
கடந்த சில ஆண்டுகளாக குறிப்பாக அண்ணாமலை மாநிலத் தலைவராகப் பதவி ஏற்ற பிறகு அதிமுக, பாஜக இடையே மோதல் எழுந்தது. இந்நிலையில்,2024 மக்களவைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. இதனால் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தே தீர வேண்டும் என்று முடிவு செய்தது.
இதற்காகப் பலமுறை அதிமுகவுக்கு தூது விட்டது. எடப்பாடி பழனிச்சாமி மசியவில்லை. இந்தநிலையில், எடப்பாடியின் உறவினர் இராமலிங்கம் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு ரூ.650 கோடிக்கு வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. இந்தநிலையில் முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது இலஞ்ச ஒழிப்பு வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை முன்னாள் அமைச்சர்கள் மீது கை வைக்கலாம் என்ற பரபரப்பு எழுந்தது.
இந்தநிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திடீர் பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டு டெல்லி சென்றார். அன்றிரவு கட்சி நிர்வாகிகளுடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து நீண்ட நேரம் பேசினர். பின்னர் ஒன்னரை மணி நேரம் அமித்ஷா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தனியாக ஆலோசனை நடத்தினர்.
அப்போது, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியாக தேர்தலில் போட்டியிடுவது பற்றிப் பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது, தமிழ்நாடு பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலையை மாற்றவேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி, புதன்கிழமை மாலை டெல்லியில் இருந்து சென்னை திரும்பி வந்துள்ள நிலையில், பாஜக மேலிடத்தில் இருந்து, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, டெல்லிக்கு உடனே புறப்பட்டு வரும்படி அவசர அழைப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அண்ணாமலை நேற்று முன்தினம் இரவு விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் செல்வதாக இருந்தது. ஆனால் அந்தப் பயணம் திடீரென தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை 6.50 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் அண்ணாமலை டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
வழக்கமாக விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு நீண்டநேரம் பேட்டி அளிக்கக்கூடியவர். இம்முறை செய்தியாளர்கள் சந்திப்பைத் தவிர்த்துவிட்டு நேரடியாக விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டார்.
தமிழ்நாட்டில் பாஜக மாநிலத் தலைவர் பதவிக் காலம் முடிந்த பிறகும் அறிவிக்காமல் உள்ளனர். இப்போது அண்ணாமலையை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கவிருப்பதாகத் தகவல் பரவிவருகிறது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக, அண்ணாமலை ஒன்றிய அமைச்சர் ஆகப் போகிறார், மாநில ஆளுநர் ஆகப்போகிறார் என்றெல்லாம் அவருடைய ஆதரவாளர்கள் பேசிவருகிறார்கள்.


