற்கு கொடுக்கப்பட்ட விருந்து நிகழ்ச்சியிலும் உதயகுமார் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விருந்திற்கும் எடப்பாடி தரப்பில் இருந்து உதயகுமாருக்கு முறையான அழைப்பு வரவில்லை என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
தென்மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவினரோ, எடப்பாடி தொடர்ந்து தென்மாவட்டங்களையும், முக்குலத்தோர் சமுதாயத்தினரையும் திட்டமிட்டுப் புறக்கணித்து வருவதாகவும், தான் சார்ந்த கொங்கு மண்டலத்தையும், குறிப்பிட்ட அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கட்சியில் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் கருதுகின்றனர்.
அதிமுக பிளவுபட்ட போதும், பாஜக கூட்டணியில் இருந்து விலகிய போதும், மீண்டும் பாஜக ஆதரவு நிலை வந்தபோதும் முதல் ஆளாய் எடப்பாடியின் பின்னால் நின்ற உதயகுமாருக்கே எடப்பாடி ஆப்பு வைப்பதாகவும், தன்னைத் தவிர வேறு யாரையும் கட்சியில் முன்னிலைப்படுத்த விரும்பாமல் தான் இதுபோன்ற நிகழ்வுகளை எடப்பாடி திட்டமிட்டு நிறைவேற்றி வருவதாகவும், உதயகுமாரின் ஆதரவாளர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.
எடப்பாடியை வெளிப்படையாக யாரும் ஆதரிக்கத் தயாராக இல்லாதபோதே, தான் முதல் ஆளாய் ஆதரித்ததாகவும்,அந்த நன்றி இல்லாமல் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன்னை எடப்பாடி திட்டமிட்டுப் புறக்கணித்து வருவதாகவும் எடப்பாடி மீது உதயகுமார் மன வருத்தம் அடைந்து தனக்கு நெருக்கமானவர்களிடம் வருத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், எடப்பாடியின் தொடர் நடவடிக்கைகளைப் பொறுத்து,அடுத்த முடிவை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியிருப்பதாகத் தெரிகிறது.
ஏற்கனவே எடப்பாடி மீது அதிருப்தியில் உள்ள செங்கோட்டையன் பகிரங்கமாகவே போர்க்கொடி தூக்கி தனியாகச் செயல்பட்டு வருகிறார். இதேபோல், எடப்பாடியின் குரலாக ஒலித்து வந்த ஜெயக்குமாரும், அதிமுக-பாஜக கூட்டணி அமைந்ததால் அதிருப்தியில் மவுனமாக இருந்து வருகிறார்.
இந்தச்சூழலில் எடப்பாடிக்கு எதிராக உதயகுமாரும் போர்க்கொடி தூக்கி உள்ளது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக தென்மாவட்ட அதிமுகவில் இது பெருங்கோபமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.