ஈரோடு பாரம்பரிய திமுகவினர் எதிர்பார்ப்பு – தலைமை நிறைவேற்றுமா?

ஈரோடு மாவட்டத்தில் அரசியல்கட்சிகள் அனைத்திலும் பெரும்பாலும் கொங்குவேளாள கவுண்டர் சமூகத்தினரே வேட்பாளர்களாக நிறுத்தப்படுகின்றனர்.வேட்பாளர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளின் மாவட்ட அளவிலான முக்கியப் பொறுப்புகள் அனைத்திலும் அந்தச் சமுதாயத்தினரே நியமிக்கப்படுவார்கள்.அல்லது சனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள்.

2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு ஈரோடு மாவட்டத்தில் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தினர், சுமார் 32 விழுக்காடுதாம் இருக்கின்றனர்.இதே அளவுக்கு செங்குந்த முதலியார் சமூகத்தினரும் இருக்கின்றனர். இவர்களோடு, ஆதி திராவிடர் மற்றும் வன்னியர் சமூகத்தினர் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழ்கின்றனர். நாடார், மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினரும் உள்ளனர்.

அதனால், முதலியார் சமூகத்தினருக்குப் போதிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்று அச்சமூகத்தினர் போராடியதன் விளைவாக திமுகவில் ஈரோடு கிழக்கு அந்தச் சமூகத்தினருக்குக் கிடைத்தது.

ஆனால், அதிலும் ஒரு குறை இருப்பதாக பாரம்பரிய திமுகவினர் வருத்தப்படுகிறார்கள்.

என்ன வருத்தம்?

ஈரோடு கிழக்கில் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் வி.சி.சந்திரகுமார்.இவர் தேமுதிகவைச் சேர்ந்தவர்.அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்ததால் அவருக்கு இந்தப் பொறுப்பு ஒருமுறைக்கு இருமுறை வாய்ப்பு வழங்கப்பட்டது.ஒருமுறை தோற்றார்.அடுத்தமுறை வென்றார்.

அதேநேரம் பள்ளிப்பருவத்திலிருந்து திமுகவின் அடிப்படைக் கொள்கைகள் வழிநின்று ஈரோட்டில் திமுகவுக்காகப் பாடுபட்டவர் ஆ.செந்தில்குமார்.அவர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து படிப்படியாக வளர்ந்து இப்போது ஈரோடு மாவ்ட்ட துணைச்செயலாளர் பொறுப்பில் இருக்கிறார்.

அவர் சுமார் முப்பதாண்டுகளாக தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தும் அவர் விருப்பம் நிறைவேறாமலேயே போய்விட்டது.

இந்தமுறை,திமுகவில் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினின் எண்ணத்தின்படி பார்த்தால்,இவர் மிகப் பொருத்தமான,தகுதியான வேட்பாளராக இருப்பார்.

ஆனால்,அவர் அண்மையில் வெளியிட்டுள்ள பதிவில், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் திமுகழக வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்பமனு வழங்கியுள்ளேன். ஒருவேளை இதுவே எனது கடைசி விருப்பமனுவாகக் கூட இருக்கலாம். ஆம் இப்போதே வயது 59 நிறைவடைந்து 60 இல் உள்ளேன் என்று சொல்லியிருக்கிறார்.

எனவே,இந்தத் தேர்தலில் அவருக்கே வாய்ப்புக் கொடுக்கவேண்டும் என்று பாரம்பரிய திமுகவினர் விரும்புகின்றனர்.

ஏன்?

இந்தமுறை அவருக்கு வாய்ப்புக் கொடுத்தால், முதலியார் சமூகத்திற்கு வாய்ப்பு கொடுத்தது போலவும் இருக்கும்,திமுகவில் மாற்றுக் கட்சியிலிருந்து வருகிற பிரபலமானவர்களுக்கு சூழலுக்கேற்ற புத்திசாலித்தனமான உத்தி காரணமாக முன்னுரிமை கொடுப்பதை விமர்சிக்கும் எதிராளிகளின் மூக்கை உடைக்கிற மாதிரி பாரம்பரிய கட்சியினருக்கும் கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் உருவாகும் என்று சொல்கின்றனர்.

இதுதொடர்பாக,ஈரோட்டைச் சேர்ந்த திமுக முக்கியப் புள்ளிகளிடம் பேசியபோது,ஈரோடு மாவட்ட அமைச்சராக இருக்கும் சு.முத்துசாமி,பலமுறை முயன்று ஏமாந்துபோயிருக்கும் ஆ.செந்தில்குமாருக்கு இந்தமுறை கண்டிப்பாக வாய்ப்புக் கொடுக்கவேண்டும் என்று தலைமையிடம் வலியுறுத்தியிருக்கிறார்.அதனால்,நிச்சயம் அவருக்கே நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையாகச் சொல்கிறார்கள்.

– ஈரோடு செல்வன்

Leave a Response