
81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளிலும் 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நவம்பர் 20 அன்று ஒரேகட்டமாகவும் தேர்தல் நடந்தது.
மகாராஷ்டிராவில் பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசு கூட்டணி ஆட்சி நடந்தது. முதல்வராக சிவசேனாவைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே இருந்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜேஎம்எம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தது.முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்தார்.
மகாராஷ்டிராவில் மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 48 தொகுதியில் 30 தொகுதிகளை காங்கிரசுக் கூட்டணி கைப்பற்றியது. இந்த நிலையில் அங்கு நவம்பர் 20 ஆம் தேதி மொத்தம் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரசு கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணியும், காங்கிரசு, உத்தவ் சிவசேனா மற்றும் சரத்பவார் கட்சிகள் அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் களம் கண்டன.இந்தத் தேர்தலில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவாக 65 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.
நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது. தொடக்கத்தில் மகாயுதி மற்றும் மகாவிகாஸ் அகாடி கூட்டணிகள் இரண்டுமே சரிசமமாக முன்னிலை வகித்தன. ஆனால் அதன் பிறகு, மகாயுதி கூட்டணி கை ஓங்கியது. 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மகாயுதி கூட்டணி முன்னிலை வகித்ததால், காலை 10 மணியளவிலேயே மகாயுதி கூட்டணி ஆட்சியைத் தக்க வைப்பது உறுதியாகிவிட்டது.
வாக்கு எண்ணிக்கை முடிவில், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 236 தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. பாஜக 133 தொகுதிகளையும், சிவசேனா 57 தொகுதிகளையும், தேசியவாத காங்கிரசு 41 தொகுதிகளையும் கைப்பற்றின. மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக மட்டும் 133 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
மறுபுறம் மகாவிகாஸ் அகாடி கூட்டணிக் கட்சிகள் மொத்தமாக 46 இடங்களைக் கைப்பற்றி தோல்வி அடைந்தது. உத்தவ் சிவசேனா 20 இடங்களிலும், காங்கிரசு 15 இடங்களிலும், சரத்பவார் கட்சி 10 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றன. மற்ற சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 10 இடங்களைக் கைப்பற்றி உள்ளன.
மகாராஷ்டிரா
மொத்த தொகுதி 288
பெரும்பான்மைக்கு தேவை 144
மகாயுதி கூட்டணி (வெற்றி 236)
———————————
பாஜக 133
சிவசேனா 57
தேசியவாத காங். 41
ஜேஎஸ்எஸ் 2
ஆர்எஸ்பிஎஸ் 1
ஆர்எஸ்விஏ 1
ஆர்ஒய்எஸ்பி 1
மகாவிகாஸ் அகாடி (வெற்றி 48)
———————————-
உத்தவ் சிவசேனா 20
காங். 15
என்சிபிஎஸ்பி 10
சமாஜ்வாடி 2
சிபிஎம் 1
மற்றவை 4
மகாயுதியின் இந்த அமோக வெற்றியை கூட்டணிக் கட்சிகள் கொண்டாடி வருகின்றன. மாநிலம் முழுவதும் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரசுக் கட்சிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மகாயுதியின் வெற்றியால் டெல்லி பாஜக தலைமையும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. தேர்தல் முன்னிலை விவரம் வெளியான உடனே ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, துணை முதல்வர் பட்நவிசை அழைத்து வாழ்த்து தெரிவித்தார். இதே போல பிற பாஜக மூத்த தலைவர்களும், பாஜவின் ஹாட்ரிக் வெற்றியைப் பாராட்டி உள்ளனர்.
ஜார்க்கண்ட்:
————
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. இதில், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்)-காங்கிரசு இணைந்த இந்தியா கூட்டணியும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் போட்டியிட்டன. இம்முறை ஆட்சியைக் கைப்பற்ற பாஜக கடுமையாக முயற்சித்தது. இதனால் கடும் இழுபறி இருக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டிருந்தன. இதற்கு ஏற்றார் போல் நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் ஆரம்பத்தில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றது. ஆனால் சிறிது நேரத்தில் ஜேஎம்எம்-காங்கிரசு கூட்டணியின் முன்னிலை எகிறியது.
குறிப்பாக, 43 தொகுதிகளில் போட்டியிட்ட ஜேஎம்எம் 34 இடங்களில் வென்று அசத்தியது. முதல்வர் ஹேமந்த் சோரன் பர்ஹித் தொகுதியில் 39,791 வாக்குகள் வித்தியாசத்திலும் அவரது மனைவி கல்பனா சோரன் கண்டே தொகுதியில் 17,142 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர். ஹேமந்த் சோரனின் இளைய சகோதரர் பசந்த் சோரன் தும்கா தொகுதியில் 14,588 வாக்கு வித்தியாசத்தில் வென்றார். இதே போல, காங்கிரசு 16 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணியில் உள்ள ஆர்ஜேடி 4 தொகுதிகளிலும், சிபிஐஎம்எல் 2 தொகுதியிலும் வென்றன.
இதன் மூலம், 57 இடங்களைக் கைப்பற்றிய ஜேஎம்எம்-காங்கிரசு கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்தது. பல தடைகளைத் தாண்டி வெற்றியை ருசித்த ஜேஎம்எம் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
பாஜக 68 தொகுதிகளில் போட்டியிட்டு 21 இடங்களில் மட்டுமே வென்றது. அதன் கூட்டணியில் ஏஜேஎஸ்யு, ஜேடியு, எல்ஜேபிஆர்வி, கட்சிகள் தலா ஒரு இடத்தில் வென்றன. ஜேஎம்எம் கட்சியிலிருந்து விலகி பாஜவில் சேர்ந்த ஹேமந்த் சோரனின் அண்ணி சீதா சோரன் ஜம்தாரா தொகுதியில் காங்கிரசின் இர்பான் அன்சாரியிடம் 43,676 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். முதல்வர் பதவி பறிக்கப்பட்டதால் ஜேஎம்எம்மில் இருந்து விலகி பாஜவில் சேர்ந்த சம்பாய் சோரன் சிராய்கெல்லா தொகுதியில் வெற்றி பெற்றார்.
ஜார்க்கண்ட்
மொத்த தொகுதி 81
பெரும்பான்மைக்கு தேவை 41
இந்தியா கூட்டணி (வெற்றி 56)
———————————
ஜேஎம்எம் 34
காங். 16
ஆர்ஜேடி 4
சிபிஐஎம்எல் 2
தேஜ கூட்டணி (வெற்றி 24)
—————————-
பாஜக 21
ஏஜேஎஸ்யு 1
ஜேடியு 1
எல்ஜேபிஆர்வி 1


