9 ஆண்டு மோடி ஆட்சியில் 98 இலட்சம் கோடி கடன் – அழகிரி அதிர்ச்சித் தகவல்

தமிழ்நாடு காங்கிரசு தலைவர் கே.எஸ்.அழகிரி சனவரி 6 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்….

இந்தியாவிலேயே எத்தகைய உத்தியைக் கையாண்டாலும் பாஜகவின் வாக்கு வங்கியை விரிவுபடுத்த முடியாத ஒரே மாநிலமாக மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளின் எக்குக் கோட்டையாகத் தமிழகம் விளங்குகிறது. சாம, பேத, தான, தண்டங்களைப் பயன்படுத்தி அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகிய அமைப்புகளின் மூலம் ஏவி, பாஜகவை எதிர்க்கும் திமுக அமைச்சர்கள் மீதும், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதும் பல்வேறு சோதனைகள், வழக்குகள் என அடக்குமுறைகளை ஏவி விட்டாலும் தமிழ்நாட்டில் பாஜகவின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாகவே அமைந்துள்ளது.

இந்நிலையில், நடைபயணம் என்ற போர்வையில் உல்லாசப் பயணம் மேற்கொண்டு வரும் பாஜக தலைவர் அண்ணாமலை, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற வகையில் உண்மைக்குப் புறம்பான, ஆதாரமற்ற அவதூறான கருத்துகளைக் கூறி வருகிறார். தமிழ்நாட்டின் நிதிநிலை அதல பாதாளத்துக்குச் சென்று விட்டதாகவும், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தக் கடன் தொகை அடுத்த 2 ஆண்டுகளில் 10 இலட்சம் கோடியாக உயர்ந்து விடும் என்று பேசியிருக்கிறார். தமது முதுகு தனக்குத் தெரியாது என்பதால் இத்தகைய கருத்தை அவர் கூறியிருக்கிறார். இக்கருத்தைக் கூறுவதற்கு முன் மத்திய பாஜக அரசின் கடன் நிலைமை என்ன என்பது குறித்து அவர் அறிந்திருக்க வேண்டும்.

மத்திய பாஜக அரசின் மொத்த கடன் 31 மார்ச் 2023 நிலவரப்படி ரூபாய் 153 இலட்சம் கோடியாக இருந்தது. இது வருகிற 31 மார்ச் 2024 இல் 169 இலட்சம் கோடி ரூபாயாக 2023-24 நிதியாண்டில் உயர்ந்துவிடும் என்று செய்தி வெளிவந்துள்ளது. இதன்மூலம் ஒரே ஆண்டில் 16 இலட்சம் கோடி கடன் உயர்ந்துவிடும் என்று கூறப்பட்டிருக்கிறது. இன்றைய கடனை ஆய்வு செய்கிற போது, மத்திய காங்கிரசுக் கூட்டணி அரசு பதவி விலகுகிற போது, 31 மார்ச் 2014 அன்று இருந்த மொத்தக் கடன் ரூபாய் 58.6 இலட்சம் கோடி. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 52.2 சதவிகிதமாகும். ஆனால், இது 9 ஆண்டுகளில் 2023-ல் 174 சதவிகிதமாக அதிகரித்து ரூபாய் 155.6 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 57.1 சதவிகிதமாகும். அதேபோல, இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 2014 முதல் 2023 வரை 100 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.

2014-ல் ரூபாய் 3 இலட்சத்து 74 ஆயிரத்து 484 கோடியாக இருந்தது.2023 இல் ரூபாய் 7 இலட்சத்து 48 ஆயிரம் 895 கோடியாக உயர்ந்திருக்கிறது. நாடு விடுதலை பெற்ற பிறகு 67 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் காங்கிரசு ஆட்சி செய்த போது மொத்தக் கடன் ரூபாய் 55 இலட்சம் கோடி தான். ஆனால், 2023 இல் 153 இலட்சம் கோடியாக, அதாவது ஏறத்தாழ 100 இலட்சம் கோடிக்கும் அதிகமாக மத்திய பாஜக அரசு கடன் சுமையை ஏற்றியிருக்கிறது. உள்நாட்டுக் கடனும், வெளிநாட்டுக் கடனும் இந்தியாவை திவாலான நாடாக உலக அரங்கில் பறை சாற்றிய பெருமை மோடி அரசுக்குத் தான் உண்டு.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் திறமையற்ற பொருளாதார நிர்வாகத்தின் காரணமாகவே இத்தகைய கடன் சுமை ஏற்பட்டிருப்பதை அண்ணாமலையால் மறுக்க முடியுமா ? தமிழ்நாட்டின் கடனைப் பற்றி பேசுகிற அண்ணாமலை, மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால கடன் சுமை 100 இலட்சம் கோடி அதிகரித்திருப்பதைப் பற்றி என்ன பதில் கூறப் போகிறார்? இதற்கான விளக்கத்தை தருவாரா? தொலைக்காட்சி ஊடகங்கள் மைக்கை நீட்டினால் அற்ப விளம்பரத்துக்காக எத்தகைய அவதூறையும் பேசிவிடலாம் என்று அண்ணாமலை நினைத்தால் அதிலிருந்து அவர் தப்பிக்க முடியாது. மக்கள் மன்றத்தில் அவர் பதில் கூறியே ஆக வேண்டும்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த போது அன்றைய நிதியமைச்சரால் பொருளாதார நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. இன்றைய கடன் சுமைக்கு திமுக அரசு பொறுப்பல்ல. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்ற வேண்டுமென்ற பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறார்.

தமிழ்நாட்டு மக்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டுமென்று மிகுந்த அக்கறையோடும், ஆர்வத்தோடும் அவர் பணியாற்றி வருகிறார். இத்தகைய முயற்சிகளுக்கு இடையூறாக இயற்கையின் சீற்றத்தினால் தமிழ்நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் மிக்ஜாம் புயல் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க மத்திய அரசிடம் கேட்ட மொத்த நிவாரணத் தொகை ஏறத்தாழ ரூபாய் 20 ஆயிரம் கோடி.

ஆனால், இதுவரை மத்திய பாஜக அரசு ஒரு ரூபாய் நிதி கூட தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கவில்லை. தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பைத் தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது, நிதியும் வழங்க முடியாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மிகுந்த ஆணவத்தோடு அறிவித்ததை தமிழ்நாட்டு மக்கள் என்றென்றும் மறக்க மாட்டார்கள்.

ஆனாலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 6,000 வீதம் மொத்தம் ரூபாய் 1487 கோடி உதவித்தொகை வழங்கியிருக்கிறார். அதேபோல, பொங்கல் பரிசாக ரூபாய் 1,000 உதவித்தொகையுடன் பச்சரிசி, சர்க்கரை, முழுக் கரும்பு என எத்தகைய நிதிச்சுமை இருந்தாலும் இதை வழங்குவதோடு, மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாயும் சேர்த்து ஒன்றாக வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாகும்.

ஆனால், மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து விட்டு பாஜக ஆளுகிற உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களுக்கு அதிக நிதியும், எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாட்டைப் போன்ற மாநிலங்களுக்கு பாரபட்சமாக நிதி வழங்குதையும் தொடர்ந்து கடைபிடிப்பதை நிர்மலா சீதாராமன் நியாயப்படுத்தி பேசி வருகிறார். அதற்கு நறுக்கென்று ஒரே வார்த்தையில் பதில் அளித்த தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய அரசுக்கு ரூபாய் 1 வரியாக வழங்கினால் 29 பைசா தான் திரும்பி வருகிறது என்று கூறியிருக்கிறார். இதற்கு நேரடியாகப் பதில் கூறாமல் நிர்மலா சீதாராமன் விதண்டாவாதங்களைப் பேசி வருகிறார்.

இதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். இயற்கைப் பேரிடரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிற தமிழ்நாட்டு மக்களின் துயரத்தில் எந்தப் பங்கையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிற மத்திய பாஜக அரசின் வஞ்சக, பாரபட்ச போக்குக்குத் தமிழ்நாட்டு மக்கள் உரிய பாடத்தைப் புகட்டுவார்கள்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response