பாஜக இடத்தைப் பிடித்த மன்மோகன்சிங் – மாநிலங்களவைக்கு தேர்வு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தானில் இருந்து போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வாகியுள்ளார். காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (86).

இவர் அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு வந்தார். கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை அசாமில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வந்தார். மேலும், 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார். இவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் 2019 ஜூன் 14 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

அசாம் மாநிலத்தில் காங்கிரசுக்கு போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பலம் இல்லாததாலும், அங்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாகாததாலும் மீண்டும் மன்மோகன் சிங்கை மாநிலங்களவைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது.

இதனிடையே, இராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் மதன் லால் சைனி கடந்த ஜூனில் உயிரிழந்தார். இதனால், ஒரு உறுப்பினர் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தப் பதவிக்கு வருகிற 26 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடந்த 14 ஆம் தேதி கடைசி நாளாக இருந்தது. தொடர்ந்து, இந்த உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட மன்மோகன் சிங் கடந்த 13 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று பரிசீலனை செய்யப்பட்டு ஏற்கப்பட்டது. இந்நிலையில், மன்மோகன் சிங் ராஜஸ்தானில் இருந்து போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வாகியுள்ளார். ராஜஸ்தானில் காங்கிரசு ஆட்சி நடக்கும் நிலையில், அக்கட்சிக்கு 100 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதால் மன்மோகன் வெற்றி வேட்புமனு தாக்கல் செய்தபோதே உறுதியானது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் மாநிலங்களவையில் பாஜக வின் ஒரு இடத்தை காங்கிரசு பிடித்திருக்கிறது.

Leave a Response