பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்குள் அத்துமீறும் எண்ணெய்நிறுவனம் – மக்கள் போராட்டம் டிடிவி.தினகரன் ஆதரவு

மயிலாடுதுறை அருகே ஓஎன்ஜிசி நிறுவனத்தின் இராட்சத குழாய்களை இறக்கி வைக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை அருகே நீடூரை அடுத்த வை.பட்டவர்த்தி கிராமத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் கனரக வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்ட இராட்சத குழாய்களை இறக்கி வைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டது.

இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் அதனைப் பொருட்படுத்தாமல் அந்த நிறுவனம் 5-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மூலம் இராட்சத குழாய்களை கொண்டு வந்து இறக்கி வருகிறது.

எண்ணூர்-தூத்துக்குடி இடையே எண்ணெய் எரிவாயு குழாய் அமைக்கும் பணிக்காக இந்த இராட்சத குழாய்கள் இறக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், அதனை ஏற்காத பொதுமக்கள் நேற்று திடீரென குழாய்களை அப்புறப்படுத்தக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் காளிதாசன், பா.ம.க. மாவட்டச் செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியச் செயலாளர் ரவி, இயற்கை விவசாயி இராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் மயிலாடுதுறை-மணல்மேடு சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை வட்டாட்சியர் மகேந்திரன், காவல்துறை ஆய்வாளர் செல்வம் மற்றும் காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உதவிஆட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி சுமூக தீர்வு காண்பது என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிகழ்வையொட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள பதிவில்….

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிக்குட்பட்ட மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள வை.பட்டவர்த்தி கிராமத்தில் ஓஎன்ஜிசி (ONGC) நிறுவனம் திடீரென இராட்சத குழாய்களைக் கொண்டுவந்து இறக்கிவருவது கண்டனத்திற்குரியது.

விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிக்கு நடுவே இதற்கான கிடங்கினை அமைத்திருக்கிறார்கள். ONGC நிறுவனத்தின் இந்தச் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடிவரும் கிராம மக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உறுதுணையாக இருக்கும்.

காவிரி டெல்டா பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டங்களை புதிதாகத் தொடங்குவதற்கு தமிழக அரசு எந்த அனுமதியும் வழங்கக்கூடாது.

மயிலாடுதுறை வை.பட்டவர்த்தியில் கொண்டுவந்து இறக்கப்பட்டுள்ள இராட்சத குழாய்களை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response