ஈரோட்டில் 696 பேர் கையில் தனிமுத்திரை – கொரோனா தடுப்பு நடவடிக்கை

ஈரோட்டில் கரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்த பகுதியில் 169 குடும்பத்தைச் சேர்ந்த 696 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தாய்லாந்து நாட்டில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சிலர் ஈரோடு மாவட்டத்துக்கு வந்தனர். பின்னர் இவர்கள் தொழுகைக்காக ஈரோடு மஜீத் வீதி மற்றும் கொல்லம்பாளையம் பகுதியில் உள்ள பள்ளிவாசல்களுக்கு வந்தபோது தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் இவர்களை பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று தீவிர கண்காணிப்பில் வைத்திருந்தனர். இதில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

இருப்பினும் அவர்களுடன் வந்தவர்களும், நெருங்கிய தொடர்பில் இருந்த 10 பேர் என மொத்தம் 13 பேர் தனி வார்டில் சிகிச்சையில் உள்ளனர். அவர்களுடைய பரிசோதனை விபரம் இன்னும் வரவில்லை. வந்த பின்னர் தான் அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருக்கிறதா? இல்லையா என்பது தெரியவரும்.

தாய்லாந்து நாட்டுக்காரர்கள் வந்து சென்ற ஈரோடு புதுமஜீத் வீதி, சுல்தான் பேட்டை, கந்தசாமி வீதி, கொங்கலம்மன் கோவில் வீதி, கொல்லம்பாளையம், ஓட்டுக்கார சின்னையா வீதி, ஹசன் வீதி உள்பட 9 வீதிகள் முழுமையாக காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அங்குள்ள 169 குடும்பத்தை சேர்ந்த 696 பேர் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மேலும் மேற்கண்ட 9 வீதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பணியாளர்கள் அங்குள்ள சாக்கடை கால்வாயை தூர்வாரி கிருமி நாசினி தெளித்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவைகள் தவிர வேறு எந்தக் காரணங்களுக்காகவும் வெளியே செல்வதற்கும், வெளி நபர்கள் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை காவல்துறை கண்காணித்து வருகிறார்கள்.

மேலும் அவர்களுக்காக மொபைல் ஏ.டி.எம். உள்பட அனைத்து அத்தியாவசிய பொருட்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றிய ஸ்டிக்கர் வீடுகளில் அடையாளத்துக்காக ஒட்டப்பட்டுள்ளது. 696 பேரின் கைகளிலும் தனிமுத்திரை பதிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள், 15 நாளில் உரிய பரிசோதனைக்குப்பின், வழக்கமான நடைமுறைக்கு மாறுவார்கள். இதற்கிடையில் மைலம்பாடி தொழிற்சாலையில் இருந்து வெளிமாநிலத்தவர் 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேருக்கு காய்ச்சல் இருந்தது. அவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் கூறுகையில்,ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநில எல்லைகள் அடைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படுகின்றன. மத்திய அரசிடம் இருந்து இதுவரை எங்களுக்கு எவ்வித அறிவுறுத்தலும் வரவில்லை. ஈரோடு மாவட்டத்தைத் தனிமைப்படுத்துவது தொடர்பாக இதுவரை எங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து உத்தரவு வரவில்லை.

பொதுமக்களைப் பொருத்தவரை, வெளிநாடுகளில் இருந்து மார்ச் 1 ஆம் தேதிக்கு பிறகு யார் வந்திருந்தாலும், அவர்கள் குறித்து தகவல் கொடுக்க வேண்டுகிறோம். அவ்வாறு தகவல் கொடுத்தால், அவர்களைத் தனிமைப்படுத்தி கண்காணிக்க முடியும். இந்தத் தகவலை யாரும் மறைக்கக் கூடாது. இதற்காக கிராம அளவில் தொடங்கி பல்வேறு குழுக்களை அமைத்து வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள், அவர்களில் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாய்லாந்து நாட்டில் இருந்து வந்தவர்கள் ஈரோடு சுல்தான்பேட்டை, கொல்லம்பாளையம் பகுதியில் தங்கியிருந்துள்ளனர். அந்த பகுதியைச் சேர்ந்த 169 குடும்பத்தைச் சேர்ந்த 696 உறுப்பினர்களை அவரவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைத்துள்ளோம். இவர்களின் வீடுகளுக்கு தனிமைப்படுத்தப்பட்டதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்படும்.

இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 14 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது. வெளியில் இருந்து யாரும் அப்பகுதிக்குச் செல்லக் கூடாது. அதே நேரத்தில் அடிப்படைத் தேவைகளுக்காக அவர்கள் வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் அடிப்படைத் தேவையை அப்பகுதியிலேயே நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் வெளிமக்களோடு பழகக் கூடாது. எதிர்வரும் 15 நாட்கள் மிக சவாலான காலமாகும். அதற்கு பொதுமக்கள், ஊடகம் என அனைவரின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது என்றார்.

Leave a Response