பூமி கொஞ்சம் குலுங்கியது – மியான்மர் தாய்லாந்தில் பெரும் சோகம்

ஆசியாவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து நேற்று 6 முறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 புள்ளிகளாக பதிவானது. இதன் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. பல கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல் சரிந்தன. அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்தவர்கள், விடுதிகளில் இருந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

பல இடங்களில் கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டன. பாங்காங்கின் பிரபலமான சதுசாக் சந்தை அருகில் கட்டுமானப் பணியில் இருந்த அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் அங்கு பணியில் இருந்த 90 ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர். சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றது. நைப்பியிதோவில் உள்ள பெரிய மருத்துவமனை ஒன்று ‘அவசர சிகிச்சை பிரிவு’ ஆக அறிவிக்கப்பட்டது. 1,000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே காயம்பட்ட பலர் வரிசையாக சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாண்டலேயில் ஒரு மசூதியில் தொழுகை செய்த அத்தனை பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். மேலும் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் நிலநடுக்கத்தால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மியான்மரில் நேபிடேவ் மற்றும் மண்டலே உட்பட 6 பிராந்தியங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. மண்டலேயில் முன்னாள் அரச குடும்பத்தின் பங்களா சேதமடைந்தது.

மியான்மருக்கு அருகில் உள்ள தாய்லாந்திலும் இது வெகுவாக உணரப்பட்டது.பாங்காக்கில் சில உயர்ந்த கட்டிடங்கள் சரிந்து விழுந்த நிலையில், பலரும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பாங்காங்கில் சாதுசாக் பகுதியில் 30 மாடிக் கட்டிடம் ஒன்று நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தது. இதேபோல் மேலும் சில கட்டிடங்களும் சரிந்து விழுந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினாவத்ரா நாட்டில் அவசர நிலையை அறிவித்துள்ளார்.

தலைநகர் பாங்காக் பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. சீனாவின் யுனான் மற்றும் ஷிசுயான் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. வடக்கு மியான்மர் எல்லைப் பகுதியில் உள்ள ருயிலி பகுதியில் நிலநடுக்கத்தால் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது, சில வீடுகள் சேதம் அடைந்துள்ளன என்று சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதே போல் இந்தியா, வியட்நாம், வங்கதேச பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.அதிகமாக பாதிப்புக்கு உள்ளான மியான்மர், தாய்லாந்தில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அங்கு பலி எண்ணிக்கை தற்போது வரை மியான்மரில் 144 பேரும் தாய்லாந்தில் 9 பேரும் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

மியான்மரில் ஐராவதி ஆற்றின் மீது ஒரு பழைய பாலம் மற்றும் பல குடியிருப்புக் கட்டிடங்களும் இடிந்து விழுந்தன, மாண்டலே நகரம் முழுவதும் நிலநடுக்கத்தின் பேரழிவில் சிக்கி உள்ளது. மாண்டலே விமானநிலையம் சேதம் அடைந்தது. இதனால் விமானப் போக்குவரத்து முடக்கப்பட்டது. தாய்லாந்தின் எல்லையை ஒட்டிய ஷான் மாநிலத்தின் டவுங்கி நகருக்கு அருகில் ஒரு புத்த மடாலயம் இடிந்து விழுந்தது. மாண்டலே மற்றும் யாங்கூன் இடையேயான சாலைகளும் சேதமடைந்துள்ளன.

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும் காட்சிகளாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.இது உலகம் முழுதும் பேரரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2002 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான மெளனம் பேசியதே படத்தில் பாடலாசிரியர் சினேகன் எழுதிய,ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க எனத் தொடங்கும் பாடலில்,
பூமி கொஞ்சம் குலுங்கினாலே…
நின்று போகும் ஆட்டமே…

என்று எழுதியிருந்தார்.

இன்று மியான்மர் மற்றும் தாய்லாந்தில் பூமி குலுங்கியதால் பல்லாயிரக்கணக்கானோர் நிலை அதுதான் என்பது கவலைக்கும் வேதனைக்கும் உரிய நிகழ்வாகியிருக்கிறது.

Leave a Response