சென்னையை விட்டு சாரி சாரியாக வெளியேறிய மக்கள் – ஒரு கவிஞரின் சாட்சி

விருத்தாசலத்தைச் சேர்ந்த கவிஞர் கரிகாலன், மார்ச் 23 ஆம் தேதி இரவு விருத்தாசலத்திலிருந்து சென்னைக்கு மகிழுந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் கண்ட காட்சிகளைப் பதிவு செய்துள்ளார்.

அதில்….

இரவுப் பயணம்!
~

நேற்றிரவு 9.00 மணி.
ஐந்து லட்சம்பேர் சென்னையை காலி செய்து வெளியேறி எதிரே
வந்து கொண்டிருந்தனர்.
நான் சென்னைக்கு சென்றுகொண்டிருந்தேன்.

ஒரு கொள்ளை நோய்க்கு பயந்து மனிதர்கள் மாநகரொன்றை விட்டு சாரி சாரியாக, விடிய விடிய வந்தபடி இருந்தார்கள்.

10 மீ இடைவெளியில் பெரிய மாரத்தான் ஓட்டம்போல வாகனங்கள் சென்னைக்கு எதிர் திசையில் விரைந்தபடி இருந்தன.

என்னுடன் சிந்துவும் தமிழும். சிந்துவிற்கு சிறிய உடல் நலக்குறைவு. வீட்டுக்கு வந்திருந்தார். கார்க்கி, சுடரோடு இரவில் மூவி மாரத்தான் போய்க்கொண்டிருந்தது. ஈராண்டாகப் பார்க்க வாய்ப்பில்லாத உலக கிளாஸிக்குகளை விழித்து பார்த்தார்.

அவ்வப்போது அம்மாவின் அன்பை பருகி, ஃபெலிஷியா , சாம்சங்கோடு விளையாடி நலமடைந்தார். மூன்று நாட்கள் நிறைந்தது.

மீண்டும் எம்.எம்.சி (ராஜிவ் காந்தி மருத்துவமனை) செல்லவேண்டும். ஊரடங்கு, வைரஸ் தொற்று. லேசான கலக்கம். ஆனாலும் இரவெலாம் கண்விழித்து, தூக்கம் துறந்து படித்து, விரும்பி தேர்ந்த துறை.

இரண்டாமாண்டு சர்ஜரி. முதுநிலை மருத்துவப் படிப்பென்பது மருத்துவராக பணிசெய்தபடி பெறும் அனுபவ அறிவுதான்.

எம்.எம்.சி வந்தபோது நள்ளிரவு 12.30. அள்ளூர் நன்முல்லையாரை டைப் செய்தபடி வந்ததில் நேரம் போனது தெரியவில்லை.

ஹாஸ்டலில் சிந்து இறங்கினார். மருத்துவர்களின் கார்கள் வரிசைகிரமத்தில் நின்றிருந்தன.

சற்று தள்ளி ரா.காந்தி மருத்துவமனை. கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் படுத்திருப்பார்கள். உலகத்தை அச்சுறுத்தும் ஒரு வைரஸ் மிக அருகில் இருக்கிறது.

சர்ஜரி வார்டில் அத்தியாவசியப் பணிகள் மட்டுமே நடைபெறும். இனி எல்லா மருத்துவர்களையும் கொரோனா சிகிச்சையில் ஈடுபடுத்தப்படலாம்.

திரும்பினோம். சென்டரல் அருகே நடை மேடைகளில் வரிசையாக மக்கள் படுத்திருந்தனர். அமாவாசை அவர்கள் மீது கருணை கொண்டு இருட்டைப் போர்த்தியிருந்தது. இந்தியாவில் முழு ஊரடங்கு சாத்தியமில்லை என்பதன் சாட்சிகளாக அவர்கள் உறங்குகின்றனர்.

இந்த நள்ளிரவிலும் மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

மீண்டும் சாலையில் விரையும் வாகனங்களின் அணிவகுப்பில் ஒரு கண்ணியாக வெளியேறிக் கொண்டிருந்தோம்.

வழியெங்கும் காவலர்கள் போக்குவரத்தை சரி செய்தபடி இருந்தார்கள்.

நிறைய பேர் டாடாஏசில் பைக்கை, ஸ்கூட்டியை, மனைவியை , ஃப்ரிஜ்ஜை ஏற்றி பிழைக்க வந்த ஊரிலிருந்து பழையபடி தங்கள் ஊருக்குத் திரும்புகிறார்கள். ஒரு டாடாஏசில் கூரை போட்டு தூளி கட்டியிருந்தார்கள். குழந்தை கண்மூடி துயில்கிறது.

இவர்கள் எப்போது மீண்டும் சென்னை திரும்புவார்கள்?

எதிர்காலம் இப்படிப்பட்ட பல கேள்விகளோடு உருவமே இல்லாமல் முன்னால் நின்றுகொண்டிருக்கிறது.

இத்தனை கூட்டமும் நாளையிலிருந்து உருவாக்கிக் கொள்ளப் போகும் தனிமையை நோக்கி விரைகிறது.

மானுட சமுத்திரம் நானென்று கூவு! என்கிற குரலை ஒரு வைரஸ் உடைத்துவிட்டது.

சிறு துளிகள் சேர்ந்து உருவானது இதோ அருகில் இருக்கும் கடல். அந்தக் கடல் துளித்துளியாக ஒரு மாநகரிலிருந்து தப்பித்து ஓடுவதைப் போலிருக்கிறது.

‘நீரோடை நிலங் கிழிக்க நெடும ரங்கள் நிறைந்து பெருங் காடாக்கப்
பெருவி லங்கு
நேரோடி வாழ்ந்திருக்கப்

பருக்கைக் கல்லின்
நெடுங்குன்றில் பிலஞ்சேரப் பாம்புக் கூட்டம்
போராடும் பாழ்நிலத்தை
அந்த நாளில்
புதுக்கியவர் யார்?’

பாவேந்தான் கேட்கிறான்?வேறு யார் மனிதர்கள்தானே!
அவர்கள் இந்த நெருக்கடியை வெல்வார்கள்!

ஓட்டுநர் தம்பி கோவிந் மங்கலம் பேட்டையில் நிறுத்தி ஒரு தேநீர் வாங்கித்தருகிறார்.
இன்னும் சிறிது நேரம். வீடடையலாம். நேரத்தைப் பார்க்கிறேன். அதிகாலை 4.50.

எங்கள் முன்னால் பொழுது விடிந்து கொண்டிருக்கிறது!

– கவிஞர் கரிகாலன்

Leave a Response