தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அரசு சார்பில் அனுப்பப்பட்ட சட்டமுன்வடிவுகள் மற்றும் கோப்புகளுக்கு நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருப்பது தொடர்பாக, ஆளுநருக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டி தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில், ஆளுநர் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் தொடர்பாக முதலமைச்சரோடு ஆலோசனை நடத்த வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.
அதன் அடிப்படையில், ஆளுநர் ஆர்.என்.இரவி முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.ஆளுநரின் அழைப்பை ஏற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ரகுபதி, இராஜகண்ணப்பன் மற்றும் தலைமைச்செயலாளர் சிவ் தாஸ் மீனா, முதலமைச்சரின் செயலாளர் முருகானந்தம் ஆகியோருடன் சென்று நேற்று ஆளுநரைச் சந்தித்தார்.
அப்போது, பல மாதங்களாக ஆளுநரிடம் நிலுவையில் இருக்கும் பல்வேறு கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். அதேபோன்று, தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த 10 முக்கியமான சட்ட முன்வடிவுகளை, அரசியல் சாசனத்தில் எங்கும் குறிப்பிடாத வகையில், தேவையின்றி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதைத் திரும்பப் பெற்று, அவற்றிற்கும் விரைந்து ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பி வைத்திடவும் ஆளுநரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
இதுமட்டுமின்றி, ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது இலஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர அனுமதி கோரி அனுப்பப்பட்ட கோப்புகளும் பல மாதங்களாக ஆளுநர் வசம் நிலுவையில் உள்ளன. அவற்றிற்கும் விரைந்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தப்பட்டது. இதில் கே.சி.வீரமணி தொடர்பான கோப்பினை 15 மாதங்களுக்கு மேலாகவும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான கோப்பினை 7 மாதங்களுக்கு மேலாகவும் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டினார். மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள உறுப்பினர் பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்வது தொடர்பான கோப்பு நீண்ட காலமாக ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது குறித்தும் தெரிவிக்கப்பட்டு அவற்றிற்கு ஒப்புதல் அளித்து திரும்ப அனுப்பி வைக்க முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
பொதுவாக, அரசியல் சாசன விதிகளுக்குட்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டுமென்றும், அப்போதுதான் மாநில மக்களின் நலனுக்கும், நிர்வாகத்திற்கும் பயனளிக்கக்கூடிய வகையில் ஆளுநரின் செயல்பாடு அமையும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் எடுத்துரைத்தார். அதனடிப்படையில், ஆளுநரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் தொடர்பாக அவர் கோரிய அனைத்து விவரங்களும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களால் நேரிலும், எழுத்துப்பூர்வமாகவும் அளிக்கப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகளை ஆளுநர் மனதில்கொண்டு, நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கும், கோப்புகளுக்கும் உரிய காலத்தில் ஒப்புதல் வழங்க வேண்டுமெனவும், வருங்காலங்களில் இதுபோன்ற தாமதங்களை ஆளுநர் தவிர்த்திட வேண்டுமெனவும் முதலமைச்சர் ஆளுநரிடம் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆலோசனையின் போது அரசின் கோரிக்கையை முதலமைச்சர் கடிதமாக ஆளுநரிடம் வழங்கினார். இக்கடிதத்தில் அரசியல் சாசனத்தின்படி அமைக்கப்பட்டுள்ள அனைத்து உயர் அமைப்புகளின் மீதும் தனக்கு மிக உயர்ந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, நிலுவையிலுள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் குறித்து தெரிவித்தது, மாநில நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி அவற்றிற்கு விரைந்து ஒரு தீர்வு கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் என்பதையும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் இரகுபதி கூறியதாவது…..
உச்ச நீதிமன்றத்தின் அறிவுத்தலின்படி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவியின் அழைப்பை ஏற்று அவரது மாளிகையில் முதலமைச்சருடன் சென்று சந்தித்தோம். அதன்படி, 21 மசோதாக்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 10 மசோதாவினை ‘I With Hold Assent’ என கூறி திருப்பி அனுப்பினார். இதனையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி இரண்டாவது முறையாக ஆளுநருக்கு மீண்டும் மசோதாக்கள் அனுப்பப்பட்டன.
இதில் உயர்கல்வி தொடர்பான மசோதாக்கள் உள்பட 20 மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட்டதாக ஆளுநர் தரப்பில் கூறினர். ஒரே ஒரு மசோதாவான வேளாண் விளைபொருள் சட்டமுன்வடிவு மட்டுமே ஆளுநரிடம் தற்போது உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்களான கே.சி.வீரமணி மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய அனுமதி கேட்டோம். கே.சி.வீரமணி மீது ஊழல் வழக்கு தொடர அனுமதி கோரப்பட்ட கோப்பு 15 மாதங்களாக ஆளுநரிடம் நிலுவையிலுள்ளது. சி.விஜயபாஸ்கர் மீது ஊழல் வழக்கு தொடர அனுமதி கோரப்பட்ட கோப்பு 7 மாதங்களாக ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன. அவற்றிற்கு அனுமதி தர வேண்டும் என கேட்டுக்கொண்டாம்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாளையொட்டி சிறையில் உள்ள கைதிகளை முன்கூட்டி விடுதலை என்ற அடிப்படையில் 119 கோப்புகள் முதற்கட்டமாக அனுப்பப்பட்டன. அதில் 70 கோப்புகளில் 68 பேரின் விடுதலைக்கு அனுமதி தந்து 2 பேரின் விடுதலை மட்டும் இரத்து என எங்களுக்கு அந்த கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 49 சட்டமுன்வடிவு கோப்புகள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன. நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, அந்தக் கோப்புகளை ஆளுநர் பரிசீலித்து ஒப்புதல் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளோம். டி.என்.பி.எஸ்.சியில் 11 உறுப்பினர்கள் இருக்க வேண்டிய இடத்தில் நீண்ட காலமாக 4 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். எனவே, அதற்கான விளக்கங்களையும் ஆளுநரிடம் எடுத்துரைத்து, ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். அதன்படி, இவற்றை எல்லாம் மனுவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் வழங்கியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக கிண்டி ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கை….
மாநில அரசு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஆளுநர் ஆர்.என்.இரவி அழைத்திருந்தார். அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநரை இராஜ் பவனில் நேற்று மாலை 5.30 மணியளவில் சந்தித்தார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ரகுபதி, ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் மற்றும் பொதுத்துறை செயலாளர் இருந்தனர். இந்தச் சந்திப்பு சுமுகமாக இருந்தது. ஆளுநரும், முதலமைச்சரும் பரஸ்பரம் மரியாதையை பரிமாறிக்கொண்டு, மாநிலம் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். தமிழ்நாட்டு மக்களின் நலனில் முழு ஈடுபாட்டைக் கொண்டிருப்பதாக ஆளுநர் மீண்டும் வலியுறுத்தினார். இந்திய அரசியலமைப்பின் வரம்புக்கு உட்பட்டு மாநில அரசுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் அவர் உறுதியளித்தார். மாநிலத்தின் நலனைக் கருத்தில் கொண்டு முதலமைச்சருடன் அவ்வப்போது சந்திப்புகள் நடைபெற வேண்டிய அவசியத்தையும் ஆளுநர் வலியுறுத்தினார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது….
ஆளுநருடனான சந்திப்பில், சட்டப்பேரவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த 10 முக்கிய மசோதாக்களை, அரசியல் சாசனத்தில் குறிப்பிடாத வகையில், தேவையின்றி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதைத் திரும்பப் பெற்று, அவற்றுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து,அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
பொதுவாக, அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும்.அப்போதுதான், மாநில மக்களின் நலனுக்கும், நிர்வாகத்துக்கும் பயனளிக்கும் என்று முதலமைச்சர், ஆளுநரிடம் எடுத்துரைத்தார்.
இதுதவிர, ஆளுநருக்கு முதலமைச்சர் அளித்த கடிதத்தில், அரசியல் சாசனத்தின்படி அமைக்கப்பட்டுள்ள உயர்அமைப்புகளின்மீது தான்உயர்ந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பதாகவும், மாநில நிர்வாகம் மற்றும் மக்களின் நலன் கருதியும், நிலுவை மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு விரைந்து தீர்வு காணும் நோக்குடனேயே தான் செயல்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகை மற்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகளில் உள்ள சுமுகம் நிஜத்தில் இல்லையாம். உச்சநீதிமன்றத்துக்குப் பதில் சொல்வதற்காகவே ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார் என்றும் தமிழ்நாடு அரசின் சட்டமுன்வடிவுகள் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் தரமாட்டார் என்றும் அரசியல்பார்வையாளர்கள் கூறுகின்றனர்.