மக்களவை தேர்தலைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் கூடியது. இதில், மக்களவையில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. முதல் நாளில், பிரதமர் மோடி உள்ளிட்ட 262 உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
இதைத் தொடர்ந்து, கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான நேற்று எஞ்சிய உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த உறுப்பினர்கள் தமிழில் உறுதிமொழி வாசித்து பதவியேற்றதால் அவையே அதிர்ந்தது.
மத்திய சென்னை திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் தமிழில் உறுதிமொழி ஏற்று பதவி ஏற்றுக்கொண்ட பிறகு ‘நீட் வேண்டாம், நீட் தேர்வை இரத்து செய்ய வேண்டும்’ என முழக்கமிட்டார்.
அடுத்து, திமுக உறுப்பினர்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், கதிர் ஆனந்த் ஆகியோரும் தமிழில் உறுதிமொழி ஏற்று பதவி ஏற்றுக்கொண்டனர். பலரும் உறுதிமொழி ஏற்ற பிறகு வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு என முழக்கமிட்டனர். திருவள்ளூர் காங்கிரஸ் உறுப்பினர் சசிகாந்த் தமிழில் பதவியேற்றுக் கொண்ட பிறகு தலித்துகள், சிறுபான்மையினர் மீதான தாக்குதலை நிறுத்துக என முழக்கமிட்டார்.
விசிக உறுப்பினர் ரவிக்குமார் தமிழில் உறுதிமொழி ஏற்று பதவியேற்றுக் கொண்ட பிறகு, வாழ்க அம்பேத்கர், வாழ்க பெரியார், வாழ்க எழுச்சித் தமிழர் என முழக்கமிட்டார். விசிக தலைவர் திருமாவளவன் தமிழில் பதவியேற்ற பிறகு வாழ்க இந்திய அரசியலமைப்புச் சட்டம், வாழ்க தேசிய ஒருமைப்பாடு என முழக்கமிட்டார். கிருஷ்ணகிரி காங்கிரசு உறுப்பினர் கோபிநாத் தெலுங்கில் உறுதிமொழி வாசித்தார்.கடைசியில் தமிழில் நன்றி, வணக்கம், ஜெய் தமிழ்நாடு என முடித்தார்.
மயிலாடுதுறை காங்கிரசு உறுப்பினர் சுதா, தமிழ்க்கடவுள் எம்பெருமான் முருகன் மீது ஆணையாக.. எனக் கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
வெகுமக்களைக் கவரும் வகையில் அவர்களுக்குப் பிடித்த வகையில் தெய்வபக்தியை கையிலெடுத்து ஜெய்ஸ்ரீராம் என்று கத்திக் கொண்டிருக்கும் பாஜகவினருக்கு அதே தெய்வபக்தி மூலம் பதிலடி கொடுத்துள்ளார் சுதா என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.