சென்னை மக்களுக்கோர் நற்செய்தி – இன்று அதிகனமழை இருக்காது

மழை வெள்ளத்தால் சென்னை தத்தளித்துக் கொண்டிருக்கிறது.அன்று அதிகனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்லியிருப்பதால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

இந்நிலையில்,சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று இரவு வெளியிட்ட அறிவிப்பில், “தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து உள்ளது.

இது சென்னைக்குக் கிழக்கு-தென்கிழக்கே சுமார் 490 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் நாளை அதிகாலை கரையைக் கடக்கக்கூடும் என கூறியுள்ளது.

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 440 கி.மீ, புதுச்சேரியில் இருந்து 460 கி.மீ, நெல்லூரில் இருந்து 530 கி.மீ கிழக்கு தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில், சென்னைக்கு சில நல்ல செய்திகள், சீரான மழை சிறிது நேரம் தொடரும். நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னை அருகில் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், காற்று கடக்கும் பகுதி வடக்கே என்பதால் சென்னை மக்கள் சற்று இளைப்பாறலாம்.

குறிப்பாக, இன்று பெய்தது போல அதி கனமழை நமக்கு பெய்யப்போவதில்லை. சாதாரணமாகவே மழை பெய்யலாம். அது, தெற்கு ஆந்திராவுக்கு மாறிவிட்டது.சென்னையில் 18 மற்றும் 20 ஆம் தேதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலத்தில் நகரும் போது, ​​சாதாரணமாக சமாளிக்கக்கூடிய மழையாகவே இருக்கும்.

இதனால், மேம்பாலங்களில் நிறுத்தப்பட்ட வாகனத்தை வீட்டிற்குக் கொண்டு வரலாம். மேலும், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களில் சென்னையில் ஒரு சில இடங்களில் 300 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என பிரதீப் ஜான் பதிவிட்டிருக்கிறார்.

இவருடைய கூற்றுகள் உண்மைக்கு மிக நெருக்கமாகவே அமைந்திருக்கின்றன என்பதால் இவருடைய இப்பதிவைக்கண்ட சென்னை மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Leave a Response