நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாட்டின் இயற்கை வளம், கனிம வள பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமை தாங்கினார். ஓய்வு .
மாநாட்டில்,டிடிவி.தினகரன்,பழ.நெடுமாறன்,பெ.மணியரசன், வேல்முருகன், பூவுலகின் நண்பர்கள் கோ.சுந்தரராஜன், பச்சை தமிழகம் சுப.உதயகுமார்,கு.இராமகிருஷ்ணன்,ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
மாநாட்டில் பழ.நெடுமாறன் பேசுகையில்,
தமிழகத்தில் இயற்கை வளங்கள் அதிக அளவில் கொள்ளையடிக்கப்படுகின்றன. பல நூற்றாண்டுகளாக நம் முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்த கனிம வளங்கள் நம் கண்முன்னே கொள்ளையடிக்கப்படுவதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், வருகிற தலைமுறை நம்மை மன்னிக்காது. மாநிலங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் இருந்தால், இந்தியா விரைவில் சோவியத் யூனியன் போல பல துண்டுகளாகச் சிதறும் என்றார்.
டி.டி.வி. தினகரன் பேசியதாவது…..
சுற்றுப்புறச்சூழல், இயற்கை வளங்கள், விவசாயத்தைப் பாதிக்கின்ற அனைத்துத் திட்டங்களையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எதிர்க்கும்.
நரிமனம் போன்ற ஊர்களில் ஓ.என்.ஜி.சி. முதன் முதலாக வந்தபோது, தங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நோக்கத்தில் விவசாயிகள் தங்களது நிலங்களை வழங்கினர்.
ஆனால் முப்போகம் விளைந்த நிலங்கள் தற்போது தரிசாக மாறி வருகின்றன. தமிழக அரசு மழை நீரைச் சேமிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நீர் மேலாண்மைக்கான திட்டங்கள் தமிழக அரசிடம் இல்லை. மத்திய அரசு தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் இல்லை என்று சொல்லிவிட்டு, தற்போது, ஆய்வு மேற்கொண்டு வருகின்றது.
தமிழக மக்கள் தாங்கள் விரும்பும் மொழி, கல்வி முறையை பின்பற்ற மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். அறுதிப் பெரும்பான்மை பெற்றுவிட்ட காரணத்தால், தமிழர்களை வெளிநாட்டினரைப் போல் நடத்தக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.