வெகுண்டெழுந்த மக்கள் கறுப்புக்கொடி போராட்டம் – ஆளுநர் அதிர்ச்சி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட ஆர்.என்.ரவி, பலத்த பாதுகாப்புடன் தருமபுரம் ஆதீனத்தை வந்தடைந்தார்.

மயிலாடுதுறையை அடுத்த மன்னம்பந்தல் ஏ.வி.சி.கல்லூரி எதிரில் தமிழக ஆளுநரின் வாகனம் சென்றபோது விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மற்றும் மசோதாகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதைக் கண்டித்தும்,ஆளுநரைத் திரும்பச் செல்ல வலியுறுத்தியும் கறுப்புக்கொடி ஏந்தி முழக்கமிட்டனர்.

ஆளுநரின் பார்வைக்குப் போராட்டக்காரர்கள் படாத வகையில் காவல்துறையினர் வாகனத்தைக் கொண்டு வந்து மறைத்தனர். அப்போது போராட்டக்காரர்கள் கறுப்புக் கொடியை சாலையில் தூக்கி எறிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதனால் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பாகக் காணப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தமிழக ஆளுநருக்குக் கறுப்புக்கொடி காட்டிய நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தொடர்ந்து தருமபுரம் ஆதீனத்தில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு காலை 11 மணி அளவில் ஆர்.என்.ரவி அங்கிருந்து புறப்பட்டு திருவாவடுதுறை நோக்கி சென்றார். மயிலாடுதுறை தொடர்வண்டி மேம்பாலத்தைக் கடந்தபோது திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தோர் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டோரைக் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

கறுப்புக்கொடி காட்ட மக்கள் திரண்டதால் ஆளுநர் அதிர்ச்சியடைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதன் எதிரொலியாக பாஜக அதிமுக ஆகிய கட்சிகள் ஆளுநருக்குக் கறுப்புக்கொடி காட்டியதைக் கண்டித்துள்ளனர். ஆளுநரும் உடனே தில்லி செல்லவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response