மகாராஷ்டிரா, ஜார்கண்ட் ஆகிய இரு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் தேர்தல் தேதிகளை அறிவித்தார்.
அதில்,
மகாராஷ்டிராவில் நவம்பர் 20 ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும். வேட்புமனு தாக்கல் வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய அக்டோபர் 29 கடைசி தேதி. வேட்பு மனுக்கள் அக்டோபர் 30 ஆம் தேதி பரிசீலிக்கப்படும். வேட்புமனுக்களைத் திரும்பப்பெற நவம்பர் 4 ஆம் தேதி கடைசி நாள். நவம்பர் 20 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். மகாராஷ்டிராவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 9.63 கோடியாக உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கு நவம்பர் 13 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக 38 தொகுதிகளுக்கு நவம்பர் 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஜார்க்கண்ட்டில் முதல்கட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் அக்டோபர் 18 ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டாம் கட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்குகிறது. முதல்கட்டத் தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் வேட்புமனு தாக்கலுக்கு அக்டோபர் 25 ஆம் தேதியும், இரண்டாம் கட்டத்துக்கு அக்டோபர் 29 ஆம் தேதியும் கடைசி நாளாகும்.
முதல்கட்டத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 28 ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்போடர் 30 ஆம் தேதியும் நடைபெறும். முதல்கட்டத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற அக்டோபர் 30 ஆம் தேதி கடைசி நாள். இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்படும் வேட்புமனுககள் திரும்பப் பெற கடைசி நாள் நவம்பர் 1. இரண்டு கட்டங்களிலும் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானவுடன் தேர்தல் ஆணையம் மீது விமர்சனங்களும் வரத் தொடங்கிவிட்டன.
288 தொகுதிகள் கொண்ட மாநிலத்துக்கு ஒரே கட்டமாகவும் 81 தொகுதிகள் கொண்ட மாநிலத்துக்கு இரண்டு கட்டங்களாகவும் தேர்தல் அறிவிக்கப்பட்டதுதான் விமர்சனத்துக்குக் காரணம்.
288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆனால், ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரசு கூட்டணி ஆட்சி நடக்கிறது.
அதனால் அம்மாநில தேர்தல் பரப்புரையில் பாஜகவினர் கூடுதல் கவனம் செலுத்த வசதியாகத்தான் அங்கு இரண்டு கட்டங்களாக நடத்துகிறார்கள் என்று விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.