தில்லிக்கு திடீர் இரகசிய பயணம் செய்த எடப்பாடி – என்ன நடந்தது?

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, இன்று காலை விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லிக்குச் செல்கிறார் என்று கூறப்பட்டது.

பொதுவாக எடப்பாடி பழனிச்சாமி, விமானங்களில் பயணம் செய்தால் சென்னை விமான நிலையத்திற்கு முன்னதாகவே தகவல் வரும். ஆனால் அதுபோன்ற தகவல் இன்று எதுவும் முன்னதாக வரவில்லை. இந்நிலையில்தான் இன்று காலை 10 மணியளவில் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்கிறார் என்ற தகவல் சென்னை விமான நிலையத்திற்குக் கிடைத்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து டெல்லி செல்லும் அனைத்து விமானங்களிலும் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் இருக்கிறதா என்று உளவுப் பிரிவு அதிகாரிகள் சோதித்தனர். அப்போது இன்று காலை 11.20 மணிக்கு சென்னையில் இருந்து செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் டிக்கெட் இருந்தது. அதன் பின்புதான் அவர் டெல்லி செல்வது உறுதியானது.

எடப்பாடி பழனிச்சாமி வழக்கமாக விமானம் புறப்படுவதற்கு சுமார் அரை மணி நேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்திற்கு வருவார். அதைப்போல் இன்று காலை 10.45 மணிக்கு மேல் எடப்பாடி சென்னை விமான நிலையத்திற்கு வருவார் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தனர். ஆனால் அவர் வழக்கத்துக்கு மாறாக இன்று காலை 10.20 மணிக்கெல்லாம் சென்னை விமான நிலையத்திற்குள் வந்து அவசரமாக உள்ளே சென்றுவிட்டார். அவருடன் பாதுகாப்பு அதிகாரி மட்டும் சென்றார். வேறு யாரும் செல்லவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையத்திற்கு வரும்போதெல்லாம் அவரது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் வருகை தந்து அவரை வழியனுப்பி வைப்பார்கள். ஆனால் இன்று கட்சி நிர்வாகிகளோ தொண்டர்களோ வரவில்லை. யாருக்கும் தகவல் கொடுக்காமல் இந்தப் பயணம் இரகசியமாக வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

அவரைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி,கே.பி.முனுசாமி ஆகியோரும் டெல்லிக்கு விரைந்துள்ளனர். இவர்கள் இன்று மாலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசுகின்றனர்.

இது குறித்து டெல்லி அரசியல் பார்வையாளர்கள் கூறும்போது, எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுனின் சகலையின் அப்பாதான் ஈரோட்டைச் சேர்ந்த இராமலிங்கம். அதாவது மிதுனும், இராமலிங்கம் மகனும் ஒரே வீட்டில் பெண் எடுத்துள்ளனர். இதனால், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இராமலிங்கத்திற்குத்தான் ஏராளமான காண்ட்ராக்ட்கள் வழங்கப்பட்டன. இந்தநிலையில் அதிமுகவுடன் பாஜகவும் கூட்டணி முறிந்ததால், கடந்த சில மாதங்களாக அதிமுகவை கூட்டணிக்கு பாஜகவின் டெல்லி தலைமை அழைத்துக் கொண்டிருந்தது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி பிடி கொடுக்காமல் இருந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி தோல்விக்கு அதிமுக கூட்டணியில் இல்லாததுதான் காரணம் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் அண்ணாமலையை மாற்றிவிட்டு அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பாஜகவில் எழுந்தது.

இதனால் இதுவரை அண்ணாமலையை மாநில தலைவராக அறிவிக்காமல் தேசிய தலைமை இருந்து வந்தது. ஆனால் அண்ணாமலையை மாற்றினாலும் கூட்டணிக்கு சம்மதிக்கமாட்டோம் என்று எடப்பாடி பழனிச்சாமி பிடிவாதமாக இருந்தார்.

இதனால் இராமலிங்கத்தின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் சில நாட்களுக்கு முன்னர் சோதனை நடத்தியது. இந்தச் சோதனையில் ரூ.650 கோடிக்கு முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இராமலிங்கத்தின் சொத்துகள் பினாமியாக இருக்கலாம் என்று அமலாக்கத்துறை சந்தேகித்தது. இதனால் எடப்பாடி பழனிச்சாமியை நோக்கி தனது சந்தேக பார்வையை திருப்பியது. இந்தநிலையில்தான் கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த எடப்பாடி பழனிச்சாமி டெல்லி விரைந்துள்ளார். இன்று பேச்சுவார்த்தைக்குப் பிறகுதான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பாஜக, அதிமுக வட்டாரங்களில் தெரிவிப்பதாக கூறினர்.

பாஜகவுடன் கூட்டணியே கிடையாது என்றவர், கடந்த சில நாட்களாக தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மாற்றி, மாற்றி பேச ஆரம்பித்தார். இந்தநிலையில், இரு மொழிக் கொள்கை, தொகுதி மறு சீரமைப்பு ஆகிய விவகாரங்களில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் ஓரணியில் திரண்டன. இதனால் திமுக, அதிமுக கட்சிகள் பிரிந்து இருக்க வேண்டும் என்று பாஜக கருதுகிறது. இதனால் அதிமுக தங்கள் கூட்டணிக்குள் இழுத்துப் போட்டுக் கொண்டால், தாங்கள் விரும்பியதை சாதிக்கலாம் என்று பாஜக கருதுகிறது. இதனால் எப்படியாவது எடப்பாடியுடன் கூட்டணிக்கு முயன்ற பாஜக கடைசியில் அமலாக்கத்துறை சோதனை மூலம் தங்களது திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கியுள்ளது என்கின்றனர்.

Leave a Response