கவுரி லங்கேஷ் கொலையாளிகளுக்கு வரவேற்பு சாய்பாபாவுக்குக் கொடுமை – சீமான் கோபம்

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை….

கர்நாடக பத்திரிகையாளர் அம்மையார் கௌரி லங்கேஸ் அவர்களைப் படுகொலை செய்த கொலையாளிகள் பிணையில் வெளிவந்துள்ளதை இந்துத்துவவாதிகள் வரவேற்றுக் கொண்டாடியுள்ளது அருவருக்கத்தக்கது.
கருத்தினைக் கருத்தினால் எதிர்கொள்ளும் திறனற்று, பெண் என்றும் பாராமல் ஊடகவியலாளர் கௌரி லங்கேஸ் அவர்களைச் சுட்டுக்கொன்றுவிட்டு, அதனைக் கொண்டாடவும் செய்கிறார்கள் என்றால் மனம் முழுவதும் மதவெறி நிரம்பிய சிறிதும் மனச்சான்றற்ற மனிதகுல விரோதிகள்தான் இவர்கள் என்பது இத்தகைய இழிசெயல் மூலம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மறுபுறம், இந்திய ஒன்றிய அரசால் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக ஊஃபா கொடுஞ்சட்டத்தின் கீழ் சிறைக்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பழங்குடி மக்களின் உரிமைப்போராளி, டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஐயா ஜி.என்.சாய்பாபா அவர்கள் சிறைக்கொடுமைகளால் உடல்நலிவுற்று மரணிக்கப்பட்டுள்ளார்.

நீதி, சனநாயகம், அடிப்படை மனித உரிமை என்பதெல்லாம் இந்த நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் வெற்று எழுத்துகளாக மட்டுமே உள்ளன. நடைமுறையில் உரிமைக்காகப் போராடும் போராளிகள் மீதும், பொதுமக்கள் மீதும், மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் இயக்கத்தினர், சனநாயகவாதிகள், ஊடகவியலாளர்கள் மீதும் கொடும் அடக்குமுறையை ஏவி, சட்டத்தினை முறைகேடாகப் பயன்படுத்தி கடுமையாகத் தண்டிக்கிறது அரசு!

தங்கள் கருத்தினை ஏற்காதவர்களை, கொள்கைகளை எதிர்ப்பவர்களை, திட்டங்களுக்கு உடன்படாதவர்களை, நீதியின் பக்கம் நிற்பவர்களை சமூகவிரோதிகள் சட்டத்திற்குப் புறம்பாகக் கொல்கின்றனர். ஆட்சியாளர்களோ சட்டப்படி கொல்கின்றனர் என்றால் இருதரப்புக்கும் இடையே என்ன வேறுபாடு இருக்க முடியும்?

நிகழும் இக்கொடுமைகள் பொறுக்காது பொதுமக்கள் பொங்கி எழுந்து போராடும் நாள் வரும்போது கொடுங்கோன்மை ஆட்சியாளர்களின் அதிகாரமும், ஆணவமும் உறுதியாகத் தூக்கியெறியப்படும்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response