இந்திய ஒன்றியம் முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்டத் தேர்தல் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2 ஆம் கட்டத் தேர்தல் ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதியும், 93 தொகுதிகளுக்கு மே 7 ஆம் தேதி 3 ஆம் கட்டத் தேர்தலும், 96 தொகுதிகளுக்கு மே 13 ஆம் தேதி 4 ஆம் கட்டத் தேர்தலும் நடைபெற்றது.4 கட்டத் தேர்தல்களில் மொத்தம் 66.95 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கு இன்று 5 ஆம் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேசம் 14 தொகுதிகள், மராட்டியம் 13 தொகுதிகள், மேற்குவங்காளம் 7 தொகுதிகள், பீகார் 5 தொகுதிகள், ஒடிசா 5 தொகுதிகள், ஜார்க்கண்ட் 3 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீர் 1 தொகுதி, லடாக் 1 தொகுதி என மொத்தம் 49 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.
5 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
5 ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது.
147 தொகுதிகளைக் கொண்ட ஒடிசா சட்டசபைக்கு 4 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, 28 தொகுதிகளுக்கு மே 13 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து 35 தொகுதிகளுக்கு இன்று 2 ஆம் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து,மே 25 ஆம் தேதி நாடாளுமன்ற 6 ஆம் கட்டத் தேர்தலின்போது 42 சட்டசபை தொகுதிகளுக்கும், ஜூன் 1 ஆம் தேதி 7 ஆம் கட்டத் தேர்தலின்போது 42 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் கண்டே சட்டசபை தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் சிறையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் களமிறங்கியுள்ளார்.
இன்று நடைபெறும் ஐந்தாம் கட்டத் தேர்தலைத் தொடர்ந்து ஆறாம் கட்டத் தேர்தல் மே 25 அன்று நடைபெறவுள்ளது.