ஈரோடு கிழக்கு தொகுதி – கமல் கட்சி நிலைப்பாடு அறிவிப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரசு, அதிமுகவின் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்த நிலையில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தின் இடைத்தேர்தலின் நிலைப்பாடு என்ன என்பது தெரியாமல் இருந்தது.

இதுதொடர்பாக அக்கட்சியன் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரசு வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது…..

காங்கிரசு வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிக்காக நானும் கட்சியினரும் இயன்ற உதவியைச் செய்வோம். ஆதரவு தெரிவித்திருப்பது ஒரு அவசர நிலை நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவை இப்போது சொல்ல முடியாது. கொள்கை வித்தியாசம் இருந்தாலும், தேச நலனுக்காக ஒரே மேடையில் அமர வேண்டும். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக அருணாச்சலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரசுக் கட்சிக்கு ஏகமனதாக தேர்தல் களத்தில் இறங்கி வேலை செய்வோம். மீண்டும் தேர்தல் களத்தில் இறங்கி இருக்கும் இளங்கோவனுக்குப் பாராட்டுகள் தெரிவிக்கிறோம். மிகப்பெரிய வெற்றி பெற்று மதவாத சக்திகளுக்குப் பாடம் புகட்டும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம். எனக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஆகும் ஆசையை விட மக்களுக்குப் பணி செய்வது தான் ஆசை

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response