மோடியைப் புகழ்ந்த விவகாரம் – மன்னிப்பு கேட்டார் இயக்குநர் கே.பாக்யராஜ்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பாக்யராஜ் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய பாக்யராஜ், “பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்கள் சென்றாலும் ஒய்வில்லாமல் நாட்டுக்காக உழைக்கிறார். பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனங்களில் எழுதப்பட்டு இருக்கிறது. அதனால், விமர்சனங்களுக்கெல்லாம் பிரதமர் மோடி செவி சாய்ப்பதில்லை. இந்தியாவுக்கு மோடி போன்ற பிரதமர்தான் தேவை. ஆனால், பிரதமர் மோடியை விமர்சனம் செய்ய எப்போதுமே சிலர் தயாராக உள்ளனர். மோடி ஜி-க்கு நான் ஒரு ஆலோசனை வழங்குகிறேன். உங்களை விமர்சிப்பவர்களை குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள் என நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும். உங்களைத் தவறாக விமர்சனம் செய்பவர்களுக்கு வாயும் சரியாக இயங்கவில்லை.. காதும் சரியாக கேட்கவில்லை” என்று கூறினார்.

அவருடைய இந்தப் பேச்சுக்குக் கடும் எதிர்ப்புகள் வந்தன.

இந்நிலையில் இது குறித்து நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் மன்னிப்பு கோரி காணொலி வெளியிட்டுள்ளார். அதில்…

குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என நான் கூறியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு மாதம், இரண்டு மாதம் முன்பே பிறக்கும் குழந்தைகளைக் குறை பிரசவம் என்பார்கள், ஆனால் குறை இருக்காது. நான் பேசியது யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்கிறேன்.

மாற்றுத்திறனாளிகளை நான் அக்கறையுடனே பார்க்கிறேன்; எப்போதும் அப்படியேதான் இருப்பேன். தமிழகத்தில் பிறந்து, தமிழில் படித்து, தமிழ் சினிமா என்று வளர்ந்து வந்துள்ளேன். நான் திராவிட இயக்கத் தலைவர்களைப் பார்த்து வளர்ந்தவன், நான் பாஜக அல்ல. திராவிட இயக்கத் தலைவர்களின் கருத்துகள் அடிப்படையில் எனது சினிமா இருக்கும், இனியும் அது தொடரும்

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response