அரியவகை கடல்வாழ் உயிரினம் கடற்பசு – மனித அலட்சியத்தால் உயிரிழந்த பரிதாபம்

கடற்பசு அல்லது ஆவுளியா(Dugong) எனப்படுவது கடற் பாலூட்டிகளில் ஒரு இனமாகும். மன்னார் வளைகுடா கடற்தேசியப் பூங்காவிலும் இவை வாழ்ந்து வருகின்றன. இவற்றை இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம்(IUCN) அழிவு அபாயத்திலுள்ள விலங்குகளின் சிவப்புப் பட்டியலில் சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்தில் நட்சத்திர அந்தஸ்து கவனம் பெற்றிருந்த மரியம் எனப்படும் கடற்பசுக்கன்று பிளாஸ்டிக் துண்டங்களை உட்கொண்ட காரணத்தால் அகால மரணமடைந்துள்ளது.

தெற்குத் தாய்லாந்தின் கிராபி கடற்கரையில் கடந்த சித்திரை மாதம் அனாதரவாகக் காணப்பட்ட இந்த கடற்பசுக்கன்று மரியம் எனப் பெயர் சூட்டப்பட்டு பாதுகாக்கப்பட்ட கடற் பரப்பில் பராமரிக்கப்பட்டு வந்தது. தினமும் 15 தடவைகள் கடற்புற்களும், புட்டிப்பாலும் உணவாகக்கொடுக்கப்பட்டது. எனினும், கடந்த சனிக்கிழமை (18.08.2019) மரியம் பரிதாபமாக உயிரை விட்டுள்ளது.

மரியத்தின் உடலைப் பரிசோதனைக்குட்படுத்திய கால்நடை மருத்துவர்கள் அதன் இரைப்பையில் தேங்கியிருக்கும் பிளாஸ்டிக் துண்டுகளே மரணத்துக்கான காரணம் எனத் தெரிவித்துள்ளனர்.

மனிதன் பயன்படுத்திவிட்டுக் கடலில் வீசும் திடக்கழிவுகளில் பிளாஸ்டிக்தான் முதலிடம் வகிக்கிறது. கடலின் ஒவ்வொரு சதுர மைல் பரப்பளவிலும் சுமார் 46 ஆயிரம் துண்டுகள் பிளாஸ்டிக் கழிவுகள் மிதப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவை டீ. டீ. ரி போன்ற கிருமி நாசினிகளை ஈர்த்து நஞ்சாக மாறி வருகின்றன.

இந்தப் பிளாஸ்டிக் கழிவுகளால் ஆண்டு தோறும் சுமார் ஒரு மில்லியன் கடற்பறவைகளும், ஒரு இலட்சம் கடற் பாலூட்டி விலங்குகளும், எண்ணுக்கணகில்லாத மீன்களும் பலியாகி வருவதாக ஐக்கியநாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஒரு தடவை பயன்படுத்திவிட்டு வீசும் பிளாஸ்டிக் பைகள். தட்டுகள், குவளைகள் போன்ற பொருட்களுக்கான கட்டுப்பாடுகளும், தடைகளும் பல நாடுகளில் சாத்தியமாகி அவ்விடத்தை மீண்டும் இயற்கை உற்பத்திகளான அழகிய கடதாசிப் பைகளும், அட்டைப்பெட்டிகளும், துணிப்பைகளும் மெல்ல ஈடுசெய்து வருகின்றன. இம் மந்தகதி மாற்றீடு கடுகதி வேகம் பெற வேண்டும்.

ஏனைய பிளாஸ்டிக்குகளுக்கான வெற்றிகரமான மாற்றீடு இன்னமும் அறிவியலாளர்களின் சிந்தனையை எதிர்பார்த்துக் கண்டறியப்படாமலே உள்ளது. அது வரையில் தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் வாங்குவதைத் தவிர்ப்பது, தேவைகளை இயன்றளவு குறைத்துக் கொள்வது, முடிந்தவரை நீண்டகாலம் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவது, எறிவதற்கு முன்னால் இன்னொரு முறை பயன்படுமா என்று சிந்திப்பது, கழிவுகளில் இருந்து சுற்றுச்சூழலுக்குப் பாதகம் இல்லாத முறையில் மீண்டும் பிளாஸ்டிக்கைப் பிரித்தெடுப்பது போன்ற கழிவு மேலாண்மையைக் கையில் எடுக்கவேண்டும்.

நம்மைச் சூழ்ந்துள்ள பிளாஸ்டிக்கின் அபாயங்களில் இருந்து தப்பிக்கத் தற்போது நம் முன்னால் உள்ள எளிய வழிமுறைகள் இவைதாம்.

– பொ. ஐங்கரநேசன்

Leave a Response